கீழை நாடுகளை வென்ற தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன், இந்தியத் துணைக் கண்டம் பார்த்த மகத்தான பேரரசர்களில் ஒருவர். இந்திய துணைக் கண்டத்தின் பிற மன்னர்கள் நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தியவர்.
விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு தனக்கு இணை எவரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவர். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினார். இவர் ஆட்சி செய்த பகுதிகள் தென் இந்தியா பகுதிகள் ஆன தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளம், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளும், தென் கிழக்கு ஆசியா நாடுகள் அனைத்தும் இவர் ஆட்சி காலத்தில் இருந்தது.ராஜேந்திரச் சோழன் புதிய தலைநகரை நிர்ணயித்து தமிழர் வரலாற்றில் உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றவர்.
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இந்தியா இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் – மலேசியா), சுமத்ரா, கம்போடியா, இந்தோனேசியா, மியான்மர், வங்கதேசம் ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் தமிழ் மன்னன் ஆவார். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவர்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தார். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான, ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டது.
ராஜராஜ சோழன் கி.பி.1014-ம் ஆண்டு இறந்த பிறகு அவரது மகன் அரசராக பொறுப்பேற்றார். இவருடைய இயற்பெயர் மதுராந்தகன் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பெயர் குறித்து திருவேலங்காட்டு செப்பேடுகளில் உள்ளது. இவர் தனக்கு பரகேசரி என்னும் பட்டத்தை சூட்டி கொண்டார்.இவர் தனது மகன் ராஜாதிராஜனுக்கு தனது ஆட்சியின் ஏழாவது ஆண்டிலேயே இளவரச பட்டத்தை கொடுத்தார்.இதன் மூலம் அரச நிர்வாகம் குறித்து அனுபவம் கிடைக்கும் என்று நினைத்தார்.மேலும் இதன் மூலம் பதவி சண்டையும் உள்நாட்டு குழப்பம் தவிர்க்கப்படும் என்று நினைத்தார்.
இவருடைய மெய்கீர்த்தி இவரது ஆட்சியின் மூன்றாம் ஆண்டுகளிலிருந்து தான் தெரிய வருகிறது.மெய்கீர்த்தி என்பது அரசனின் வாழ்வில் நடக்க கூடிய முக்கிய நிகழ்வுகள் குறித்த ஆவணம் என்பதாக நாம் புரிந்து கொள்ளலாம்.பெருமளவில் ஐந்தாமாண்டு ஆட்சியில் தான் நமக்கு கிடைக்கின்றது.இவருடைய மெய்கீர்த்தி குறித்து சரிவர செப்பேடுகளில் குறிப்பிடப்படவில்லை.இவருடைய படையெடுப்புகள் முடிந்த பிறகு தான் பல விடயங்கள் திருவேலங்காட்டு செப்பேடுகளில் பதிவு செய்யப்படுகிறது.
இவருடைய மூன்றாமாண்டில் இடைதுறை நாட்டை கைப்பற்றினார் .இடைதுறை நாடு என்பது கிருஷ்ணா மற்றும் துங்கபத்திரா நதிகளுக்கு இடையே அமைந்துள்ள நாடு.அதன்பின் வனவாசியை கைப்பற்றினார். வனவாசி என்பது மைசூர் பகுதியில் உள்ள வடமேற்கு பகுதியாகும்.இது முற்காலத்தில் ஒரு நாடாக இருந்தது.இது குறித்து வனவாசி பன்னீராயிரம் என்னும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதன் பின் கொள்ளிபாக்கை என்னும் ஊரை கைப்பற்றினார்.இது தற்போதைய ஹைதராபாத்திற்கு வடகிழக்கில் நாற்பத்தைந்து மைல் தூரத்தில் உள்ள குல்பாக் என்னும் பகுதியில் அமைந்துள்ளது.இதன் பிறகு மண்ணைகடக்கம் நாட்டை வெற்றி கொண்டார்.இது சோழ பேரரசிற்கு இன்னல்கள் கொடுத்த ராஷ்டிர கூட அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியாகும்.இதன் மூலம் மேலை சாளுக்கியர்களின் ஆட்சிக்குட்பட்ட இடைதுறை நாடு,வனவாசி,கொள்ளிபாக்கை,மண்ணைகடக்கம் உள்ளிட்ட பகுதிகளை ராஜேந்திர சோழன் படையெடுத்து சென்று வெற்றி கொண்டார்.வெற்றி கொண்ட பகுதிகளான இவை அனைத்தும் இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கைப்பற்றிய பகுதிகள் என்றொரு கருது நிலவுகிறது.
மேலும் இராசராசன் ஆட்சிக் காலத்தில் மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயன் தோற்கடிக்கப்பட்டு சோழர் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. சத்தியாசிரயனுக்குப்பின் ஆட்சிக்கு வந்த (கிபி 1015) தந்தை இழந்த பகுதிகளை மீட்க முற்பட்டார். எனவே இராசேந்திரனின் மேலைச்சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்தார். சோழர் படையும் மேலைச் சாளுக்கிய படையும் முசங்கி என்ற இடத்தில் சந்தித்தன. முசங்கி என்கிற இடத்தில் சோழர் படைவென்றது. முசங்கி என்கிற இடம் தற்போதைய கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் உள்ள ஹர்ப்பனஹள்ளிஎன்னும் ஊரில் அமைந்துள்ளது. மேலைச்சாளுக்கிய நாட்டில் மீண்டும் சோழர் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று துங்கபத்திரை ஆறு சோழ நாட்டுக்கும் மேலைச்சாளுக்கிய நாட்டுக்கும் எல்லையாக நீடித்தது.
மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் ராஜசிம்மன் இராசேந்திரனிடம் தோற்றாலும் கீழை சாளுக்கிய விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தவில்லை. கீழை சாளுக்கிய நாட்டில் வாரிசுரிமை போராட்டம் நடந்ததை வாய்ப்பாகக் கொண்டு இரண்டாவது இராசசிம்மன் அதில் தலையிட்டார்.வெங்கி வேந்தன் விமலாதித்தன் இறந்தபின் இரண்டாம் விஜயாதித்தனுக்கும், இராஜராஜ நரேந்திரனுக்குமிடையே வாரிசுரிமை போட்டி ஏற்பட்டது. விமலாதித்தன் மகனான ராஜராஜ நரேந்திரன் சோழநாட்டு குந்தவைக்கு பிறந்தவன்.குந்தவை இராசேந்திரனின் சகோதரி எனவே அவர் தனது தங்கை மகனை ஆதரித்தார்.இரண்டாம் ராஜசிம்மன் இரண்டாம் விஜயாதித்யன் பக்கம் இருந்தார்.இப்போராட்டத்தில் இராசேந்திரனின் ராணுவ உதவியோடு ராஜராஜ நரேந்திரன் இரண்டாம் விஜயாதித்தனை தோற்கடித்து கீழைச் சாளுக்கிய நாட்டின் மன்னரானார். இரண்டாம் ராஜசிம்மன் கீழை சாளுக்கிய நாட்டை கைப்பட்ட மேற்கொண்ட மற்றுமொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது (கிபி 1035). இராசேந்திரனின் தொடர் போர்களால் இரண்டாம் ராஜசிம்மனையும் அவரை ஆதரித்த குறுநில மன்னர்களையும் தலைதூக்க விடாமல் செய்து கன்னட நாடு முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். முடிகொண்ட சோழன், ஜெயசிம்ம சாரபன், மன்னை கொண்ட சோழன், இரட்டபாடி கொண்ட சோழன், நிருப்பதிவாகரன் போன்ற விருதுப் பெயர்கள் அவரது வெற்றிகளுக்கான அங்கீகாரங்கள் ஆகும். சாளுக்கியப் போர்களில் விளைவாக இராசேந்திரன் இடம் ஏராளமான செல்வம் குவிந்தது.
இதனை அடுத்து அவர் ஈழ நாட்டை வென்றது மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.இப்போர் கி.பி.1017-ம் ஆண்டு நடைபெற்றது.இராசராசன் இலங்கையின் வடபகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வந்த போதிலும், பாண்டிய மன்னன் ராஜசிம்மன் இலங்கை மன்னனிடம்ஒப்படைத்த அரச சின்னங்களைப் கைப்பற்ற முடியவில்லை.மேலும் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் சோழனிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் முனைப்பாக இருந்தார். எனவே இரண்டு காரணங்களுக்காக இராசேந்திரன் இலங்கை மீது படையெடுத்தார்.இலங்கை முழுவதையும்கைப்பற்றிசோழ நாட்டுடன் இணைப்பது, பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்களை அடைவது.
மேற்கண்ட இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் பொருட்டு இராசேந்திரன் மூன்றாவது ஆட்சியாண்டில் 1017 ஆம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்தார். இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டார். தோற்கடிக்கப்பட்ட இலங்கை அரசன் கைது செய்யப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்கள் கைப்பற்றப்பட்டன. ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் கைப்பற்ற நினைத்த பாண்டிய மன்னனின் முடி சின்னம் ராஜேந்திரன் ஆட்சியில் தான் சோழர்களுக்கு கிட்டியது.இவற்றின் மூலம் இராசேந்திரன் இரண்டு நோக்கங்களும் நிறைவேறின.சிங்களவர் மகிந்தவின் மகன் தாசப்பா சோழர்களுக்கு எதிராக தன் தந்தை இழந்ததை மீட்க முயற்சி செய்தார்.ஆனாலும் இறுதியில் தோல்வியே மிஞ்சியது.ஐந்தாம் மகிந்தனை உடன்படிக்கைக்கு அழைப்பது போல் அழைத்து அவரை வர வைத்து கைது செய்தனர்.இது குறித்து மகாவம்சம் கூறுகிறது.பின்னர் இலங்கை அரசன் மகிந்தன் பன்னிரண்டு ஆண்டுகள் சிறையிலிருந்து அங்கேயே மரணித்தார்.
ராஜேந்திர சோழன் ஆட்சியின் ஆறாவது அல்லது ஏழாவது ஆண்டுகளில் சேர மன்னனுடன் போர் நடைபெற்றது.சேரர்களள் சோழர்களின் மேலாதிக்கத்தை ஏற்கவில்லை. எதிர்த்த வண்ணம் இருந்தனர். இவர்களது எதிர்ப்பை முறியடிப்பதற்காக ராஜேந்திர சோழன் சேர நாட்டின் மீது போர்தொடுத்தார். கடுமையான போருக்குப்பின் சேரநாடு பணிந்தது. சேர நாடு மதுரையில் இருந்த சோழ ஆளுநரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.மேலும் சேர நாட்டிற்கு சொந்தமான அரச முடியையும்,மாலையையும் சோழர்கள் கைப்பற்றினர்.அதுமட்டுமல்லாமல் பழந்தீவையும் கைப்பற்றினர்.
இதன் பின்னர் பாண்டிய நாட்டின் மீது படை எடுத்தனர் சோழர்கள்.ஆனால் இராசராசனின் பாண்டிய நாட்டு படையெடுப்பு முழு வெற்றி பெறவில்லை. சோழர் மீதிருந்த பாண்டியர் வகை வளர்ந்ததேயன்றி குறையவில்லை. சுயமரியாதையும், சுதந்திர உணர்வுமிக்க பாண்டியர் சோழர் மேலாதிக்கத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சியை ஒடுக்கவும், பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சியை உறுதிப்படுத்தவும் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். பாண்டியர் படை தோற்கடிக்கப்பட்டது. பாண்டிய நாடு மதுரையைத் தலைநகராகக் கொண்ட மண்டகப்பட்டு, இராஜேந்திரனின் மகள் இளவரசன் இராசாதிராசன் அதன் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.அவருக்கு ஜடாவர்மன் சுந்தர சோழன் பாண்டியன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.
இவருடைய ஆட்சியின் பதினொன்றாவது ஆண்டில் வடநாட்டின் மீது படையெடுப்பை நிகழ்த்தினார்.இப்படையெடுப்பு வடநாட்டை அடைய கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆனது.இப்படை எடுப்பிற்கான காரணமாக கூறப்படுவது வட நாட்டில் உள்ள அப்போது தூய்மையாக இருந்த கங்கை நீரை தூய்மையாக்குவதற்கு தான் என்று திருவேலங்காட்டு செப்பேடு கூறுகிறது.
இராசேந்திரன் தளபதியின் தலைமையிலான சோழர் படை கோதாவரியை கடந்து பஸ்தார், ஒரிசா வழியாக மேற்கு வங்காளத்தை அடைந்தது. அப்போது வங்காளத்தை ஆட்சி செய்த தர்மபாலரையும், மகாபாலரையும் தோற்கடித்து சோழப் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். அதன்பின் சோழர் படை கங்கைக்கரை சென்று அங்கு ஆட்சி செய்த மன்னரையும் வென்ற பின்னர் கங்கை ஆற்று நீரை எடுத்து கொண்டு வந்து கோதாவரி கரையில் முகாமிட்டிருந்த இராசேந்திரன் உடன் சேர்ந்துகொண்டது. அதன்பின் இராசேந்திரன் தலைமையில் சோழர் படை புதிதாக உருவாக்கிக்கொண்டிருந்த கங்கைகொண்ட சோழபுரம் சென்றது.
கங்கை படையெடுப்பின் விளைவாக வடநாட்டில் வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகள் நடைமுறை காரணங்களுக்காக சோழ நாட்டுடன் இணைக்கப்படவில்லை.எனினும் அவை சோழப் பேரரசின் வலிமையை உணர்த்தின.தமிழர்கள் வங்காளத்தில் குடியேறி சேனா ஆள்நிலப் பகுதி உருவாவதற்கான அடித்தளம் இடப்பட்டது.அதே போன்று மிதிலையில் குடியேறிய தமிழர்கள் அங்கு கர்நாடகுலம் தோன்ற காரணமாக இருந்தனர்.தமிழர்கள் வட இந்திய பகுதிகளில் குடியேறியதைப் போன்றே வட இந்திய சைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கினர்.கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் இராசேந்திரன் நிர்மாணித்த புதிய நகரில் கங்கை என்ற குளத்தை வெட்டி அதில் கங்கை நீரைக் கலந்தனர். கங்கை படையெடுப்பு சோழர் வரலாறு பொன் முத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க நினைவு கூறத்தக்க நிகழ்வாகும்.
ராஜேந்திர சோழனின் கடாரம் படையெடுப்பு சோழ வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு.இப்போரில் தான் சோழ சாம்ராஜ்யத்தின் கப்பற் படை வலிமை என்பது வெளி உலகிற்கு தெரிந்தது.தென்கிழக்கு நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த ராஜேந்திர சோழன் விரும்பினார்.அதன் விளைவாக ஸ்ரீ விஜயப் பேரரசின் கீழ் இருந்த மலேயா தீபகற்பம், சுமத்திரா, ஜாவா மற்றும் அதன் அருகிலிருக்கும் தீவுகள் மீது போர் தொடுத்தார்.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான கடல்வழி ஸ்ரீ விஜய மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசு கும் ஸ்ரீவித்யா பேரரசுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்கு வர்த்தக தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இராசேந்திரன் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் சோழப் பேரரசு கும் ஸ்ரீ விஜயப் பேரரசிற்கும் இடையேயான தொடர்பில் விரிசல் விழுந்தது. அதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது. இராசேந்திரனின் பேரரசு விரிவாக்கம், சோழர் சீன வர்த்தக பெருக்கத்துக்கு ஸ்ரீ விஜய பேரரசு குறுக்கே நின்றது. எனவே ராஜேந்திரன் ஸ்ரீவிஜய பேரரசின் மீது படையெடுத்தார் (1025). ஸ்ரீவித்யா பேரரசுக்கு உட்பட்ட கடாரம்(சுமத்ரா) மற்றும் ஸ்ரீவிஜய பேரரசின் தலைநகர் கைப்பற்றப்பட்டது. ஸ்ரீவிஜய சங்ரம விஜயோதுங்கவர்மன் கைது செய்யப்பட்டார். சுமத்ரா படையெடுப்புகளும், மலேயாவை வெற்றி கொண்டதும் இராசேந்திரனின் சோழப் பேரரசின் வெளிநாட்டு விரிவாக்கத்துக்குப் புதிய பரிமாணத்தை கொடுத்தது. மலேயாவும், சுமத்ரா சோழப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட சோழர்களால் நிர்வகிக்கப்பட்டன.இப்போரின் வெற்றி ஒரே படையெடுப்பில் நிகழ்ந்தவை.இப்போர் குறித்து சீன நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்போர் குறித்து முக்கிய சீன நூலான தமாலிங்கம்(Tan-ma-ling) என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படையெடுப்புகளின்போது ராஜேந்திரனின் தளபதிகளே பெரும்பாலான இடங்களுக்குச் சென்று வெற்றிகொண்டார்கள் என்றாலும் ராஜேந்திரன் தற்போதைய ஒடிஷா வரை தன் படைகளுடன் சென்றான். அங்குள்ள மகேந்திரகிரீஸ்வர் கோவில் கல்வெட்டில் அவனுடைய வெற்றிகள் குறிப்பிடப்படுகின்றன.தமிழ் மன்னர்களில், ஏன் அந்த காலகட்டத்து இந்திய மன்னர்களில் ராஜேந்திர சோழன் அளவுக்கு கடல் கடந்து சென்று வெற்றிபெற்றவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ராஜேந்திர சோழன் தன்னுடைய ஆட்சி காலத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்.வளமான தஞ்சாவூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் வறண்ட பகுதி ஒன்றில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை நிர்மாணித்தார் ராஜேந்திரச் சோழன். இப்படிச் செய்ததற்குக் காரணம் இருந்தது என்கிறார் பாலசுப்ரமணியம். “ராஜேந்திரச் சோழனின் காலத்தில் தஞ்சாவூர் ஒரு ராணுவக் கேந்திரமாக உருவெடுத்திருந்தது. படைகள் பெருகியிருந்தன. இவ்வளவு பெரிய படைகளை வளமான காவிரியின் வடிநிலப் பகுதியில் வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதனால் கொள்ளிடத்திற்கு வடகரையில் ஒரு வறண்ட பெரும் பகுதியைத் தேர்வுசெய்து புதிய தலைநகரமாக உருவாக்கத் திட்டமிட்டார் ராஜேந்திரச் சோழன்.
எந்த தலைநகருக்கும் நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு ஏரியை வெட்டினார். அதன் கரையில் ஒரு பெரிய தலைநகரை உருவாக்கினார்.அங்கு தஞ்சை அரண்மனையைப் போலவே ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டினார்.அங்கே தஞ்சை பெரிய கோவிலைப் போலவே ஒரு கோவிலை உருவாக்கினார்.இப்படியாகத்தான் 1025ல் கங்கை கொண்ட சோழபுரம் உருவானது. தஞ்சையிலிருந்த அனைத்தையும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார்” என்கிறார் அவர். அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது.
அந்த காலகட்டத்தில் மரக்கலங்கள் கொள்ளிடம் ஆற்றில் சிறிது தூரம் வரை உள்ளே நுழையும் வகையில் இருந்தது. இதனால், வெளிநாட்டுப் படையெடுப்புகளில் கிடைத்த செல்வத்தை மரக்கலங்களின் மூலம் தலைநகர் வரை கொண்டுவர முடிந்தது. இதுவும் தலைநகரம் மாற்றப்பட்டதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள்.
புதிய தலைநகரத்தில் கங்கைகொண்ட சோழேச்சுவரம் என்ற சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற சிவாலயத்தை எழுப்பினார்.மிக முக்கியமாக தஞ்சை ராசராச்சுரேத்தின் மீது பதிகம் பாடியுள்ள கருவ்வூர் தேவர் என்னும் பெரியார் இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவன் குறித்தும் ஒரு பதிகம் பாடினார்.சைவராக இருந்தும் சமய சமத்துவத்தை கடைபிடித்தார் கங்கைக் கரையில் வாழ்ந்த சமணர்கள் காஞ்சியில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். சிறந்த சிந்தனையாளர், தரமான படைப்பாளி, சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர், தன் பிள்ளைகளுக்கு சிறந்த ஆட்சி பயிற்சி அளித்தார்.
தன் தந்தையிடமிருந்து கிடைத்த அரசர் பதவியை வைத்து சோழ சாம்ராஜ்யத்தை ஒப்பற்ற உய்ரநிலைக்கு கொண்டு சேர்த்தவர் ராஜேந்திர சோழன்.இப்படிப்பட்ட பெருவாழ்வுடன் புகழ் பெற்ற ராஜேந்திர சோழன் முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆட்சி புரிந்து 1044-ம் ஆண்டு மரணித்தார்.இவரது மனைவியருள் ஒருவரான வீரமாதேவி பிரிவு தாங்க முடியாமல் உடன்கட்டை ஏறி கணவனுடன் உயிர்துறந்தார். இவருக்கு பின் இவரது மூத்த மகன் ராஜாதிராஜ சோழன் அரியணை ஏறினார்.