கட்டுரைகள்

“ஆட்சி மொழிக் காவலர்” கீ. இராமலிங்கனார்…!!

கீ. இராமலிங்கனார்!

  • தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் வருவதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சித்துறை சொற்களை அகரவரிசையில் தொகுத்து ‘ ஆட்சிச்சொல்’ (1940) என்ற பெயரில் நூலாக வெளியிட்ட பெருமை இவருக்கே உண்டு.
  • இராமலிங்கனாருக்கு ‘ தமிழ்’ ஒரு கண் என்றால், ‘ சைவநெறி மற்றொரு கண்ணாகும். இவர் எழுதிய தமிழ் ஆட்சிச்சொற்கள் (1959), ஆட்சிச் சொல் அகராதி (1958), ஆட்சித்துறைத் தமிழ் (1968), ஆட்சித்தமிழ் (1976) தமிழில் எழுதுவோம் (1978) ஆகிய நூல்கள் தமிழுக்கு மகுடம் சூட்டுபவை.
  • தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற முனைப்பில் ஆட்சிச் சொற்களைத் தொகுத்து நடைமுறைப்படுத்தி, தொண்டு செய்த அறிஞர் ஆவார். இதனால் இவர் ஆட்சிமொழிக் காவலர் என அழைக்கப்படுகிறார்.

“ஆட்சி மொழிக் காவலர்” கீ. இராமலிங்கனார்...!!

  • சென்னைக்கு அருகில் உள்ள கீழச்சேரி என்னும் கிராமத்தில் இரத்தின முதலியார் பாக்கியத்தம்மாள் இணையருக்கு 1899 ஆம் ஆண்டு இராமலிங்கனார் பிறந்தார் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியில் பயின்றார்.  ‘சீயோன்’ பள்ளியில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தார்.  ‘வெஸ்லி’ கல்லூரியில் பயின்றபோது ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க. விடமும், ‘சைவப் பாதிரியார்’ சச்சிதானந்தம் பிள்ளையிடமும் கல்வி கற்றார். பின்னர், பச்சையப்பன் கல்லூரியில் பயின்று இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்றார்.
  • அறிஞர் கீ. இராமலிங்கனார் தமிழகத் தலைமைச் செயலகத்தில் மேனிலை எழுத்தராகவும், சார் பதிவாளராகவும், நகரவை ஆணையராகவும், கல்லூரி முதல்வராகவும், தொழிலாளர் நல அலுவலகராகவும் பல்வேறு பொறுப்புகளில் வீற்றிருந்தார்.  எந்நிலையிலும், எந்தொழிலைச் செய்தாலும், தமிழின் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தவர். தமிழின் வல்லமையைத் தமது சொல்லாலும், செயலாலும் தமிழருக்கு உணர்த்திய தமிழ்ச் செம்மல்.
  • இந்திய நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் விடுதலை அடைந்தது. வெள்ளையர் ஆட்சி மாறியதேயொழிய, ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடர்ந்தது.  இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்களும் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தையே கொண்டிருந்த நிலையில், பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியில் ஆட்சி நடந்தால்தானே, அது ‘தன்னாட்சி’ எனும் தகுதியைப் பெற முடியும் என்னும் சிந்தனை தோன்றியது.
  • ‘தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாகத் தமிழைப் பயன்படுத்த இயலுமா?  ஆங்கிலத்தில் எழுதுவது போல், தமிழில் எழுத முடியுமா?  தமிழில் எழுதினால் வரைவுகளும், குறிப்புகளும் பிறருக்குப் புரியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் ‘தமிழர்கள்’ சிலர்.
  • அனைத்துத் தடைகளையும், எதிர்ப்புகளையும் புறந்தள்ளி, தமிழகத்தில் 1956 ஆம் ஆண்டு ‘ஆட்சி மொழிச் சட்டம்’ நிறைவேற்றப்பட்டது.  ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலம் முன்னரே, அறிஞர் கீ.இராமலிங்கனார், தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கினார்.  தாம் தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார்.  ‘ஆட்சிச் சொல்’ என்னும் அந்நூல், அவரது தமிழ்த் திறத்தையும், தமிழுணர்வையும், தமிழார்வத்தையும் வெளிப்படுத்தியது.
  • ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே, சார்பதிவாளராகப் பணிபுரிந்த போது, மக்கள் தங்கள் சொத்துக்களை ஒருவரிடமிருந்து ஒருவர் கைமாற்றம் செய்யும் பத்திரங்களில் முழுவதுமாகத் தமிழே இடம் பெறத்தக்க வழிமுறைகளைத் தெரிவித்து ஊக்குவித்தார்.  தமிழில் எழுதும் பத்திரங்களை எவ்விதத் தடையுமின்றிப் பதிவு செய்தார்.

“ஆட்சி மொழிக் காவலர்” கீ. இராமலிங்கனார்...!!

  • அறிஞர்.கீ.இராமலிங்கனார், சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடிநாயக்கனூர் முதலிய நகரங்களில் நகராட்சி ஆணையராகப் பணியாற்றினார்.  அப்போது, நகராட்சியின் தெருக்களுக்கு, ‘இளங்கோ தெரு’, ‘தொல்காப்பியர் தெரு’, ‘அப்பர் தெரு’, ‘கபிலர் தெரு’, ‘சிலப்பதிகாரத் தெரு’, ‘மணிமேகலை தெரு’ எனத் தமிழிலக்கியங்கள் மற்றும் புலவர்கள்  பெயர்களைச்  சூட்டி மகிழ்ந்தார்.  மேலும், நகரவைகளில் இயன்ற அளவு தமிழை ஆட்சி மொழியாக நடைமுறைப்படுத்தினார் ‘நகராட்சி முறை’ எனும் நூலை 1954 ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டார்.
  • ஆட்சிக்குரிய தமிழ்ச் சொற்கள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை ‘தமிழ்நாடு’ நாளிதழில், அது வாரந்தோறும் வெளியிட்ட ஞாயிறு மலர்கள் மூலம் தொடர்ந்து எழுதி வந்தார்.  ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் அரிய நூலை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டார்.
  • அறிஞர். கீ. இராமலிங்கனார்1958 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார்.  அவர் பொறுப்பேற்ற பின்னர், நாளுக்கு நாள் ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணி தீவிரமடைந்தது.  ‘தமிழ் வளர்ச்சி இயக்கம்’ என்ற துறை உருவாக்கப்பட்டது.  தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது.  கீழமை நீதி மன்றங்களில் தீர்ப்புரைகள் தமிழில் எழுதப்பட்டன.  சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் அறிஞர் இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.
  • ‘ஆட்சிச் சொல் அகராதி’, ‘ஆட்சித்துறைத் தமிழ்’, ‘ஆட்சித் தமிழ்’, ‘தமிழில் எழுதுவோம்’ எனப் பல நூல்களை எழுதித் தமிழுக்கு வலுசேர்த்துள்ளார்.
  • அருந்தமிழ்ச் சொற்களஞ்சியத்தை ஆக்கி ஆட்சித் தமிழ் அறிஞராக விளங்கினார்!  ‘ஆட்சி மொழிக் காவலர்’ எனும் பெயரையும் பெற்றார்.  தமிழை ஆட்சிமொழியாக்கிடப் பாடுபட்டவர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்தார். அதனால், ‘ஆட்சிச் சொற் சிற்பி’ எனத் தமிழறிஞர்களால் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார். இந்திய நாட்டில், தமிழர்கள் வாழும் திருத்தலங்களுக்கெல்லாம் சென்று, தமது கருத்தாழமிக்க சொற்பொழிவுகளால் தமிழுணர்வை ஊட்டினார்.
  • ‘வழிகாட்டும் வான் பொருள்’, ‘உண்மை நெறி விளக்கம்’, ‘திருவெம்பாவை’ ‘ஐந்து நிலைகள்’ முதலிய சமயம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். மேலும், அவர் எழுதிய, ‘திருமுறைச் சமுதாயம்’, ‘தமிழ் மணமுறை’ ஆகிய சமுதாயம் சார்ந்த நூல்கள் தமிழர் பண்பாட்டின் பாதுகாப்புப் பெட்டகங்கள் ஆகும்.
  • ‘மஞ்சள் மகிமை’ என்ற கவிதை நாடகத்தையும் படைத்துள்ளார்.  ‘ஆட்சிச் சொற்காவலர்’, ஆட்சிச் சொற் சிற்பி’, ‘செந்தமிழ் வித்தகர்’, ‘செந்தமிழ் விளக்க வள்ளலார்’ ‘நற்றமிழ் நம்பி’ ‘தமிழ்மொழிக் காவலர்’ ‘தமிழ்ச் சுடர்’ எனப் பல்வேறு பட்டங்களால் சிறப்பிக்கப்பட்டார்.
  • தமது இறுதி மூச்சுள்ளவரை தமிழின் செழுமைக்கும், தமிழின் வளர்ச்சிக்கும் தொண்டாற்றிய அறிஞர் கீ.இராமலிங்கனார் 1986 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.  ஆட்சி மொழித் தமிழுக்குப் பாடுபட்ட அவரது பெயர் தமிழ் மொழி வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.
  • இந்திய விடுதலைக்குப்பின் தமிழகத்தில் 1956 ஆம் ஆண்டுதான் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இராமலிங்கனார் ஆட்சி மொழிச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னரே, தமிழ் ஆட்சி மொழியாக வேண்டுமென்ற நீண்ட கால நோக்கத்தின் அடிப்படையில், ஆட்சித்துறைச் சொற்களை அகர வரிசையில் தொகுக்கத் தொடங்கி, அவ்வாறு தொகுத்த சொற்களைக் கொண்ட நூலொன்றை ஆட்சி சொல் என்றபெயரில் 1940 ஆம் ஆண்டு வெளியிட்டார். 
  • ஆட்சிச் சொற்கள் சில எனும் அரிய நூலை 1957 ஆம் ஆண்டு வெளியிட்டார். இராமலிங்கனார் 1958 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆட்சி மொழித்துறை அலுவலராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்ற பின்னர், நாளுக்கு நாள் ஆட்சி மொழியின் வளர்ச்சிப் பணி தீவிரமடைந்தது. தமிழ் வளர்ச்சி இயக்கம் என்ற துறை உருவாக்கப்பட்டது. 
  • தமிழகத்தின் அரசு அலுவலகங்களிலும், கல்வித் துறையிலும், வனத்துறையிலும், மாவட்ட ஆட்சித் துறையிலும், தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட்டது. கீழமை நீதி மன்றங்களில் தீர்ப்புரைகள் தமிழில் எழுதப்பட்டன. சட்டத்துறை ஆட்சிமொழி ஆணையத்திலும் அறிஞர் இராமலிங்கனார் உறுப்பினராகச் செயல்பட்டார்.“ஆட்சி மொழிக் காவலர்” கீ. இராமலிங்கனார்...!!

தமிழர் இல்ல திருமணத்தில் ஆரிய புரோகிதரின் சமசுகிருத மொழியை ஏற்கக் கூடாது என்பதை பின்வருமாறு கூறுகிறார்:

‘ தாயை நீக்கி ஒருவன் மணஞ் செய்து

கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம்

பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி

மணஞ்செய்து கொள்வோர்களை தெய்வமும்

தமிழினச் சான்றோர்களும் பழிப்பர் என்று

தமிழர்கள் அறிதல் வேண்டும்’

 

“ஆட்சி மொழிக் காவலர்” கீ. இராமலிங்கனார்  பிறந்த நாள் இன்று நவம்பர் 12.

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button