கங்கனா ரனாவத்துடன் பணியாற்றியது மிகப் பெரிய தவறு என்று இயக்குநர் ஹன்சல் மேத்தா கூறியுள்ளார்.
பாலிவுட் திரையுலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஹன்சல் மேத்தா. இவர் இயக்கத்தில் 2017-ல் வெளியான திரைப்படம் ‘சிம்ரன்’. இந்தப் படத்தில் கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது குறித்து ஹன்சால் மேஷபிள் இந்தியா என்ற பத்திரிகையில் ஒரு பேட்டியளித்துள்ளார்.
அப்பேட்டியில் ஹன்சால் கூறியது: “சிம்ரன் என்ற கதாபாத்திரம், சந்தீப் கவுர் என்ற பெண்ணைத் தழுவி எழுதப்பட்டது. அந்தப் பெண் சூதாட்டத்தில் தன் பணத்தை இழந்துவிட்டு வங்கிக் கொள்ளையில் ஈடுபடத் தொடங்கியவராவார். அவரைப் போலவே நாங்கள் கங்கனாவின் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தோம். ஆனால் கங்கனா தான் எது காட்சியாக வேண்டும் என்று விரும்பினாரோ அதையே எங்களைப் படம்பிடிக்க வைத்தார். அவர் திறமையான நடிகர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் அந்தத் திறமைக்கு ஒரு வரையறை வைத்திருக்கிறார்.
அவர் நடிக்கும் படங்கள் அவரைப் பற்றிய படங்களாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். நீங்கள் என்னவாக இருக்க விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்கள் எடுத்துக் கொள்ளும் கதாபாத்திரத்தில் புகுத்தக் கூடாது. அதைத்தான் கங்கனா செய்வார்.
‘தக்கத்’ படத்தில் ‘ஷீ இஸ் ஆன் ஃபயர்’ என்றொரு பாடல் உண்டு. அந்தப் பாடலில் அவர் தற்பெருமையைத் தான் கூறியிருப்பார். அது அவருடைய விருப்பம். அதை நான் விமர்சிக்கக்கூட விரும்பவில்லை. அவர் இன்றும் ஒரு சிறந்த நடிகர்தான். ஆனால் எனக்கும் அவருக்கு ஒத்துவரவில்லை. நான் அவருடன் பணிபுரிந்தது மிகப் பெரிய தவறு” என்று அந்தப் பேட்டியில் ஹன்சல் மேத்தா கூறியுள்ளார்.
ராஜ்குமார் நடிப்பில் ‘ஷாகித்’, ‘சிட்டிலைட்ஸ்’, மனோஜ் பாஜ்பாயி நடிப்பில் ‘அலிகார்’ ஆகிய படங்களை ஹன்சல் மேத்தா இயக்கியுள்ளார்.
நெட்ஃபிளிக்ஸில் ‘பிஹைண்ட் தி பார்ஸ் இன் பைகுல்லா’ (Behind The Bars In Byculla: My Days in Prison) என்ற வெப் சீரிஸை எடுத்துள்ளார். ஜாக்ருதி பதக் என்ற கிரைம் நிருபரின் பயணத்தைத் தழுவியது இந்தக் கதை