அழ.வள்ளியப்பா
சிறுகதை…!!
ஹாசனும், பாத்திமாவும் எப்பொழுது பார்த்தாலும் பணம்! பணம்! என்று ஜபம் செய்து கொண்டிருப்பார்கள். இந்த உலகத்தில் உள்ள செல்வத்தை எல்லாம் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்தால் கூட அவர்களின் ஆசை தீராது அவ்வளவு பேராசை!
ஹாசனுக்கு அரண்மனையில் வேலை! அரண்மனையில் வேலை என்றால் என்ன?? மந்திரி வேலையா?? இல்லை எடுபிடி வேலைதான் ஆனாலும், அவனுக்கு நல்ல சம்பளம் கிடைத்து வந்தது. எவ்வளவு சம்பளம் கிடைத்தால் தான் என்ன? அந்த பணத்தில் பைசா செலவிடுவதானாலும் அவனுக்கோ! மனைவி பாத்திமாவுக்கு மனம் வராது. எந்த எந்த வழிகளில் மிச்சம் பிடிக்கலாம்? எப்படி? எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பதைப் பற்றி அவர்கள் அடிக்கடி யோசனை செய்வார்கள். நல்ல சாப்பாடு, சாப்பிட மாட்டார்கள்! நல்ல உடை, உடுத்த மாட்டார்கள்! பிச்சைக்காரர்கள் போலவே காட்சியளிப்பார்கள்.
இப்படியே அவர்கள் மிச்சம் பிடித்து ஒரு பானை நிறைய பணம் சேர்த்து விட்டார்கள். ஒரு பானை நிறைய பணம் சேர்த்து விட்டால் போதுமா?? இன்னும் மூன்று பானைகள் வீட்டிலே இருக்கின்றனவே, அவைகளையும் பணத்தால் நிரப்பிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள் அதற்கு வழி என்ன?? என்று இருவரும் யோசனை செய்தார்கள்…!!
அன்று ஹாசனுக்கு ஒரு யோசனை உதயமாயிற்று உடனே பாத்திமா நான் ஒரு யோசனை சொல்கிறேன் அதை போல் செய்கிறாயா என்று கேட்டான்??
பாத்திமா மாட்டேன் என்றா? சொல்வாள்?? என்ன யோசனை சொல்லுங்கள், சொல்லுங்கள் என்று ஆவளோடு கேட்டாள்!
உடனே ஹாசன் சொல்ல ஆரம்பித்தான்! பாத்திமா நீ கடைத் தெருவுக்குப் போகவேண்டும். போகும்போதே தலையை விரித்துப் போட்டுக்கொள். கண்களில் கண்ணீரை வரவழைத்து கொள். அங்குள்ள கடைக்காரர் ஒவ்வொருவரிடமும் சென்று ஐயா! என்னுடைய தலைவிதி இப்படி ஆக வேண்டும்?? என் கணவனை அரசர் விசாரணை எதுவும் இல்லாமல் சிறையில் போட்டு விட்டார். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் நான் திண்டாடுகின்றது நீங்கள்தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சிக் கேள்! நிச்சயம் அவர்கள் உனக்கு ஆகாரமும், பணமும் தருவார்கள்! ஆகாரத்தை இருவரும் சாப்பிடலாம். பணத்தை பானையில் போட்டு வைக்கலாம் எப்படி? என் யோசனை என்று கேட்டான்.
அற்புதமான யோசனை தான் ஆனால், அவர்கள் உங்களை நேரில் பார்த்துவிட்டால் என்ன செய்வது…??
அதைப் பற்றி கவலைப்படாதே… நான் கோழி கூவும் முன்பே அரண்மனைக்கு போய்விடுவேன், கடைகள் எல்லாம் மூடிய பிறகே வீடு திரும்புவேன் அரண்மனையில் இருப்பவர்களை தவிர மற்ற எவருடைய கண்களிலும் நான் தென்படமாட்டேன்.
சரி அப்படியே செய்யலாம்! நாளையிலிருந்து நான் இந்த வேலையை ஆரம்பித்து விடுகிறேன் என்றாள் பாத்திமா!
தலைவிரி கோலத்துடனும், நீர்வழியும் கண்களுடனும் ஒவ்வொரு கடையாக சென்றாள். ஹாசன் சொல்லிக்கொடுத்தது போலவே புளுகினாள்! கடைக்காரர்கள் அவளுடைய பொய்யை உண்மை என்றே நம்பி விட்டார்கள். இறக்கம் காட்டினார்கள் உணவு, உடை, பணம் முதலியவற்றை கொடுத்து உதவினார்கள் அன்று வீடு திரும்பும்போது பாத்திமாவுக்கு அளவில்லாத ஆனந்தம்.
ஊர் அடங்கிய பிறகு வீடு வந்து சேர்ந்தான் ஹாசன். பாத்திமா சம்பாதித்து வந்திருந்த உணவு, உடை, பணம் முதலியவற்றைக் கண்டதும் அவன் பெரும் மகிழ்ச்சி அடைந்தான். மறுநாளும் பாத்திமா கடைவீதிக்கு சென்றாள். முதல்நாள் புளுகியது போலவே புளுகினாள்! அன்றும் நல்ல வருமானம் கிடைத்தது இப்படியே தினமும் செய்து வந்தாள்.
எவ்வளவு நாட்களுக்குத்தான் இப்படியே செய்யமுடியும்! கடைக்காரர்கள் அலுத்து போய் விட்டார்கள் வெறுத்து துரத்த ஆரம்பித்தார்கள். சேச்சே…போ போ..!! உனக்கு வேறு வேலை இல்லை! இனிமேல் இந்த பக்கம் தலை காட்டவே கூடாது, தினசரி உனக்கு அள்ளிக் கொடுக்க இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?? உனக்கு உறவினர் ஒருவர் கூட இல்லையா?? அவர்களிடத்திலே போய் உன் கஷ்டத்தை சொல்லேன் என்று எரிந்து விழுந்தார்கள்.
பாத்திமாவுக்கு அன்று வரும்படி வருமானம் கிடையாது. தலை குனிந்தபடியே வீடு திரும்பினார் அன்றிரவு ஹாசன் இடத்திலே நடந்ததைச் சொன்னாள்.
ஹாசன் அவள் கூறியதை கவனமாகக் கேட்டான். பிறகு சரி அதற்கு என்ன அவர்கள் நம் உறவினர் வீட்டுக்கு தானே போக சொன்னார்கள்? அதுவும் நல்ல யோசனைதான்!! நாளையிலிருந்து நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? நம் உறவினர்கள் ஒவ்வொருவரையும் போய் பார்த்து நான் சிறையில் இருப்பதாக கூற வேண்டும். என்னை மீட்பதற்கு பண உதவி வேண்டுமென்று என்று கூறவேண்டும். அவர்கள் பணம் தருவார்கள், அந்த பணத்தை பத்திரமாக கொண்டுவந்து வீடு சேர்க்க வேண்டும் எப்படி என் யோசனை என்றான்??
உடனே பாத்திமாவின் முகத்தில் “மகிழ்ச்சி” தாண்டவமாடியது. சரி நாளையே போகிறேன் என்றாள். மறுநாள் முதல் ஒவ்வொரு உறவினர் வீடாகச் சென்று ஹாசன் சொல்லிக் கொடுத்தது போல் சொன்னாள் அவர்களும் அவளுடைய பேச்சை நம்பி விட்டார்கள்!
தங்களால் முடிந்த உதவியை செய்தார்கள். உறவினர்களில் ஒருவரைக்கூட அவள் விடவில்லை எல்லோரிடமும் வசூல் செய்து விட்டால்! இப்படியே சில நாட்கள் செய்து வந்தால், எவ்வளவு நாட்கள் தான் இப்படியும் செய்யமுடியும்? உறவினர்களுக்கு அவள் பேரில் சந்தேகம் ஏற்பட்டது வரவர சந்தேகம் வலுத்தது.
ஹாசன் சிறையில் இருப்பதாக தெரியவில்லை! இவள் பொய் சொல்கிறாள் என்று சிலர் பேசிக்கொண்டார்கள். இந்தச் செய்தி பாத்திமாவுக்கு எப்படியோ எட்டிவிட்டது. சரி இனி இவர்களிடம் சென்றால் ஆபத்து உள்ளதையும் பிடுங்கிக்கொண்டு விரட்டி விடுவார்கள் என்று எண்ணினாள் உடனே நேராக வீட்டுக்கு வந்து விட்டாள்.
அன்று நடந்தவற்றைக் கூறினாள் ஹாசன் மிகுந்த வருத்தம் அடைந்தான். சரி வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று பார்க்கலாம் என்று பெருமூச்சுடன் கூறினான்!
மறுநாள் இரவு அரண்மனையிலிருந்து ஹாசன் வீட்டுக்கு வந்ததும், வாய்க்குள் இருந்து எதையோ எடுத்தான்! பாத்திமா அதை பார்த்தாள், ஆ.. இது என்ன “வைர மோதிரம்” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள். சத்தம் போடாதே!! இதை நான் அரண்மனையில் இருந்து கிளப்பி கொண்டு வந்துவிட்டேன் என்று மெதுவாக கூறினான் ஹாசன்.
“ராஜாவுக்கு தெரிந்தால்…??
ஆமாம்! இந்த மோதிரத்தை தான் அவர் ஞாபகம் வைத்திருக்க போகிறாரா?? அவருக்கு எத்தனையோ மோதிரங்கள், இதைப்பற்றி அவர் நினைக்கக் கூடமாட்டார் என்று கூறிவிட்டான் ஹாசன்.
அன்று முதல்! தினசரி வீட்டுக்கு வரும்போது அரண்மனையிலிருந்து ஏதாவது ஒரு விலை உயர்ந்த பொருளை அவன் எடுக்காமல் வரமாட்டான். பாத்திமாவும் இன்று என்ன கொண்டு வரப் போகிறாரோ?? என்ற ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
இப்படியே இந்த “திருட்டு வேலை” பல நாள் நடந்து வந்தது. ஹாசனும் தந்திரமாக இதை செய்து வந்தான்! ஒருநாள் ஹாசன் தன் மனைவியிடம் பாத்திமா இந்த நகைகளை நாம் விற்று பணமாக்கி விடவேண்டும்! ஆகையால் நான் இவைகளை ஒரு மூட்டை கட்டிக்கொண்டு வெகுதூரத்தில் உள்ள ஒரு பட்டினத்திற்கு போகிறேன் என்றான். வேண்டாம் வெளியூர் போனால் “பணச்செலவு” உள்ளூரிலேயே நான் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடுகிறேன்! யாராவது கேட்டால் உறவினர் கொடுத்ததாக கூறி விடலாம் என்றால் பாத்திமா… ஆமாம் நீ சொல்வது சரி என்றான் ஹாசன்.
மறுநாள் காலை நேரம், பாத்திமா தங்கக் காப்பு ஒன்றை எடுத்துக்கொண்டு கடைவீதிக்கு சென்றால், அங்கு அவள் அதை விற்கப் போகும் சமயத்தில்! அரண்மனை சேவகன் ஒருவன் பார்த்து விட்டான், உடனே அவள் அருகே வந்து காப்பை வாங்கிப் பார்த்தான் அதில் “அரண்மனை முத்திரை” இருந்தது அந்த இடத்திலேயே பாத்திமா கைது செய்யப்பட்டாள்.
அவளை அடித்து, உதைத்து கேட்டார்கள் அவள் உண்மையை கூறிவிட்டாள். அரண்மனையில் வேலை பார்க்கும் கணவன் ஹாசன்தான் இதற்கு காரணம் என்பது தெரிய வந்தது. உடனே ஹாசனையும் கைது செய்தார்கள்! அவர்களுடைய வீட்டை சோதனை செய்தார்கள் அரண்மனை சாமான்கள் அங்கே ஏராளமாக இருந்தன!
உடனே அங்கிருந்த பொருட்கள் எல்லாவற்றையும் சேவகர்கள் எடுத்துக்கொண்டார்கள் ஹாசனையும், பாத்திமாவை அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.
இதற்குள் இந்த செய்தி ஊரெங்கும் பரவி விட்டது! கடைக்காரர்களும், பாத்திமாவின் உறவினர்களும் ஆத்திரப்பட்டு அவர்கள் எல்லோரும் உடனே அரண்மனைக்கு ஓடிவந்து நடப்பதை கவனித்தார்கள்.
ஹாசனும் பாத்திமாவும் செய்த குற்றத்தை அரசன் தீர விசாரித்தான் முடிவில் தீர்ப்பு கூற ஆரம்பித்தான்…
நீங்கள் கடைக்காரர்களை ஏமாற்றிப் பொருள் சேர்த்தீர்கள் இது முதல் குற்றம்! இதற்காக உங்களுக்கு அதிகமான அபராதம் விதிப்பதோடு பல ஆண்டுகள் சிறையில் போட வேண்டும். உங்கள் உறவினரிடம் பொய் கூறி பண உதவி பெற்றீர்கள் இது இரண்டாவது குற்றம்! இதற்காக உங்களை நன்றாக அடி அடி என்று தோல் உரியும் வரை அடிக்க வேண்டும்.
அரண்மனை பொருட்களை கொள்ளையடித்தீர்கள் இது மூன்றாவது குற்றம்! இதற்காக உங்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! அரசன் கூறியதுமே ஹாசனும், பாத்திமாவும் நடுநடுங்கி கண்ணீர் விட்டனர்!! அரசன் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்டனர்… அப்போது அரசன் அவர்களை பார்த்து ஒரே ஒரு நிபந்தனை அதன்படி செய்தால் உங்களுக்கு இந்த தண்டனைகள் கொடுக்க மாட்டேன்!! அது என்ன நிபந்தனை தெரியுமா?? நீங்கள் மோசம் செய்து சம்பாதித்த இவ்வளவு பொருட்களையும் நீங்களே எடுத்துக்கொண்டு வீடு செல்ல வேண்டும்!! ஆமாம் இப்போதே உங்கள் இருவர் கழுத்திலும் இதைக் கட்டிவிடச் சொல்கிறேன் என்றான் அரசன்.
இதை அரசன் கூடியதும் ஹாசனுக்கும், பாத்திமாவும் ஒரே ஆச்சரியமாக இருந்தது அவர்கள் தங்களுடைய காதுகளை நம்பவில்லை நிஜமாகவா?? என்று அவர்கள் மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டனர்.
அப்போது அரசன் மேலும் கூற ஆரம்பித்தான்! இந்த ராஜ்ஜியத்தில் ஆணும், பெண்ணும், குழந்தையும் யாராக இருந்தாலும் சரி அவர்கள், இந்த இருவர்களிடம் இருந்து ஒரு காசுக்கூட வாங்க கூடாது அப்படி யாராவது வாங்கினால் அவர்களுக்கு நிச்சயம் தூக்கு தண்டனை கிடைக்கும் இது என் உத்தரவு என்றான்.
ஹாசனும் பாத்திமாவும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். அரசர் நமக்கு எல்லாவற்றையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். அத்துடன் நம்மிடமிருந்து எவரும் ஒரு காசுக்கூட வாங்க கூடாது என்றும் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார். அடடா அவர் எவ்வளவு நல்ல அரசர்! நம்முடைய பணத்திற்கு இனி எவனும் ஆசை படமாட்டான் கொள்ளைக்காரர்களை பற்றிய கவலையே இல்லை என்று எண்ணி மகிழ்ந்தனர்.
அன்று முதல், அவர்கள் வீட்டு வாசலில் அரண்மனை சேவகர்கள் காவல் புரிந்தனர். அவர்கள் போகும் இடத்திற்கெல்லாம் சேவகர்களும் கூடவே சென்றனர். இதனால் அவர்களை நெருங்குவதற்கு கூட பொது மக்கள் அஞ்சினர்.
ஹாசனும், பாத்திமாவும் கடையில் சென்று அவர்கள் விலைக்கு ஏதாவது சாமான் கேட்டால்… கடைக்காரர்கள் அடேயப்பா நாங்கள் தரமாட்டோம்!! உங்கள் பணத்தை வாங்கினால் எங்கள் உயிருக்கு ஆபத்து… போய் வாருங்கள் என்று கூறினர்!
இப்படியே அவர்கள் எதை வாங்கப் போனாலும் கிடைப்பதில்லை. நாள் ஆக ஆக மிகவும் கஷ்டப்பட்டார்கள். பணத்தை கொடுக்க ஹாசனும் பாத்திமாவும் தயாராக இருந்தாலும்? சாப்பிட ஆதாரமும் கிடைக்கவில்லை!! உடுக்க உடையும் கிடைக்கவில்லை!! எப்படி வாழ்க்கை நடத்துவது??
சிறிதுகாலம் பச்சைக் காய்களையும், கிழங்குகளையும் சாப்பிட்டு வந்தார்கள். எவ்வளவு நாட்கள்தான் இப்படியே காலம் தள்ள முடியும். பணமிருந்தும் பரதேசியைக் காட்டிலும் கேடுகெட்ட நிலையில் வாழ வேண்டியிருக்கிறதே என்ற உணர்ச்சி அப்போதுதான் அவர்களுக்கு தோன்றியது!! இப்படியே இருந்தால் சீக்கிரம் செத்து சுடுகாடு சேர வேண்டியதுதான் என்பதை அறிந்தார்கள்…
கடைசியாக அவர்கள் தங்களிடம் இருந்த பொருட்களை எல்லாம் இரண்டு மூட்டைகளாக கட்டினார்கள். ஆளுக்கு ஒன்றாக எடுத்துக் கொண்டு அரண்மனையை நோக்கி நடந்தார்கள் அரசனின் காலடியில் போய் விழுந்தார்கள்…
அரசே இந்த பொருள்களை எல்லாம் யாராவது எடுத்துக் கொள்ளட்டும்!! எங்களுக்கு இந்த பொருள்களில் எதுவுமே வேண்டாம். எங்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள், நியாயமாக உழைத்து நியாயமாக சம்பாதித்து, எல்லோரையும் போல் உண்டு, உடுத்தி அமைதியாக வாழ்கிறோம் என்று கெஞ்சி கேட்டனர்.
அரசன் உடனே சேவகர்களை அழைத்தான். இந்த இரண்டு மூட்டைகளையும் எடுத்துச் செல்லுங்கள் இவர்களிடம் ஏமாந்த கடைக்காரர்களிடம் ஒரு மூட்டையையும், உறவினர்களிடம் மற்றொரு மூட்டையையும் கொடுத்துவிடுங்கள் என்று உத்தரவிட்டான்!
பிறகு ஹாசனையும், பாத்திமாவையும் பார்த்து இப்பொழுதாவது “பணத்தின் மகிமை” தெரிகிறதா…?? பணம் என்பது ஒரு சின்னம்தான்! நல்ல வழியில் சேர்க்க வேண்டும்! அதை போல எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல வழிகளில் உபயோகப்படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதற்கு மகிமை உண்டு. நமக்கும் மகிழ்ச்சி உண்டு!! பணத்தை பெட்டியிலோ அல்லது பையிலோ வைத்துக்கொண்டு உண்ணாமல், உடுத்தாமல் சேர்த்து வைத்திருந்தால் அதற்கும் மகிமை கிடையாது, நமக்கும் மகிழ்ச்சி கிடையாது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள் என்றான்!
~ஆம்! அரசே ஆம்! இப்பொழுது “நன்றாக தெரிந்து கொண்டோம்” என்றனர் ஒரே குரலில் ஹாசனும் பாத்திமாவும்…