சமீபத்தில் நாடு முழுவதும் உற்று நோக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா மாநிலம் மாறியது,காரணம் அங்கு ஆட்சியில் இருந்த உத்தவ் தாக்கரே அரசை கவிழ்க்க நடந்த சித்து விளையாட்டுகள்.உத்தவ் தாக்கரே அரசில் நகர்ப்புற துறை அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சுமார் 40 சிவசேனா எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அரசிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.அதன் பிறகு அவர்கள் பா.ஜ.க ஆளும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்திற்கு சென்றனர்.பின்னர் அங்கிருந்து பா.ஜ.க ஆளும் அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றனர்.இதற்கிடையில் பல்வேறு சமரச பேச்சு வார்த்தைகளை உத்தவ் தாக்கரே ஆதரவாளர்கள் ஏக்நாத் ஷிண்டே குழுவினரிடம் மேற்கொண்டனர்.அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தது.பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததால் உத்தவ் தாக்கரே பதவி விலகினார்.புதிய முதல்வராக ஏக்நாத் ஷிண்டே தேர்ந்தெடுக்கபட்டார்.
கடந்த எட்டு ஆண்டுகளில் இதுவரை பத்து மாநில அரசுகள் கவிழ்க்கப்பட்டது.அது எந்தெந்த மாநிலங்கள் என்பதை நாம் பார்க்கலாம்.
- 2016 – அருணாச்சல பிரதேசம்
கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற அருணாச்சல சட்டமன்றத் தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ் கட்சி. பா.ஜ.க வெறும் 11 தொகுதிகளை மட்டுமே பிடித்திருந்தது. அந்த நிலையில், காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராக அதே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கலிகோ புல் தலைமையில் 21 காங். எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதைத் தொடர்ந்து, 2015 டிசம்பரில் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுடன் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களும் கைகோத்துக்கொண்டு காங்கிரஸ் முதல்வர் நபம் துகிக்கு எதிராகப் போட்டி சட்டசபைக் கூட்டத்தை நடத்தினர். அதில், அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்து அரசு கவிழ்ந்ததாக அறிவித்தார். மேலும், புதிய முதல்வராக கலிகோ புல்லையும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், இதை ஏற்காத காங்கிரஸ் முதல்வர் நபம் துகி பதவி விலக மறுத்தார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற மத்திய பா.ஜ.க அரசின் பரிந்துரையை ஏற்ற அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் நபம் துகி அரசைக் கவிழ்த்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது. கலிகோ புல் தலைமையில் பிரிந்த 21 காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு தனது தார்மிக ஆதரவை வழங்கிய பா.ஜ.க தனது 11 பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் 2016, பிப்ரவரி 19-ல் கலிகோ புல்லை முதல்வராக்கியது.
அதையடுத்து ஆட்சி கவிழ்க்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நபம் துகி. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் ராஜ்கோவாவைக் கண்டித்ததுடன், ஆட்சிக் கவிழ்ப்பு செல்லாது என்றும், 2015 டிசம்பர் 15-ல் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2016 ஜூலை 13-ம் தேதி நபம் துகி மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆனால், அடுத்த சில நாள்களிலே அவர் பதவி விலக, காங்கிரஸ் சார்பில் பீமா காண்டு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம், முதல்வர் பதவியை இழந்த மன வருத்தத்தில் இருந்த கலிகோ புல், கடிதம் எழுதிவைத்துவிட்டு அரசு இல்லத்திலேயே தற்கொலை செய்துகொண்டார்.
காங்கிரஸ் சார்பில் புதிதாக முதல்வரான பீமா காண்டு, பா.ஜ.க ஆலோசனைக்கேற்ப, 40 எம்.எல்.ஏ-க்களுடன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அருணாச்சல் மக்கள் கட்சியில் சேர்ந்தார். பின்னர், பா.ஜ.க-வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தவர், அருணாச்சல் மக்கள் கட்சியிலிருந்து விலகி, தனது ஆதரவு எம்.எல்.ஏ-க்களுடன் முழுவதுமாக பா.ஜ.கவில் இணைந்தார்.
- 2017-மணிப்பூர்:
2017-ம் ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 28 இடங்களைக் கைப்பற்றியது. பா.ஜ.க 21 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. பெரும்பான்மை இடங்களில் வென்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு தொகுதிகளில் வென்றிருந்த நாகா மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி, ஒரு தொகுதியில் வென்றிருந்த லோக் ஜனசக்தி மற்றும் சுயேச்சையின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. மேலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ ஷியாம்குமார் சிங்கை தன் பக்கம் இழுத்தது. பா.ஜ.க சார்பில் பிரேன் சிங் முதல்வரானார்.
3.2017-கோவா:
2017-ம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 இடங்களில் காங்கிரஸ் வென்றது. பா.ஜ.க 13 இடங்களிலேயே வென்றிருந்தது. பெரும்பான்மை இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது.திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியிலிருந்த 12 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் கொண்டுவந்தது. மேலும், சில சிறு கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களையும் இழுத்து, யாரும் எதிர்பாராதவிதமாக கோவாவில் தனது ஆட்சியை அமைத்தது பா.ஜ.க.மேலும், காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்தவர்களில் மூன்று எம்.எல்.ஏ-க்களுக்கு அமைச்சர் பதவியையும் வழங்கியது.
- 2017-பீகார்:
2015-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில், 80 இடங்களில் வென்ற லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், 71 இடங்களில் வென்ற நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால், இரண்டே ஆண்டுகளில் 2017-ம் ஆண்டு இந்தக் கூட்டணி உடைந்தது. நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து 53 இடங்களில் வென்றிருந்த பா.ஜ.க., நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். பா.ஜ.க-வின் சுஷில் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.
5.2018-மேகாலயா:
2018-ம் ஆண்டு நடைபெற்ற மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றிபெற்றது காங்கிரஸ். அங்குள்ள மாநில கட்சியான தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. பா.ஜ.க வெறும் 2 தொகுதியில் மட்டுமே வெற்றிபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றிருந்தாலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது.
6.2019-சிக்கிம்:
2019-ம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் மாநில சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றெடுத்தன. அதேசமயம், பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து, சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர்.
- 2019 – கர்நாடகா:
2018-ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 222 தொகுதிகளில் 104 இடங்களில் வெற்றிபெற்றது பா.ஜ.க.,ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பே பதவி விலகினார் முதல்வர் எடியூரப்பா. அதன் பிறகு, 78 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. ம.ஜ.த தலைவர் குமாரசாமி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓராண்டிலேயே காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி அரசைக் கவிழ்த்தது பா.ஜ.க.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏ-க்களையும் ம.ஜ.த கட்சியைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்து தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அதையடுத்து, 16 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்.தற்போது எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து விலகி பசவராஜ் பொம்மை முதல்வராக உள்ளார்.
8.2020-மத்திய பிரதேசம்:
2018-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேசம் சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் அமோக வெற்றிபெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வெற்றிபெற்றது. அந்த நிலையில் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதல்வரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் வசம் இழுத்தது.
பா.ஜ.க-வின் ஆலோசனைப்படி ஆறு அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க சார்பில் சிவராஜ் சிங் சௌகான் மீண்டும் முதல்வரானார்.
9.2021-புதுச்சேரி
2016-ல் நடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. காங்கிரஸ் தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்தது. நாராயணசாமி முதல்வரானார். சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சி நீடித்த நிலையில், தேர்தலுக்கு சில மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் கவிழ்த்தது பா.ஜ.க.
10.2018-காஷ்மீர்:
கடந்த 2018-ம் ஆண்டு காஷ்மீர் மாநிலத்தின் சட்டமன்றத்தைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைத்தும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிவந்த 370 சட்டப்பிரிவை நீக்கி மாநிலத்தையே இரண்டு யூனியன் பிரதேசங்களாக பா.ஜ.க அரசு மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.தற்போது வரை அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதுவும் இல்லாமல் ஆளுநர் ஆட்சியே நடைபெறுகிறது.