தேச துரோக சட்டம் ஜனநாயக நாட்டிற்கு தேவையா?
கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் தேச துரோக வழக்கு தொடர்பாக முக்கியமான தீர்ப்பை அறிவித்தது. அந்த தீர்ப்பின் படி ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் தேச துரோக சட்டமான 124A பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி கூறியது.மேலும் இந்த வழக்கின் கீழ் சிறையில் உள்ளவர்கள் ஜாமீன் பெற்று கொள்ளலாம் என்றும்,மேலும் புதிதாக எவர் மீதும் இந்த வழக்கின் கீழ் வழக்கு பதிய கூடாது என்று கூறியுள்ளனர்.சென்ற 2௦21-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது அதில், நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்த தேச துரோக சட்டம் அவசியம்தானா என்று கேள்வி எழுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய தண்டனைச் சட்டமானது 1860-ல் தாமஸ் மெக்காலேஉருவாக்கினார்.தேச துரோக சட்டம் இந்திய தண்டனைச் உருவாக்கப்பட்டு பத்தாண்டுகள் கழித்து 1870-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.1898-ம் ஆண்டு தேச துரோக சட்டத்தில்,சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது.இந்த சட்டத்தின் படி பேச்சுரிமை,எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன.அரசை நோக்கி கேள்வி எழுப்புபவர்கள் அனைவரையும் இந்த சட்டத்தை பயன்படுத்தி சிறையில் ஆங்கிலேய அரசு அடைத்தது.தேச துரோக சட்டம் குறித்து காந்தி “அடக்குமுறை சட்டங்களின் இளவரசன்” என்று குறிப்பிட்டார்.இந்திய சுதந்திரத்திற்கு பிறகு அரசியலமைப்பு சட்டங்கள் உருவாக்கபட்டது.பிரிவு 19(1)-ன் கீழ் பேச்சுரிமையும் ,எழுத்துரிமையும்,கருத்துரிமையும் முழுவதுமாக வழங்கப்பட்டது. அதே நேரத்தில் இந்திய தண்டனைச் சட்ட பிரிவான 124a-வும் இருந்தது.இந்த சட்ட பிரிவின்படி ஒருவர் தண்டிக்கபட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை வரை வழங்கலாம்.
தேச துரோக சட்டதின் கீழ் தங்களை எதிர்த்த பெரும்பாலானவர்களை ஆங்கிலேய அரசு கைது செய்தது.1891- ம் ஆண்டு `பங்கோபாஸி’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஜோகேந்திர சந்திரபோஸ் மீது தேசத்துரோக வழக்கு பாய்ந்தது. பாலகங்காதர் திலகர் தன் `கேசரி’ பத்திரிகையில் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். 1897, 1909, 1916 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை திலகர் மீது தேசத்துரோக வழக்குகள் போடப்பட்டுள்ளன.இதில் 18 மாதங்கள் திலகர் சிறையில் அடைக்கப்பட்டார். 1922-ம் ஆண்டு மகாத்மா காந்தி, `யங் இந்தியா’ இதழில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கட்டுரை எழுதினார்.இதையடுத்து, காந்தி மீதும் `யங் இந்தியா’ வெளியீட்டாளர் சங்கர்லால் பாங்கர் மீதும் இந்தச் சட்டம் பாய்ந்தது.ஜவஹர்லால் நேரு `இது ஏற்றுக்கொள்ள முடியாத மிகவும் ஆட்சேபனைக்குரிய சட்டம்” எனத் தெரிவித்துள்ளார்.கப்பலோட்டிய தமிழன் வா.உ.சிதம்பரனார் இந்த கொடிய சட்டப்பிரிவு கீழ் கைது செய்யப்பட்டார்.
சமீபகாலமாக அதிலும் குறிப்பாக மோடி ஆட்சிக்கு இந்தியாவில் பல தரப்பினர் தேசத்துரோக வழக்குகள் பதியப்படுவது அதிகரித்து வருகின்றன. பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், படைப்பாளர்கள், சினிமா இயக்குநர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் என கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவரின் மீதும் இந்தச் சட்டம் பாய்கிறது. 2015- ம் ஆண்டு டாஸ்மாக் வருவாய் மூலம் தமிழக அரசு இயங்குவதாகப் பாடல்களை வெளியிட்ட பாடகர் கோவன் மீது இந்த வழக்கு போடப்பட்டது. 2016-ம் ஆண்டு ஜே.என்.யூவில் கண்ஹையா குமார்,உமர் காலித் உள்ளிட்ட மூவர் மீது இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. பின்னர், ஜாமீனில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.அதே போன்று ஜே.என்.யூ மாணவர் ஷர்ஜீல் இமாம் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசியதற்காக தேச துரோக சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யபட்டார். தற்போது அவர் தீர்ப்பு வந்ததை அடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கில் பிணை கொடுக்கும்படி அணுகியுள்ளார். தமிழகத்திலும் ம.தி.மு.க. தலைவர் வைகோ,அணுவுலை எதிர்த்து போராட்டம் நடத்திய சுப.உதயகுமார் அவர்கள் தேச துரோக வழக்குகள் பாய்ந்துள்ளது.2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை தேசத்துரோக வழக்கு 179 பேர் மீது பாய்ந்துள்ளது. இதில், 70 சதவிகித வழக்குகளில் குற்றப்பத்திரிகை கூட தாக்கல் செய்யப்படவில்லை.மற்றொரு தரவில் 2010 முதல் 816 தேசத்துரோக வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட கிட்டத்தட்ட 11,000 பேரில் 65% பேர் 2014 ல் மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு குற்றம் சாட்டப்பட்டனர்.அனால் இந்த சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர்களின் சதவீதம் வெறும் 3.3% தான்.
இந்த சட்டம் தொடர்பாக ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் “நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டைக் கொண்டாடும் நேரத்தில், காலனித்துவ கால சுமைகளை அகற்றும் பிரதமர் நரேந்திர மோதியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, பல்வேறு காலனித்துவ சட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று கூறப்பட்டுள்ளது.மேலும் “இது ஓர் தொடர்ச்சியான நடைமுறை. இந்த சட்டங்களும் அவற்றுக்குக் கீழ்படிதலும் காலனித்துவ கால மனப்பான்மை. அவற்றுக்கு இன்றைய இந்தியாவில் இடமில்லை. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டே 124ஏ சட்டப்பிரிவை மறு ஆய்வு செய்ய விரும்புகிறோம்,” என்று ஒன்றிய அரசு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மூத்த பத்திரிகையாளர்கள், முக்கிய அமைப்புகளுக்காக மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் ,விபின் நாயர் உள்ளிட்டோர் ஆஜராயினர்.”ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். நாம் இப்போது ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கும் உரிமை உள்ளது,” என்று தெரிவித்தார்.19(1)(அ) வில் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துரிமையை தேசத்துரோகம் எவ்வாறு பாதித்தது என்பதை மட்டுமே கேதார்நாத் தீர்ப்பு உள்ளடக்கியதாக சிபல் வாதிட்டார். அரசியலமைப்பின் 21ஆவது விதி கூறும் வாழ்வுரிமை 14ஆவது விதி கூறும் சம உரிமை பற்றி அந்த வழக்கில் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்று கபில் சிபல் குறிப்பிட்டார்.
தேசத்துரோகச் சட்டம், காலனிய ஆதிக்கத்தின் நினைவாக இன்னும் இந்தியாவில் இருந்து கொண்டிருக்கிறது. ஜனநாயக நாட்டுக்கு இதுபோன்ற சட்டங்கள் பொருந்தாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் தன் குடிமக்களுக்குத் தந்த பேச்சு,எழுத்து,கருத்து சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது.தங்கள் குடிமக்கள் மீதே அரசு வன்முறையை சட்டத்தின் துணை கொண்டு நடத்துகிறது.குறிப்பாக மாற்று கருத்து கூறுபவர்களை இந்த சட்டம் வஞ்சிக்கிறது.இந்த சட்டத்தை அறிமுகபடுத்திய ஆங்கிலேய அரசாங்கம் தன்னுடைய நாட்டில் 2009-ம் ஆண்டு இந்த அடக்குமுறை சட்டத்தை ஒழித்தனர்.அந்த வகையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது.யூ.ஏ.பி.ஏ.,ஏன்.ஐ.ஏ,தேசிய பாதுகாப்பு சட்டங்கள் போன்ற அடக்குமுறை சட்டங்களும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தை நேசிப்பவர்களின் கருத்தாக உள்ளது.மாற்று கருத்துகளையும்,விமர்சனங்களையும் தடுக்காமல் அதை அரசாங்கம் உள்வாங்கி கொள்வது அரசாங்கத்திற்கும் நல்லது. இது குறித்து முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைகழக மாணவர் உமர் காலித் தேச துரோக வழக்கில் கைது செய்ய படுவதற்கு முன்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். உரையின் இறுதியில் “மாற்று கருத்துகளை அனுமதிக்காத பல்கலைகழகம்,சிறைசாலையாக மாறும் (A university which does not allow dissent, it becomes a prison)என்று கூறினார்.அந்த கருத்து ஒட்டுமொத நாட்டிற்கும் பொருந்தும்.