Site icon ழகரம்

தமிழர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மருது பாண்டியர்கள்…!!

தமிழர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மருது பாண்டியர்கள்…

சிப்பாய் கலகத்திற்கு முன்பே தென்னிந்தியாவில் வெடித்த புரட்சி ஆங்கிலேயரை திணறச் செய்தது. ஆங்கிலேயர்களை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 வரை ஆயுதமேந்தி போராடினர். சிவகங்கை சீமை மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக சாதி, மத, இன வேறுபாடின்றி அனைவரையும் ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களை விரட்ட திருச்சியில் பிரகடனம் செய்தனர் இது வெள்ளையர்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

தற்போதைய விருதுநகர் மாவட்டம் முக்குளம் என்ற கிராமத்தில் பழனியப்பன் சேர்வை என்பவருக்கும் அவரது மனைவி பொன்னாத்தாள் என்பவருக்கும் மகனாக 1748 டிசம்பர் 15 பிறந்தவர் பெரியமருது பாண்டியர். 1753 ஏப்ரல் 20 ஆம் நாள் பிறந்தவர் சின்ன மருதுபாண்டியர்.. இவர்கள் வெள்ளை மருது என்றும், சின்னமருது என்றும் அழைக்கப்பட்டனர். சிவகங்கை சீமையின் அரசர் முத்துவடுகநாதர் படையில் போர் வீரர்களாக இருந்தனர்.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி 1801 அக்டோபர் 24ஆம் நாள் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டார்கள். சிவகங்கை அரசர் முத்துவடுகநாதர் காளையார் கோயில் போரில் பலியானதால் அவரது பட்டத்தரசி வேலுநாச்சியாருக்கு துணையாக நின்று, ஹைதர் அலி படையின் உதவியோடு 1780 இல் சிவகங்கை சீமையை மீட்டு வேலுநாச்சியாரை மீண்டும் அரியணையில் அமர்த்தினர்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை மருது சகோதரர்கள் 1801ஆம் ஆண்டு உருவாக்கினர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போர் தொடுக்க அறைகூவல் விடுத்தனர் திருச்சி திருவரங்கம் முதலிய இடங்களில் அறிக்கைகள் ஒட்டப்பட்டது இது திருச்சிராப்பள்ளி பிரகடனம் என்று அழைக்கப்பட்டது. அந்த பிரகடனத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போர் தொடுக்க அறிவுறுத்தப்பட்டது. சிப்பாய் கலகத்திற்கு முன்பு நடந்த தென்னிந்திய புரட்சியே முதல் விடுதலைப் போராட்டமாக வரலாற்று ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

அன்னியர்களின் வரி வசூலுக்கு எதிராகவும், தமிழர்கள் மீது அன்னியர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் மருது சகோதரர்கள் தொடர்ந்து போராடினார். கட்டபொம்மன் சகோதரனுக்கு அடைக்கலம் கொடுத்தனர் இவ்வாறாக தொடர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டதால் மருது சகோதரர்களை அடக்க ஆங்கிலேயர்கள் முனைப்பு காட்டினர்.

மருது சகோதரர்கள் திருப்பத்தூர் கோட்டையில் 24-10-1801 அன்று தூக்கில்போடப்பட்டு வீரமரணம் அடைந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய 500க்கும் மேற்பட்ட விடுதலை வீரர்கள் முறையான விசாரணை இன்றி தூக்கிலிடப்பட்டனர். சிவகங்கை சரித்திர கும்மி, சிவகங்கை சரித்திர அம்மானை, நாட்டுப்புறப் பாடல்களின் வழியாக மருது சகோதரர்களுக்கு எதிராக ஆங்கிலேயர்களின் அழிப்பு நடவடிக்கைகள் தெரியவருகிறது.

மருது சகோதரர்களின் முழு உருவ சிலை, நினைவிடம் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழர்கள் அக்டோபர் 27 குருபூஜை தினத்தில் காளையார் கோயிலில் நினைவிடத்தை வணங்கி மருது சகோதரர் வீரத்தைப் போற்றி வருகின்றனர்.

Exit mobile version