போர்களத்தில் வீர மரணம் அடைந்த சோழ மன்னன்
ராஜேந்திர சோழன் மறைவிற்கு பிறகு அவருடைய மூத்த மகன் ராஜாதிராஜன் சோழன் அரியணை ஏறினார் (1018).தந்தையை போல இவரும் வீரமானவராகவும்,சிறந்த நிர்வாகியாகவும் இருந்தார்.இவர் சிறந்த நிர்வாகியாக இருக்க இவர் தந்தை இவரை இளவயதில் இளவரசனாக அறிவித்தது மிக முக்கிய காரணம்.அப்பதவி கொடுத்த அனுபவம் இவரை சிறந்த நிர்வாகியாக்கியது.இவர் ராசகேசரி என்னும் பட்டம் பெற்றார்.
கல்வெட்டுகளில் இவருக்கு மூன்று வகையான மெய்கீர்த்திகள் உள்ளது.இதனை வைத்து தான் இவருடைய வரலாற்றில் நிகழ்ந்த நிகழ்வுகளை நாம் பார்க்க இருக்கிறோம்.ஒன்று,’திங்களேர் பெறவளர்’,இரண்டாவது ‘திங்களேர் தரு’ மூன்றாவது திருகொடியெடு தியாகக்கொடி.திங்களேர் பெறவளர் என்பது அவருடைய ஆட்சியின் இருபத்து ஆறாம் ஆண்டுகள் வரை நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து உள்ளது.திங்களேர் தரு இவருடைய ஆட்சியின் கீழ் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை விரிவாக கூறுகிறது.இவருடைய ஆட்சியில் நடைபெற்ற வேறு சில அரிய நிகழ்வுகளை திங்களேர் தரு மெய்கீர்த்தியில் உள்ளது.’திருகொடியொடு தியாகக்கொடி’ என்று கூறப்படும் மெய்கீர்த்தியில் முன்னர் கூறப்பட்ட மெய்கீர்த்தியில் மேற்குறிப்பிடப்பட்ட சில நிகழ்வுகள் குறித்து தான் இதில் பதிவாகியுள்ளது.
ராஜாதிராஜன் சோழன் இளவரசராக இருக்கும் போதே மானாபரணன்,வீர கேரளன்,சுந்தரபாண்டியன் போன்ற மன்னர்களை வீழ்த்தினார்.மேலும் வேணாட்டு அரசனையும்,மேலை சாளுக்கிய மன்னன் ஆகவமல்லனை வென்று அவர் புதல்வன் விக்ரமாதித்தனை புறங்காட்டி ஓட செய்தார்.இந்த போர் நிகழ்ச்சிகள் எல்லாம் இவர் அரசராகும் முன் நடந்தது.
இவருடைய ஆட்சியில் இருபத்து ஒன்பதாம் ஆண்டில் ஈழ நாட்டு மன்னர்களோடும்,மேலைசாளுக்கிய மன்னர்களோடு நடந்த போர் குறித்து கல்வெட்டில் பதிவாகியுள்ளது.மேலும் இலங்கை மன்னன் விக்கிரமபாகுவை ராஜாதி ராஜன் சோழன் வென்ற செய்தி இருபத்து எட்டாம் ஆண்டு கல்வெட்டில் பதிவாகியுள்ளது. இதுவும் ராஜேந்திர சோழன் ஆட்சியில் இவர் இளவரசராக இருக்கும்போது நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிறகு விக்கிரமபண்டியன் என்னும் இலங்கை அரசனை கி.பி.1046-ல் ராஜாதிராஜன் சோழன் வென்றார்.இது குறித்து மெய்கீர்த்தியில் உள்ளது.விக்கிரமபாண்டியன் என்னும் பெயரை பார்க்கும் பொழுது பாண்டிய மன்னன் ஒருவனுக்கு இலங்கை அரசன் மகள் ஒருவருக்கு பிறந்த குழந்தையாக இந்த இலங்கை அரசன் இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.கி.பி.பத்து மற்றும் பதினொன்றாம் நூற்றாண்டுகளில் இலங்கை அரசர்கள்,பாண்டிய,சேர மன்னர்கள் தங்களுக்குள் திருமண உறவை வைத்து கொண்டு சோழர்களை வீழ்த்த முயற்சித்தார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.அதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது என்பதை நடைபெற்ற போர் நிகழ்வுகள் சுட்டி காட்டுகின்றது.விக்கிரமபண்டியன் தோல்வி குறித்து குறித்து மகாவம்சம் கூறுகிறது.விக்கிரம பாண்டியனின் மணிமகுடம் ராஜாதிராஜன் சோழனால் கைப்பற்றப்பட்டது.கி.பி.1053-ம் ஆண்டு நடைபெற்ற போரில் விக்கிரமபண்டுவின் மகன் இலங்கை அரசன் பராக்கிரம பண்டு போர்களத்தில் உயிர் நீத்தார்.இக்காலக்கட்டத்தில் ரோகண பிரதேசம் தவிர இலங்கை பகுதி முழுவதும் சோழர்கள் கட்டுபாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கி.பி.1046-ல் மேலைச்சளுக்கியரோடு நடைபெற்ற போர் குறித்து கல்வெட்டில் பதிவாகியுள்ளது.இப்போரில் மேலைசாளுக்கியர்களை முழுவதுமாக வெற்றி கொண்டு அவர்களை தம்முடைய குறுநில மன்னர்களாக்க சோழ பேரரசு திட்டமிட்டது. அதற்காக அருகில் உள்ள குந்தள நாட்டின் மீது படையெடுத்தனர்.அப்போரில் கண்டர்த்தினகரன் ,நாரணன்,கணபதி,மதுசூதனன் ஆகிய சாளுக்கிய தலைவர்கள் புறங்காட்டி ஓடினர்.பிறகு பல்லாரி மாவட்டம் ஹாஸ்பேட்டை தாலுக்காவில் உள்ள சாளுக்கியர் மாளிகை தகர்க்கப்பட்டு ராஜாதிராஜன் சோழன் வெற்றி தூண் நிறுவப்பட்டது.
பிறகு 1048-ம் ஆண்டு மேலைசாளுக்கியர்களோடு மூன்றாம் போர் நடைபெற்றது .இப்போர் 1048-ம் ஆண்டு பிற்பகுதியில் நடந்ததா அல்லது இறுதியில் நடந்ததா என்ற குழப்பம் நிலவுகிறது.இப்போர் கிருஷ்ணா நதிக்கரையில் நடைபெற்றது.மிகக்கடுமையாக நடைபெற்ற இப்போரில் ராஜாதிராஜன் சோழன் வெற்றிபெற்றார்.தெலுங்கு விச்சையன்,அத்திராசன்,அக்கப்பையன்,கொண்டைய ராஜன்,முன்சன் உள்ளிட்ட சாளுக்கிய தலைவர்களை வெற்றி கொண்டனர்.சாளுக்கிய மன்னரின் பட்டத்து யானையை குளிப்பாட்டி அதிலிருந்த சாளுக்கிய முத்திரையை அகற்றி, புலி முத்திரையை பதித்தனர்.மேலும் அங்கு வெற்றி தூணை நிறுவினர்.மேலும் ஆகவமல்லன் என்னும் மன்னனை புறங்காட்டி ஓடினார் என்னும் கூறி ஓடவைத்தனர்.
இந்த அவமானத்தை தாங்க முடியாத ஆகவமல்லன் மீண்டும் போர் தொடுத்தார்.இம்முறை நுளம்பன்,காளிதாசன்,சாமுண்டன்,கொம்பையன்,வில்லவராசன் என்பவர்கள் தோல்வியுற்று ஓடினர்.கூர்ச்சர மன்னன் ஒருவர் கொல்லபட்டார்.இப்போரில் ராஜாதிராஜன் சோழன் பெரும்வெற்றி பெற்றார்.இப்போர் வெற்றிக்கு பிறகு சாளுக்கிய தலைநகராகிய கல்யானபுரத்தை கைப்பற்றி அரண்மனை மாளிகையை இடித்து,தன் வெற்றிக்கு அடையாளமாக விஜயராஜேந்திரன் என்னும் பட்டத்தை சூட்டி கொண்டார்.இப்போர் நிகழ்வுகள் குறித்து ராஜாதி ராஜன் சோழன் கல்வெட்டுகளில் மிக தெளிவாக பதிவாகியுள்ளது.
கி.பி.1054-ம் ஆண்டில் ராஜாதிராஜன் தன்னுடைய தம்பி இரண்டாம் ராஜேந்திரனோடு மீண்டும் சாளுக்கியர்களை எதிர்த்து போர் புரிய சென்றார். கிருஷ்ணை ஆற்று கரையில் உள்ள கொப்பத்தில் இரு படைகளும் போர் புரிந்தன.சாளுக்கியர் பக்கத்தில் ஆகமவல்லனும்,சோழர் பக்கத்தில் ராஜாதி ராஜ சோழனும் தலைமை ஏற்றனர்.ராஜாதிராஜன் தம்பி போர்களத்திற்கு வராமல் பாடி வீட்டில் தங்கியிருந்தார்.இப்போர் மிக கடுமையாக நடைபெற்றது. யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத அளவிற்கு மிக கடினமாக இருந்தது.சாளுக்கிய படைகள் ராஜாதிராஜன் சோழன் இருந்த யானையை சுற்றி வளைத்து தாக்கினர்.இதில் மன்னன் ராஜாதிராஜன் சோழன் வீரமரணம் எய்தினார். மன்னன் இறந்த அதிர்ச்சியில் சோழ படைகள் புறமுதுக காட்டி ஓடினர்.
அந்த நிலையில் இரண்டாம் ராஜேந்திரன் தன் பட்டத்து யானை மீது ஏறி அமர்ந்து,சிதறி ஓடிய படையினரை நோக்கி ‘அஞ்சேல் அஞ்சேல்’ என்று வீர முழக்கம் எழுப்பினார்.இதன் பின்னர் சாளுக்கிய படைகள் இரண்டாம் ராஜேந்திரனை சுற்றி வளைத்தனர்.இதில் இரண்டாம் ராஜேந்திரன் தொடையில் காயம் ஏற்பட்டது.எனினும் சாளுக்ய படை தலைவர்கள் இரண்டாம் ராஜேந்திரனால் போர்களத்தில் கொல்லப்பட்டனர்.ஆகமவல்லன் போர்களத்தை விட்டு ஓடினார்.இறுதியில் சோழ படை வெற்றி பெற்றது.இப்போர் கொப்பத்து போர் என அழைக்கப்படுகிறது.