இரண்டாம் ராஜேந்திர சோழன் வரலாறு
உக்கிரமாக நடைபெற்ற கொப்பத்து போரில் ராஜாதிராஜன் சோழன் வீர மரணம் அடைந்த பிறகு அப்போரை வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றவர் இரண்டாம் ராஜேந்திர சோழன்.போரை வழிநடத்தியது மட்டுமில்லாமல்,அப்போரில் சோழ படைகள் வெற்றி பெற வழி வகுத்தார்.போர் முடிந்த பிறகு இவர் சோழ அரசராக கி.பி.1051-ல் பொறுபேற்றார்.இவருடைய பதவியேற்பு குறித்து மைசூர் ராஜ்ஜியத்தில் உள்ள கல்வெட்டில் பதிவாகியுள்ளது.ராஜாதிராஜன் சோழன் இருக்கும் போதே இவர் தான் இளவரசராக நியமிக்கப்பட்டார்.இவர் முதலாம் ராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன்.இவருடைய அண்ணன் ராசகேசரி என்னும் பட்டம் சூட்டிகொண்டதால்,இவர் பரகேசரி என சூட்டி கொண்டார்.
இவ்வரசன் கல்வெட்டுக்களில் மூன்று மெய்கீர்த்திகள் காணப்படுகின்றன.ஸ்வஸ்திஸ்ரீ
இரட்டபாடி ஏழரை இல்லகமும் கொண்டு
கொள்ளா புறத்து ஜெயஸ்தம்பம் நாட்டிப்
பேராற்றன்கரை கொப்பத்து
ஆகா மல்லனை அஞ்சு வித்தவன்
ஆணையும் குதிரையும் பெண்டிர் பண்டாரமும்
அடங்கக் கொண்டு
விஜயாபிஷேகம் பண்ணி
வீரசிம்மா சனத்து வீற்றிருந் தருளிய
கொப்பர கேசரி வன்மரான
உடையார் ராஜேந்திர தேவர் என்று இவர் வீரத்தை புகழ் பாடும் சிறிய மெய்கீர்த்தி.இவருடைய ஆட்சியின் இரண்டாம ஆண்டுகளிலிருந்து இந்த மெய்கீர்த்தி காணப்படுகிறது.இரண்டாம் மெய்கீர்த்தி ‘திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்’ என்று தொடங்குகிறது.மூன்றாம் மெய்கீர்த்தி ‘திருமாது புவியெனும் பெருமாதர்’ என்று தொடங்கி நீண்டு செல்கின்றது.இந்த அரசனின் வரலாற்றை அறிந்து கொள்ள இம்மெய்கீர்த்தி மிக உதவியாக இருக்கும்.இம்மெய்கீர்த்தி இவருடைய ஆட்சியின் நான்காம் ஆண்டிலிருந்து காணப்படுகிறது.
இவருடைய ஆட்சியில் ஈழ போர் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.இப்போர் கி.பி.1054 இறுதியிலோ அல்லது கி.பி.1055 தொடக்கத்திலோ நடைபெற்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது.ஈழ நாட்டின் பெரும் பகுதி சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.ரோகன பகுதி மட்டும் இலங்கை வேந்தன் கட்டுபாட்டில் இருந்தது.சில சமயங்களில் இலங்கை மன்னன் வழி வந்தவர்கள் சோழர் கட்டுப்பாட்டில் இருந்த ஈழ பகுதிகளில் இடையூறு செய்து கொண்டிருந்தனர்.இதனால் அவர்கள் மீது போர் தொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு சோழர்கள் தள்ளப்பட்டனர்.இப்போரில் சோழர்கள் வெற்றி பெற்றனர்.இலங்கை வேந்தன் மாணபரணன் மகன் இருவர் போர்கைதியாக சிறைபிடிக்கப்பட்டனர்.
இதன் பிறகு கொப்பம் போரில் பெரும் தோல்வியடைந்ததற்கு பழிவாங்கும் பொருட்டும் தலைநகரை காக்கமுடியாத அவமானத்தை தீர்க்கவும் சாளுக்கியர்கள் கிபி 1059 ஆம் ஆண்டு பெரும் படை கொண்டு சோழப் பேரரசின் மேல் போர் தொடுத்தனர். துங்கபத்திரா நதியும் கிருஷ்ணா நதியும் கூடும் இடத்தில் இந்தப் போர் நடைபெற்றது.
தளபதி தண்டநாயக்க வலதேவ சாளுக்கியப் படைகளுக்குத் தலைமையேற்று வந்தார். சோழர் படைகள் ராஜமஹேந்திர சோழன் தலைமையில் போருக்கு வந்தன. மேலும் விஜய ராஜேந்திர சோழனும் போரில் பங்குபெற்றார். சாளுக்கியர்களின் பழிவாங்கும் நோக்கமும் அவமானத்தைத் துடைக்கும் எண்ணமும் மற்றும் வேங்கி நாட்டை கைப்பற்றும் ஆசையும் ராஜமஹேந்திர சோழனால் தகர்க்கப்பட்டது. போரில் சாளுக்கியப் படைகள் பெரும் தோல்வியைத்தழுவி புறமுதுகிட்டு ஓடினர். சாளுக்கியத் தளபதி தண்டநாயக்க வலதேவ போரில் இறந்தார்.முடக்காற்று போர் என்று இப்போர் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.இரண்டாம் ராஜேந்திர சோழன் மகன் இளவரசன் இராசமகேந்திரன் மேலை சாளுக்கிய மன்னன் ஆகம்வல்லனை புறமுதுகு காட்டி ஓட வைத்தார்.
சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் உறவு நல்ல நிலையில் இருந்தது. இரண்டாம் இராஜேந்திர சோழனின் மகளான மதுராந்தகி கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன். இரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னராகப் பதவியேற்றார்.
மேலும் இம்மன்னனுக்கு கலையின் மீது பெரும் ஆர்வம் இருந்தது.அதே நேரம் தன் முன்னோர்கள் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார்.அதற்கு உதாரணமாக தஞ்சை ராசராசேசுரமுடையார் கோவிலில் நடைபெற்ற ராசராசேசுர நாடகத்தில் நடித்தவர்களுக்கு 120 கல நெல் இலவசமாக கொடுத்தார்.இவர் கி.பி. 1063-ம் ஆண்டு காலமானார்