அதிமுக உறுப்பினர்களின் உதவியோடு பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றினார் திமுக நகரச் செயலாளராான ராஜேந்திரன்.
33 வார்டுகளைக் கொண்ட பண்ருட்டி நகராட்சியில் 24 உறுப்பினர்கள் திமுகவும் அதிமுக 7, சுயேச்சைகள் 2 என வெற்றி பெற்றனர். இதையடுத்து தலைவர் வேட்பாளராக 2-வது வார்டில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர் அ.சிவாவை அறிவித்தது திமுக தலைமை. அதைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற மறைமுகத் தேர்தலின் போது சிவா மனுத்தாக்கல் செய்யும்போது, துணைத்தலைவர் வேட்பாளராக திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட 26-வது வார்டு உறுப்பினர் ராஜேந்திரனும் மனுத் தாக்கல் செய்தார்.
இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது, சிவா 16 வாக்குகளும், ராஜேந்திரன் 17 வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றார். இதன் மூலம் திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட அதிகாரபூர்வ வேட்பாளர் தோல்வியை தழுவினார்.
இதுகுறித்து திமுகவினரிடம் விசாரித்தபோது, திமுகவால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சிவாவுக்கு ஆதரவாக இருந்தவர்களில் 8 பேர்,அவருக்குப் போட்டியான ராஜேந்திரனுக்கு வாக்களித்திருப்பதோடு, அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இரு சுயேட்சைகள் உதவியோடு வெற்றி பெற்றுள்ளார். இதனால் பண்ருட்டி நகராட்சியில் திமுகவினரிடம் மட்டுமின்றி அதிமுகவினர் மத்தியிலும் பரபரப்பு நிலவி வருகிறது.