மன்னராட்சியில் அரசனின் படை எவ்வளவு வலிமையுடன் உள்ளது, தன்னுடைய படை வலிமையால் எவ்வளவு நிலப்பரப்பை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலுமோ? எவ்வளவு மக்களை தன்னுடைய ஆணைக்கு இணங்க செய்ய இயலுமோ? அந்நிலத்தின் அம்மக்களின் நன்மை தீமை அனைத்தையும் அந்த அரசன் ஏற்றுக்கொண்டு ஆட்சி புரிவான். நிலமும், கடலும், மலையும், நீரும் அனைத்தும் அரசனின் ஆட்சிக்கு உட்பட்டது.
நிலத்தை அல்லது நாட்டை ஆளும் அரசன் அதிகாரத்தையும், குற்றம், தண்டனை என நீதி வழங்குதலையும் தன் கைக்குள் வைத்திருப்பான். சரி எது? தவறு எது? என்று முடிவெடுக்கும் உரிமை அனைத்தும் அரசனின் கையில்தான் இருக்கும் அதனால் ஏழையின் சொல் அதிகாரத்தில் அரசாலும் அரசனை ஒன்றும் செய்துவிடாது.
மன்னராட்சியில் அந்நிலத்தின் ஆட்சி மொழி, நிலத்தில் வாழும் மக்களின் சமய வழிபாடு, உணவு, உடை, தொழில், தனி மனிதன் செயல் அனைத்தும் மன்னரின் விருப்பத்தின் படியே இருக்கும்.
தத்துவமும், அரசியலும், கல்வியும், வணிகமும் ஆளும் அரசனும் அரசனின் அரசவை அறிவிக்கும் அறிவிப்புகளை செயல்படுத்த வேண்டிய கட்டாய சூழல் இருக்கும். நன்மையோ! தீமையோ! மாற்றமோ? பெரும்பாலும் மக்களின் கருத்துக்கள் ஏற்கப்பட மாட்டாது. மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்ற நிலையிலேயே ஆட்சி தொடரும்.
மன்னராட்சியில் அரசு பொறுப்பேற்கும் முறையானது. தந்தை தந்தைக்குப் பிறகு மகன். மகனுக்கு பிறகு பெயரன் என்று பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தை சார்ந்த மன்னர் வாரிசுகள் தனது முன்னோரால் கைப்பற்றப்பட்ட நிலத்தை முழுவதும் ஆட்சி செய்து வருவர்.
ஆனால் மக்களாட்சியில் மன்னர்களால் மக்கள் அன்று, மக்களால் தான் மன்னர்கள்! மக்களாட்சியில் ஆட்சி அதிகாரமும் நீதித்துறையும் தனித்தனியாக செயல்படும்! செயல்பட வேண்டும்.
மக்களாட்சியில் ஆளும் அரசுகளால் கொண்டுவரப்படும் திட்டங்களும் மக்களின் விருப்பத்திற்கு இணங்க தான் செயல்படுத்தப்பட வேண்டும். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை செயல்படுத்த முடியாது. நீதித்துறையில் மக்களை பாதிக்கக்கூடிய சட்டங்களை இயற்ற இயலாது. மக்களின் தனி மனித உரிமைகளை பாதிக்கக்கூடிய எது ஒன்றையும் மக்களிடத்தே விதிக்க முடியாது.
மக்களாட்சியில் திட்டங்களும் சட்டங்களும் வெறும் காகிதத்தில் மட்டுமே நின்றுவிடுகிறது ஆனால் நடைமுறையில் இல்லை. அரசியல் கட்சிகளும், அரசாட்சியிலும், நீதியிலும் மக்களாட்சியில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய அனைத்தும் ஓரங்கட்டப்பட்டு மன்னராட்சி போலவே பெருமுதலாளிகளின் தேவைக்காகவும், அவர்களின் வசதிக்காகவும் அனைத்தையும் செயல்படுத்தப்படும் அவல நிலை உள்ளது.
மக்களுக்கு எதிரான சட்டங்கள் வழிந்து திணிக்கப்படுகிறது அதை எதிர்த்து கேள்வி கேட்கும் எளிய மக்களின் மீது அதிகார வர்க்கம் தனது அதிகாரத்தை செயல்படுத்துகிறது. மக்களுக்கு எதிரான திட்டங்கள் தங்களின் செல்வ நலனிற்காக மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தாலும் அரசுகளால் திணிக்கப்படுகிறது.
மக்கள் எந்த மொழியைப் பேச வேண்டும்? மக்கள் எந்த படிப்பை படிக்க வேண்டும்? மக்கள் எந்த உணவை உண்ண வேண்டும்? மக்கள் எந்த உடையை உடுத்த வேண்டும்? மக்கள் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும்? மக்கள் எவ்வாறு பேச வேண்டும் என்று அனைத்து தனிமனித உரிமைகளையும் மக்கள் ஆட்சி காலத்திலேயே “இழக்கும்” நிலை உள்ளது.
சமூக நீதி, பெண்ணுரிமை, சுயமரியாதை என்று பேசி ஆட்சிக்கு வந்த இயக்கங்கள் பெண்களுக்கும் உரிமை அளிக்காமல், அனைத்து சமூகத்திற்கும் பிரதிநித்துவம் என்ற கொள்கையையும் செயல்படுத்தாமல், மன்னராட்சி போல கட்சியின் தலைமை என அனைத்து அதிகார பொறுப்புகளையும், தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கிறது. ஆட்சியிலும் தங்களின் வாரிசுகளை மட்டுமே தொடர்ந்து அதிகாரத்திற்கு கொண்டு வந்து மன்னராட்சி போல செயல்படுத்துகிறது.
அரசியல் மக்களுக்கான சேவை என்று இல்லாமல் பணம் சம்பாதிக்கும் தேவையாக மாறி நிற்பதால் பொதுமக்களும், தொண்டர்களும் குரல் கொடுத்தும் மாறாமல் தொடர்கிறது. ஒரே சாதியில் இருப்பவர்கள் மட்டுமே முன்னேற வேண்டுமா? ஒரே சாதியில் இருப்போர் மட்டுமே அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமா? அனைத்து சாதியினரும் முன்னேற வேண்டும் என்று தொடங்கப்பட்ட இயக்கங்கள் செயல்பட்ட இயக்கங்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அதிகாரத்தை கட்சியை, ஆட்சியை தன் கைக்குள் வைத்திருக்க முடியும் என்ற நிலையில் நீடிப்பது மக்களாட்சியில் கேலிக்கூத்தான ஒரு விடயம்.
மக்கள் ஆட்சியில் தொடரும் “மன்னராட்சி” முறையை “மக்கள்” தான் களையவேண்டும்.