போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் பரிதவிக்கும் இந்திய மாணவ, மாணவிகள் அண்டை நாடுகள் வழியாக மீட்கப்பட்டு வருகின்றனர். இதுதொடர்பாக உக்ரைன் தலைநகர் கீவில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘கார்கிவ் நகரில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும் ஆன்லைனில் கூகுள் படிவத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். பாதுகாப்பாக இருங்கள். மன உறுதியோடு இருங்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மாணவரின் பெயர், இ-மெயில், செல்போன் எண், முகவரி, பாஸ்போர்ட் விவரங்கள், பாலினம், வயது ஆகிய விவரங்கள் கூகுள் படிவத்தில் கோரப்பட்டுள்ளன.
ஹங்கேரியில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘‘ஆபரேஷன் கங்கா திட்டத்தின் இறுதி கட்ட மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தூதரகத்தின் சார்பில் தங்க வைக்கப்பட்டுள்ளோர், சொந்த ஏற்பாட்டில் தங்கியுள்ளோர் உடனடியாக புடாபெஸ்டில் உள்ள ஹங்கேரி சிட்டி சென்டருக்கு ஞாயிற்றுக்கிழமை வர வேண்டும்’’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி உக்ரைனில் இருந்து ஹங்கேரி சென்றடைந்த இந்திய மாணவ, மாணவியர்கள் நேற்று தூதரக அலுவலர்களை சந்தித்து தங்களது விவரங்களை பதிவு செய்தனர்.