கட்டுரைகள்
தகைசால் தமிழர் “தோழர்” நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை வரலாறு! R.Nalla Kannu History.
தகைசால் தமிழர் “தோழர்” இரா. நல்லகண்ணு அவர்களின் வாழ்க்கை வரலாறு!
- இரா. நல்லகண்ணு சுமார் 25 ஆண்டுகள் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். 13 ஆண்டுகாலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகவும் இருந்துள்ளார். தப்போது மத்திய கமிட்டி உறுப்பினர், தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவராக இருக்கிறார்.
- திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். நல்லகண்ணு 18 ஆவது வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டவர்.
- ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இரண்டாயிரம் மூட்டை நெல் வைத்திருப்பதைக் கண்டுபிடித்து ஜனசக்தி பத்திரிகையில் எழுதினார். அதைப் படித்த கலெக்டர், உடனடியாக நடவடிக்கை எடுத்து அத்தனை மூட்டைகளையும் பறிமுதல் செய்தார். இவருடைய முதல் நடவடிக்கை இதுவாகும். இனிமேல் மக்களுக்காக முழு நேரமும் உழைப்பது என்று முடிவெடுத்தார். அப்பாவிடம் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.
- தொடக்கத்தில் நல்லகண்ணு படித்த பள்ளிக்கூடத்தில் பிரிட்டிஷ் அரசுக்கு உலகப்போரில் ஆதரவு திரட்டும் வகையில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அப்போது நல்லகண்ணு சக மாணவர்களுடன் இணைந்து நாடகத்தை நிறுத்து என முழங்கினார். பிரிட்டிஷ் காவல்துறை பாய்ந்தது ஆசிரியர்களும் பாய்ந்தனர். கடுமையான தாக்குதல் அசரவில்லை நல்லகண்ணு. அடுத்த நாள் அதே பள்ளியில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
- பள்ளிப்படிப்பை முடித்து திருநெல்வேலி இந்து கல்லூரியில் சேர்ந்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற நல்லகண்ணு கல்லூரிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் விடுதலை இயக்கத்தின் பின்னால் சென்றாலும், காந்தியை விட அதிகம் நேசித்தார் நல்லகண்ணு. நேருவின் பொதுவுடமை பேச்சுக்கள் அவரை ஈர்த்தன பின்னர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் அதிர்ச்சியடைந்த நல்லகண்ணு 1943 ஆம் ஆண்டில் அரவணைத்துக் கொண்டது கம்யூனிஸ்ட் இயக்கம்.
- கம்யூனிசத்தின் கரங்களை இப்போது வரை விடாமல் பிடித்து பயணிக்கிறார். சுதந்திரம் அடைந்த இந்தியாவில் 1948ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது, இதையடுத்து நாடு முழுவதும் அந்த கட்சியின் தலைவர்கள் நிர்வாகிகள் வேட்டையாடப்பட்டனர். ஏராளமானோர் தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றனர், அடையாளங்களை மறைத்துக் கொண்டு நாள்தோறும் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று காவல்துறைக்கு தெரியாமல் கட்சியை வளர்த்து எடுக்கும் பணி நடைபெற்றது.
- இப்படியான தலைமறைவு வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்தார். 1949ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி நெல்லை மாவட்டத்தின் புலியூர்குறிச்சி என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கட்சிக்காரர் ஒருவரின் வீட்டில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் நல்லகண்ணு. இதனை மோப்பம் பிடித்த காவல்துறை அந்த வீட்டுக்குள் நுழைந்தது.. நல்லகண்ணு சுற்றிப் வளைக்கப்பட்டார், கேள்விகளால் துளைத்து எடுக்கப்பட்ட காவல்துறை எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் தெரியாது என்பது மட்டுமே நல்லகண்ணுவின் பதிலாக இருந்தது.
- ஆத்திரத்துக்கு சென்ற காவல்துறை அடித்து நொறுக்க, காவல் ஆய்வாளர் தனது பூட்ஸ் கால்களால் நல்லகண்ணுவின் கால்களின் மீது ஏறி நின்றார். வலியால் துடித்தார் தவிர வாய்திறக்கவில்லை! அதிகாரத்தின் குருதி கசியும் கோரப்பற்கள் நரகத்தின் கதவுகள் மெல்லத்திறந்தது உதடுகளின் இடையே சிகரெட்டை நிறுத்த பற்றவைத்தார் காவல் ஆய்வாளர், குனிந்தார் சிகரெட்டின் நெருப்பைக் கொண்டு நல்லகண்ணு பின் மீசையை போக்கினார்.
- கன்னத்தில் இருந்த மருவை மறைப்பதற்காக அப்போதெல்லாம் சற்றே பெரிய மீசை வைத்து இருப்பார் நல்லகண்ணு. சிகரெட் நெருப்பு மீசையை கருகிய பின்பும், வெறி குறையாமல் நல்லகண்ணுவின் சதையையும் ருசி பார்த்தது. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டாரே தவிர அவர் வாய் திறக்கவில்லை. அதிகாரத்தின் உரியதாக இருந்தது உழைப்பாளிகளின் நலனுக்காக தனது வாழ்வை அந்தத் தலைவனின் உறுதி! இந்த நிகழ்வை தோழர் நல்லகண்ணு தனது வாழ்நாள் முழுவதும் மீசையைத் இழப்பதற்கு காரணமாக அமைந்தது.
- வீரத்தின் அடையாளம் என்பது மீசை அல்லது இலட்சியத்தின் மீது உள்ள தீராக் காதல் என்பதற்கு இன்னும் சாட்சியாக நிற்கிறார் நல்லக்கண்ணு. கைது செய்யப்பட்ட நல்லகண்ணு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறித்து நினைவுகூறும் நல்லகண்ணு, ஆயுள் தண்டனை என்ன? மரண தண்டனை கொடுத்தாலும் கொடுத்ததுதான் சமூகப் போராட்டதிற்கு துணிந்தவன் இதற்கெல்லாம் அசந்தால் முடியுமா என்கிறார்.
- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடை விதிக்கப்பட்டபோது, ஆட்சி பொருப்பில் இருந்த ராஜாஜி நல்லகண்ணு தவிர மற்ற அனைவரையும் விடுவித்தார். நல்லக்கண்ணு கைது செய்யப்பட்டபோது அவர் வெடிகுண்டுகள் வைத்திருந்ததால் தண்டனையை குறைக்க அவர் மறுத்துவிட்டார். இதனால் 1956ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார்.
- 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி நல்லகண்ணு மனைவி ரஞ்சிதம் அம்மாள் தனது 82வது வயதில் மறைந்தார் உண்மையில் நல்லகண்ணு தன் வாழ்க்கையில் சந்தித்த பேரிழப்பு அது.
- வாழ்நாள் முழுவதையும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் அதற்காகவே அர்ப்பணித்துக்கொண்டார் நல்லகண்ணு. ஆலய நுழைவுப் போராட்டம், பொது வீதிகளில் செருப்பணிந்து நடக்கும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம் என அந்த வாழ்வு மகத்தான இன்றைக்கும் ஏதோ ஒரு ஊரில் உரிமைக்காகப் போராடும் மக்களோடு நின்று அவர்களுக்காக முழங்கிக் கொண்டு இருப்பார்.
- 1990கள் தென்மாவட்டங்களில் சாதிய கலவரங்கள் தீப்பற்றி எரிந்த காலகட்டம். ஒரு சாதியைச் சேர்ந்தவர் கொல்லப்பட்டால் எதிர் சாதியில் ஒருவர் கொல்லப்படுவார். தொடர் கொலைகள் அங்கு அப்போது சர்வசாதாரணமாய் நிகழ்த்தப்பட்டன! நல்லகண்ணுவின் மாமனாரும், சாதி ஒழிப்பு போராளி அன்னசாமியும் அப்படித்தான் ஒரு அறிவால் தின்று தீர்த்தது ஆனால் நல்லகண்ணு அப்போது மிக நிதானமாக செயல்பட்டார் அன்னசாமியின் கொலையை முன் வைத்து எதிர்த்தரப்பில் ஒரு கொலை விழுந்துவிடக்கூடாது என்பதில் உறுதியோடு இருந்தார்.
- உள்ளூர்க்காரர்கள் அன்னசாமியை கொலை செய்து இருக்கவே மாட்டார்கள் வேறு ஏதோ காரணம் இருக்கக்கூடும் என குரலை உயர்த்தினார் நல்லகண்ணு. அந்த குரல் அமைதிக்கு வழி வகுத்தது! மாமனாரின் மறைவுக்காக அரசு வழங்கிய நிதி உதவியை கலவரத்தில் ஈடுபட்ட இரு சாதிகளைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கினார் நல்லகண்ணு.
- இயக்கமே வாழ்வாக கொண்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் வரலாற்றை சொல்லும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளில் ஏற்பட்ட பிளவை சொல்லாமல் கடக்க முடியாது. 1960களில் அதிகரிக்க தொடங்கிய கருத்து மோதல்கள். கட்சி இரண்டாக பிளவுபட்டு நின்றது. 1964-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி உருவானது.
- கட்சி ஒன்றுபட்டு இருக்கவேண்டும் என உளப்பூர்வமாக விரும்பிய தலைவர்களில் முக்கியமானவர் நல்லகண்ணு. இந்த பிரிவை நெஞ்சைப் பிளந்த பிளவு என வர்ணிக்கிறார் நல்லகண்ணு.
- இடதுசாரி இயக்கங்கள் ஒன்று சேர வேண்டும் என தான் உளமாற விரும்புவதாக கூறும் நல்லகண்ணு அது இந்தியாவின் தேவை என்கிறார். நல்லகண்ணுவின் 80-வது பிறந்த நாளையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தனர். தனக்கு எவ்வளவு பணம் இதை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன் என கேட்ட நல்லகண்ணு அந்த தொகையை முழுமையாக திருப்பி அளித்தார்.
- மக்களுக்காக உண்மையாக உழைப்பவர்களை மாற்று இயக்கங்களில் இருப்பவர்கள் ரசிப்பார்கள் நேசிப்பார்கள். தமிழ் சான்றோர் பேரவை தமிழிசை மன்றம் ஆகிய அமைப்புகளை நிறுவியவரும் நந்தன் பத்திரிக்கை ஆசிரியருமான நா. அருணாச்சலம் எனப்படும் ஆனாரூனா அவர்கள் அப்படித்தான் நல்லகண்ணு நேசித்தார். வயது முதிர்ந்த நிலையிலும் மக்களுக்காக நல்லகண்ணு பேருந்துகளில் பயணிப்பதை கண்ட அவர் ஒரு கார் பரிசு அளிக்க விரும்பினார்.
- உடனடியாக ஒரு சிறப்பு நிற தவேரா கார் வாங்கினார் இது தொடர்பாக நல்லகண்ணுவிடம் தெரிவித்தபோது கார் எதற்கு எனக்கு என மறுத்துவிட்டார். இந்த தகவலை அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியான மகேந்திரனிடம் தெரிவித்துள்ளார் ஆனாரூனா கட்சியின் செயற்குழுவில் தெரிவிக்கிறேன் கட்சி அனுமதித்தால் பார்க்கலாம் என்றார் மகேந்திரன் ஆனால் காரை பெற்றுக்கொள்ள கட்சி அனுமதிக்கவில்லை.
- இந்த நிலையில் சென்னை காமராஜர் அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நல்லகண்ணுவின் 80-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த தா.பாண்டியன் பேசிக்கொண்டிருந்தபோது விழா மேடையில் இருந்த கருணாநிதியிடம் ஆனாரூனா கார் குறித்த தகவலை தெரிவித்துள்ளார். தற்போது கார் கொடுப்பதாக அறிவித்தார் அவர்களால் மறுக்க முடியாது என்று கணித்திருக்கிறார் அவர். கார் கொடுத்தால் போதுமா? பெட்ரோல்? ஓட்டுனர்? சம்பளத்தை யார் தருவார்கள் என கேட்டுள்ளார் கருணாநிதி, அதையும் தானே தருகிறேன் என ஆனாரூனா தெரிவித்ததும் கார் வழங்குவதை அறிவிக்க ஒப்புக் கொண்டார் கருணாநிதி.
- தா.பாண்டியன் பேசி முடித்ததும் ஆனாரூனா அவர்கள் நல்லகண்ணுக்கு கார் பரிசளிக்கும் தகவல் அறிவித்த கருணாநிதி, காரின் சாவியை தா.பாண்டியன் இடம் ஒப்படைத்தார். மறுநாளே செய்தி வெளியானது பரிசளிக்கப்பட்ட காரை நல்லகண்ணு கட்சிக்கு ஒப்படைத்துவிட்டார் என்று.
- தமிழக அரசு அம்பேத்கர் விருது அளித்த போது பரிசாக கிடைத்த ஒரு லட்சம் ரூபாயில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் வழங்கினார் நல்லகண்ணு.
- சுற்றுச்சூழலில் அதிக அக்கரை கொண்டவர் நல்லகண்ணு 1985 ஆம் ஆண்டு குற்றாலம் அருவிக்கு அருகே Race Course அமைக்க நடந்த முயற்சியை தாமரை பத்திரிகையில் கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தியவர் அவர்.
- 2010ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தானே ஆஜராகி வாதாடி நடைபெற்றார். பாரதியார் பாரதிதாசன் ஆகியோர் மீது தீவிர பற்று கொண்டவர். பயணங்களின்போது பாரதி மற்றும் பாரதிதாசன் நூல்கள் எப்போதும் அவருடனேயே பயணிக்கும்.
- ஒரு கம்யூனிஸ்ட் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்ற கேள்வி ஒருமுறை உலகப் புரட்சியாளர் சேகுவேராவின் எழுப்பப்பட்டது அதற்கு எளிய சுமையும் வலிய கால்களும் கொண்டவனாக இருக்கவேண்டும் என்றார் சேகுவேரா.. சேகுவேராவின் அந்த வார்த்தைகளுக்கு நிகழ்கால சாட்சியமாக நம்மோடு நடை போடுகிறார்.
- இசை ரசிகரான நல்ல கண்ணுக்கு நாதஸ்வர இசை மிகவும் பிடிக்கும். நலந்தானா நலந்தானா உடலும் உள்ளமும் நலந்தானா பாடல் அவரது விருப்பமான பாடல். இரண்டு பெண் குழந்தைகள் முதல் மகள் காசி பாரதி கோவில்பட்டியில் இரண்டாவது மகள் ஆண்டாள் வேலூரிலும் வசிக்கிறார்கள். தோழர் நல்லகண்ணு தான் பெரும்பாலானோருக்குத் தெரியும் ஆனால் பேரன் பேத்திகள் உடனான சந்திப்பின் போது மட்டுமே தாத்தா நல்லகண்ணு என்ற மகத்தான ஆளுமைக்குள் உள்ள குழந்தைத்தனம் வெளிப்படும்.
- தமிழ் இலக்கியத்தின் மீது அளவில்லா அன்பு கொண்டவர் நல்லகண்ணு. சங்க இலக்கியம் முதல் சமகால கவிதைகள் வரை அவருக்கு அத்துப்படி. ஆங்கிலப் புலமை, தேர்ந்த பேச்சாற்றல் படைப்புத் திறன் ஆகியவை நல்லகண்ணுவின் சிறப்பு அம்சங்கள்.
- டாக்டர் அம்பேத்கர் ஒளிவீசும் சுடர், வெண்மணி தியாகிகள் கவிதைத்தொகுப்பு, டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்குப் பார்வை, சென்னையில் அண்மையில் நடந்து முடிந்த 41வது புத்தகக் கண்காட்சிகள் தோழர் நல்லகண்ணு வாங்கிய புத்தகங்களில் நொபுரு கராஷிமா எழுதிய தமிழகத்தில் சாதி உருவாக்கமும் சமூக மாற்றமும். சிவசுப்பிரமணியம் எழுதிய பிராமண போஜனமும் சட்டி சோறும் ஆகியவை முக்கியமானவை இவை ஏன் முக்கியமானவை என்றால் இந்தப் புத்தகங்களின் தலைப்புகளே தோழர் நல்லகண்ணுவின் அரசியலை எளிதில் விளக்க கூடியவைகளாகும்.
- நல்லகண்ணு ஒரு நாத்திகவாதி அதே நேரத்தில் மற்றவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளித்து திருமணங்கள் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் எங்கு நடைபெற்றாலும் சங்கடப்படாமல் நேரில் சென்று வாழ்த்தும் பண்பாளர் அவர்.
- 70 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் நல்லகண்ணு மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார். 1967 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் அம்பாசமுத்திரம் சட்டப் பேரவைத் தொகுதியிலும். 1999ஆம் ஆண்டு மக்களவைத் தொகுதியிலும் இது நிகழ்ந்தது.. தேர்தல் அங்கீகரிக்காத போதும் அவர் சார்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை அவருக்கு அளித்து கவுரவித்தது.
- ஒருமுறை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் பின்னிரவில் காரில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து நிறுத்தம் ஒன்றில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த முதியவரை எங்கோ பார்த்ததுபோல இருந்துள்ளது உடனடியாக காரை விட்டு இறங்கி சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது படுத்திருந்தது தோழர் நல்லகண்ணு என்பது! அவரை எழுப்பிய பீட்டர் அல்போன்ஸ் என்ன இங்கு இருக்கிறீர்கள் என்று கேட்டபோது நேற்று இரவு ஒரு பொதுக்கூட்டம் முடித்து விட்டு வந்தேன். நாளைக்கு ஒரு மாநாட்டுக்காக போகிறேன். கடைசி பஸ்சை விட்டு விட்டேன் என்றார்! சரி வாங்க நான் கார்ல கொண்டு போய் விடுகிறேன் என்று பீட்டர் அல்போன்ஸ் கூறியதற்கு இல்ல நான் மொத பஸ்ஸைப் பிடிச்சு போய் விடுறன் என்று கூறி மறுத்துவிட்டார்.
- நல்லகண்ணு பொதுவாகவே கோபப்படமாட்டார் அதே நேரத்தில் கட்சிகளைப் பற்றி யாராவது தவறாகப் பேசினால் கடும் கோபம் வந்துவிடும். ஒருமுறை திருப்பத்தூர் தொகுதி இடைத் தேர்தலின்போது தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றினார் நல்லகண்ணு அப்போது எதிர்க்கட்சிகளின் பரப்புரை கார் ஒன்று கம்யூனிஸ்டுகள் குறித்து தரக்குறைவான விமர்சனத்தை முன்வைத்து இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் இளைஞர்களை திரட்டிக்கொண்டு களத்தில் இறங்கினார் நல்லகண்ணு.
- பரப்புரையில் ஈடுபட்டவர்கள் மன்னிப்பு கோரிய பிறகு அந்த பிரச்சனையை கைவிட்டார். அவர் நீண்ட அரசியல் வாழ்க்கைக்கு சொந்தக்கார்ரான நல்லகண்ணு தனது பிரியத்திற்குரிய தலைவராக எப்போதும் கருதுவது ஜீவானந்தத்தை, ஜீவா மறைந்தபோது நெல்லையில் இருந்தார் நல்லகண்ணு. அந்த காலகட்டத்தில் நெல்லையில் இருந்து உடனடியாக சென்னை வந்து விட முடியாது எனினும் தோழர்களுடன் இணைந்து சென்னைக்குப் பயணமானார்.
- உயிரற்று கிடத்தப்பட்ட ஜீவாவின் உடலைக் கண்டு கதறி அழுதார். அன்று இரவு கட்சியின் பத்திரிகையான ஜனசக்தி அலுவலகத்தில் நல்லகண்ணு தங்கினார். உயிரினும் மேலாக நேசித்த ஒரு தலைவன் மறைந்துபோன இரவில் எப்படி உறக்கம் வரும்? இருள் சூழ்ந்த அந்த நேரத்தில் தனக்குள் ஒளி பாய்ச்சிய தலைவன் குறித்த பாடல் ஒன்றை எழுதினார்.
“குற்றால அருவியிலே.. ஜீவா குளித்து நிற்கையிலே… வற்றாத தமிழ் கடலும் வந்து நிற்கும் என்பேன், இப்போது தமிழ் கடலும் வறண்ட விறகாக பற்றி எரிய கண்டேன்.. பார்த்த மனம் பதறுதய்யா…” என மனமுருகி எழுதியிருந்தார்.
- இளம் வயதில் இருந்து பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று தனது 80 ஆண்டு கால பொது வாழ்வில் 7 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து தன் வாழ்வையே ஏழை, எளியோருக்காகவும், விளிம்பு நிலை மக்களுக்காகவும் அர்ப்பணித்து தகைசால் என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கி வருவதையொட்டி அவருக்கு 2022 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தோழர்.நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருதுடன், ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி சிறப்பித்தார். அதை பெற்றுக்கொண்ட ஆர்.நல்லகண்ணு உடனடியாக ரூ.10 லட்சம் காசோலை மற்றும் தனது சொந்த நிதி ரூ. 5 ஆயிரத்துடன் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார் தோழர்.நல்லகண்ணு.
- கொள்கைப் பற்றும்! லட்சியத்தின் மீதான உறுதியும்! மக்கள் விடுதலையின் மீதான காதலுமே ஆர்.எம்.கே என தோழர்களால் அன்போடு அழைக்கப்படும் நல்லகண்ணுவின் அடையாளங்கள்.
- மக்கள் பிரச்சனைகளுக்காக எந்த சமரசத்தையும் ஏற்காத அந்தப் போராளி சமகால தலைவர்களில் சமரசமற்ற முன்மாதிரி. ஒருமுறை எழுத்தாளர் பொன்னீலன் தமிழகத்தின் அடித்தட்டு மக்களின் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை எழுதும் எவராலும் தோழர் நல்லகண்ணுவின் பெயரை விட்டுவிட்டு எழுதிவிட முடியாது என்றார்.
- போராளிகளைப் பொறுத்தவரை தேர்தல் என்பது ஒரு போராட்டமே தேர்தலில் வெற்றிபெற்ற பெரும்பாலான அரசியல்வாதிகள் அடுத்த தேர்தல் அறிவிக்கப்படும் வரை கூட வெற்றி பெறச் செய்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வது இல்லை. அவர்களால் வாக்குகளை வேண்டுமானால் வெல்ல முடியுமே தவிர மக்கள் மனங்களை வெல்ல முடியாது ஆனால் தோழர்.நல்லகண்ணு போன்ற அற்புத மனிதர்கள் மக்கள் மனங்களை ஆள்கிறார்கள் நேற்றும்! இன்றும்! என்றும் சுருக்கமாக சொன்னால் வரலாறு நெடுகிலும்…!!