உக்ரைனிலிருந்து தமிழகத்துக்கு பாதுகாப்பாக வந்துசேர்ந்த மருத்துவ மாணவர்களை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்வேலியில் நேற்று சந்தித்து பேசினார். ‘மருத்துவப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வந்துள்ள மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்று அப்போது முதல்வர் உறுதி அளித்தார்.
உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பை மேற்கொண்ட இந்திய மாணவ, மாணவியர் அங்கு நடைபெறும் போர் காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பி வருகிறார்கள். அவர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனது சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு மதுரைக்கு செல்லும் வழியில், திருநெல்வேலி அருகே ஜோதிபுரத்தில் உள்ள சாலையோர உணவு விடுதிக்கு முதல்வர் வந்தார். உக்ரைன் நாட்டிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் திருநெல்வேலியை சேர்ந்த நிவேதிதா(23), கோவில்பட்டி திவ்யபாரதி(22), ஹரிணி (20), நவநீத ராம்(21) ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் முதல்வர் ஸ்டாலின் அங்கு சந்தித்துப் பேசினார். அவர்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார்.
மாணவர்கள் நன்றி
தங்களை இக்கட்டான நிலையில் மிகுந்த பாதுகாப்புடன் மத்திய, மாநில அரசுகள் தனி கவனம் செலுத்தி டெல்லிக்கு அழைத்து வந்து, தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்கவைத்து, சொந்த ஊருக்கு வந்துசேர உதவி செய்ததற்காக முதல்வருக்கு மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.
தங்களது மருத்துவக் கல்வி படிப்பு மிகவும் கேள்விக்குறியாக இருப்பதாகவும், எனவே, தங்களது எதிர்காலம் கருதி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மாணவர்களின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று அப்போது முதல்வர் உறுதி தெரிவித்தார்.
இந்த சந்திப்பு குறித்து மாணவ, மாணவியர் கூறும்போது, “போரின் காரணமாக மருத்துவப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இந்தியாவுக்கு வந்த மாணவர்களின் எதிர்காலத்துக்காக நல்ல நடவடிக்கை எடுப்பேன்” என முதல்வர் உறுதி அளித்தார். முதல்வர் நேரில் தங்களை சந்தித்துபேசியது மிகுந்த மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்ததாக மாணவர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.