“அரசியல் கட்சித் தலைவர்கள், சில ஆங்கில திரைப்படங்களை பார்த்துவிட்டு, 3 மணி நேரத்திற்குள் இந்தியர்களை மீட்டு விட வேண்டும் என உணர்ச்சிவசப்பட்டு வசனம் பேசுவதை தவிர்க்க வேண்டும்” என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ’இந்திய மாணவர்களை தாக்கும் உக்ரைன் மக்கள்’ என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஒளிபரப்பிய செய்தி தொகுப்பைக் காண நேர்ந்தது. “உங்கள் நாடு ரஷ்யாவை ஆதரிக்கிறது. நாங்கள் ஏன் உங்களுக்கு உதவ வேண்டும்?” என்று கூறி உக்ரைன் காவல்துறையும், மக்களும் தாக்குகிறார்கள்” என்று உக்ரைனிலிருந்து ஒரு மாணவர் நேரலையில் பேசியது உண்மையாக இருந்தாலும், போர் பதற்றம் நிறைந்த இந்நேரத்தில் இதுபோன்ற ஒளிபரப்பை செய்வது, எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்று சிந்திக்க வேண்டும்.
உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் எந்த நாட்டிற்கும் ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தையின் மூலமே தீர்வு காண வேண்டும் என்றும், போர் தீர்வு அல்ல என்பதையும் இந்தியா தொடர்ந்து கூறிவருகிறது. பல அரசியல் அமைப்புகள், விமர்சகர்கள் மற்றும் சில ஊடகவியலாளர்கள், உக்ரைன் விவகாரத்தில், இந்தியா யார் பக்கம் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று சிறுபிள்ளைத்தனமாக பேசுகிறார்கள்.
உக்ரைனில் உள்ள நமது மாணவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்று கருத்தும் இல்லை என்கிற அதே நேரத்தில், உக்ரைனை விட பன்மடங்கு அதிக அளவில் ரஷ்யாவில் நமது மாணவர்கள் உள்ளனர் என்பதை உணராமல், நாம் ரஷ்யா குறித்து தெரிவிக்கும் ஒரு சிறிய கருத்து கூட அங்கிருக்கும் இந்தியர்களுக்கு எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் சிந்திக்காமல் இந்தியா – ரஷ்யா மற்றும் இந்தியா – உக்ரைன் இடையேயான வர்த்தக உறவுகள் குறித்தெல்லாம் சிந்திக்காமல் அர்த்தமில்லாமல் பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அதேபோல் இந்திய அரசு எப்படி செயல்பட வேண்டும், இந்திய தூதரகம் எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்றெல்லாம் விமர்சனம் செய்வது அவர்களின் அறியாமையை மட்டுமல்ல, மலிவான அரசியல் உள்நோக்கத்தையும் வெளிப்படுத்துகிறது. போர் நடைபெறும் சூழலில், அந்த நாட்டிலுள்ள நிலைமையை உணர்ந்து அதற்கேற்றாற் போல் வியூகம் வகுத்து சாமர்த்தியமாக நம் நாட்டு மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி தாயகம் திரும்புவதை நம் தூதரக அதிகாரிகள் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நடவடிக்கை பாதுகாப்பாக, அதே நேரத்தில் ரகசியமாக நடைபெறும், நடைபெற வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் சிலர் உளறிக் கொண்டிருப்பது அவர்களின் வக்கிர அரசியல் எதிர்பார்ப்பை, உள்நோக்கத்தை அடையாளம் காட்டுகிறது.
நம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர், சில ஆங்கில திரைப்படங்களை பார்த்துவிட்டு, மூன்று மணி நேரத்திற்குள் இந்தியர்களை மீட்டு விட வேண்டும் என உணர்ச்சிவசப்பட்டு வசனம் பேசுவதை தவிர்க்க வேண்டும். 2009-ல் ஒன்றரை மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ஒரு போரையே நிறுத்தி விட்டதாக நினைத்து பெருமிதம் கொள்ளும் சில தமிழக அரசியல்வாதிகளின் விமர்சனங்கள், உக்ரைன் – ரஷ்யா போரையும் அதே பாணியில் நிறுத்தி விடலாம் என எண்ணுகிறார்களோ என்று நினைக்க தோன்றுகிறது.
நடப்பது பெரிய போர். முள்ளின் மேல் விழுந்த சேலையை மிக கவனமாக எடுப்பது போல், ஆபத்தான தருணத்தில் அமைதியான, ஆணித்தரமான, அழுத்தமான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இந்திய அரசு உள்ளது. அதை அரசியலாக்கி, சீர்குலைக்கும் வண்ணம் தேவையற்ற, பொறுப்பற்ற முறையில் அரசியல்வாதிகள் கருத்துகளை முன்வைப்பது அங்குள்ள நம் நாட்டு மாணவர்களின் துயரத்தை, இன்னல்களை மேலும் அதிகரிக்கும். ஊடகங்களும் இந்த விவகாரத்தில் சற்றே பொறுப்புணர்ந்து செயல்படுவது, ஏற்கெனவே கவலையில் உள்ள பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதை தவிர்க்கும்” என்று அவர் கூறியுள்ளார்.