கேரளர்கள் ஆன செந்தமிழ் சேரர்களின் வரலாறு…!!
- சேர நாட்டில் வாழ்ந்த மக்கள் சேர நாட்டுச் செந்தமிழ் மக்களாவர். பாண்டி நாட்டிலும் சோழ நாட்டிலும் வாழ்ந்த மக்களைத் தமிழர் என்பது மரபாதலின், அம் மரபின்படியே சேர நாட்டவர் செந்தமிழ் மக்களாகின்றனர், பாண்டி நாட்டுத் தமிழர்க்குப் பாண்டியரும், சோழநாட்டுத் தமிழர்க்கு சோழரும் வேந்தராயினது போலச் சேரநாட்டுத் தமிழ்த் தமிழ்மக்கட்க்குச் சேரர் வேந்தராவர். இந் நாட்டுக்குக் கிழக்கெல்லையாகச் சுவர்போல் தொடர்ந்து நிற்கும் மேலை மலைத்தொடர். இது தெற்கே பொதியமலை முதல் வடக்கே தபதியாற்றங்கரை வரையில் நிற்கிறது. இந் நெடுமலைத்தொடர் வடர்களால் சஃயாத்திரி யென்று கூறப்படுகிறது. இத் தொடரைக் குடவரையெனவும், சேர நாட்டவரைக் குடவர் எனவும் பொதுவாகக் கூறுவது தமிழ்நாட்டவர் வழக்கம்.
- முதல் இராராச சோழனுடைய கல்வெட்டுகள் சேரநாட்டைக் குடமலை நாடு எனக் கூறுவது காணலாம், சேக்கிழாரடிகள் “மாவீற்றிருந்த பெருஞ் சிறப்பின் மன்னும் தொன்மை மலை நாடு” என்று, சேர மன்னர்களைப் “பாவீற்றிருந்த பல்புகழார்” என்றும் பாராட்டிக் கூறுவர்.
- இச்சேர மன்னர் மலைநாட்டில் வாழ்ந்தமையின் மலைகளிலும் மலைச்சரிவுகளிலும் மண்டியிருந்த பெருங் காடுகளில் வேட்டம் புரிவதையே தொடக்கக் காலத்தில் கொண்டிருந்தனர்; அதனால் சேரர் கொடியில் வில்லே பொறிக்கப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் பனை மரங்கள் காடுப்போல் செறித்திருந்தன; அதனால், அவர்கள் தமக்கு அடையாள மாலையாகப் பனந்தோட்டால் மாலை தொடுத்து அணிந்துகொண்டனர். தொல்காப்பியரும் சேரரது சிறப்பாக பனந்தோட்டு மாலையை எடுத்துரைத்துள்ளார்.
- சேரநாடு மேலைக் கடலைச் சார்ந்து கிடத்தலின் சேரர்கள் கடலிற் கலஞ் செலுத்துதலிலும் சிறந்திருந்தனர். கிறித்துப் பிறப்பிற்கு மூவாயிரம் ஆண்டுகட்கு முன்பே மேலையுலகத்து சால்டியா நாட்டுக்கு இந் நாட்டுத் தேக்கு மரங்கள் மரக்கலங்களில் கொண்டு போகப்பட்டன. பெட்ரோனியசு என்னும் மேனாட்டறிஞர் இந் நாட்டினின்றும் சென்ற ஆடை வகைகளை மிகவும் பாராட்டிப் பேசியிருக்கின்றார்; சேர நாட்டிலிருந்து மேலை நாடுகட்கு ஆண்டுதோறும் 4,86,679 பவுன் மதிப்புள்ள பொருட்கள் ஏற்றுமதியாயின என்று எழுதியுள்ளார். அந் நாளில் கடலகத்தே செல்லும் வணிகரின் கலங்களைத் தாக்கிக் கொள்ளை கொள்வதும், கடற்கரையில் வாழ்ந்த மக்கட்கு இன்னல்புரிவதும் தொழிலாகக்கொண்டு திரிந்த யாதர், கடம்பர் முதலானோரைக் கடலகத்தே எதிர்த்தமிழித்து மிக்க வென்றி எய்த வகையால், இச் சேர மன்னர்கள் கடல் வாணிகம் செய்வார்க்கு நல்ல அரண்செய்து வாழ்ந்தனர், அதனால், அந் நாளில் சேர நாட்டுக் கலங்களைக் கண்டாலே பிறநாட்டுக் கலங்கள் கடலில் உரிமையுடன் இயங்குவதற்கு அஞ்சின.
“சினமிகு தானை வானவன் குடகடல்,
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறர் கலம் செல்கலாது”
சேரநாடு பிரிவுகளாக இருந்தமைக்கான காரணமும், சேரர்கள் முடிசூடும் முறையும்!
- சேர நாட்டை ஆண்ட மன்னர்கள் தங்கள் நாட்டைக் குட்டநாடென்றும் குடநாடென்றும் பிரித்து ஒரு காலத்தே ஆட்சி நடத்தினர். வட பகுதியில் குடநாட்டின் பகுதியாய் வானவாசி நாட்டை அடுத்திருந்த கொண்கான நாட்டைச் சேரர் குடிக்குரிய நன்னன் மரபினர் ஆட்சி புரிந்தனர். காண்கான நாட்டின் கிழக்கில் உள்ள புன்னாடும் அந் நன்னன் மரபினர் ஆட்சியிலேயே இருந்தது. புன்னாட்டின் தெற்கில் குடநாட்டிற்கு கிழக்கில் இருந்த நாடு சேரர் குடியில் தோன்றிய வேளிர் தலைவரான அதியமான்கள் ஆட்சியில் இருந்தது; பின்னர்த் தகடூர் நாடு எனப் பெயர் வழங்கலாயிற்று.
- தெற்கே கோட்டாற்றுக்கரை கொல்லம் என்ற பகுதியை எல்லையாகக் கொண்ட குட்டநாட்டில் குட்டவரும், குடநாட்டில் குடக்கோக்களும் இருந்து சேரவரசைச் சிறப்பித்தனர். குட்டநாட்டுக்கு வஞ்சி நகரும், குடநாட்டுக்குத் தொண்டியும் சிறந்த தலைநகரங்களாகும். ஒரு குடியில் தோன்றிய இருவருள் முன்னவன் குட்டநாட்டிலும் பின்னவன் குடநாட்டிலும் இருந்து அரசியற்றுவன்.
- சில பல ஆண்டுகட்குப் பின்னர் அரச இளம்சிறுவர்கட்கு ஆட்சி நல்குதல் வேண்டிக் குட்ட நாட்டின் வட பகுதியையும் குடநாட்டின் தென் பகுதியையும் ஒன்றாய் இணைத்துப் பொறைநாடு எனத் தொகுத்துத் தொண்டியை அதற்குத் தலைநகராக்கினர். இவ்வாறே கொச்சி நாட்டின் வட கீழ்ப் பகுதி பூழிநாடு எனப் பிரிந்து இயலுவதாயிற்று. இந் நாடுகளில் ஆட்சி புரிவோருள் முன்னோன் எவனோ அவனே முடிசூடும் உரிமையுடைய சேரமானாவன். இவ்வாறாக சேரநாடு பண்டைநாளில் குட்டநாடு, குடநாடு, பொறைநாடு, கடுங்கோ நாடு எனப் பிரிந்திருந்தமை பெறப்படுகிறது. அதைப்போலவே வேந்தரும் “பல்குட்டுவர் வெல்கோவே”, “தெறலருந்தைனைப் பொறையன்”, “குடக்கோ நெடுஞ்சேரலாதன்”, “பாலைப்பாடிய பெருங்கடுங்கோ” என்று பெயர் கூறப்படுவராயினர். இவ்வாறு வேறு வேறாகக் கூறப்படினும், சேரமான் ஒருவனே ஒருகால்சேரல் என்றும், வானவன் என்றும், குட்டுவன் என்றும், இரும்பொறை என்றும் கூறப்படுவன். இதனால் இவர்கள் அனைவரும் சேரர்க்குடிக்குரியோர் என்பது துணிபாம்.
- பண்டைய காலத்தில் தமிழ்வேந்தர் அரசெய்திய முறை ஒரு தனிச் சிறப்பு உடையதாகும். ஒரு வேந்தனுக்கு மூவர் புதல்வர்களெனின் அவர்கள் ஒருவர்பின் ஒருவராக முடிச்சூடிக் கொள்வர். முன்னவன் முடிவேந்தனாக ஏனைய இருவரும் நாட்டின் இருவேறு பகுதிகளில் சிற்றரசாய் முடிவேந்தற்குத் துணைப்புரிவர். இம் மூவரும் முடிசூடியிருந்த பின்பே, இவர் மக்களுள் மூத்தவன் எவனோ அவன் முடிவேந்தனாவன்.
- இம்முறை இடைக்காலச் சோழ வேந்தரிடத்தும் இருந்திருக்கிறது. முதற் பராந்தகனுக்கு இராசதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் உண்டு. அவர்களுள் பராந்தகன் முடிசூடி இருக்கும்போதே இராதித்தன் இறந்தான். அதனால் பராந்தகனுக்குப் பின் கண்டராதித்தன் சோழவேந்தனாய் முடிசூடிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தன் ஆனான். அவனுக்கு முன்பே உத்தமசீலி மறைந்துப் போனான்.
- கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும், அரிஞ்சயனுக்குச் சுந்தரசோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழனே மூத்தவனாதலால் முதலில் அவனும், அவற்குப் பின் உத்தமசோழனும் முடிவேந்தராயினர்.
- உத்தம சோழனுக்குப் பின் அவன்மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும் போதே இறந்தமையின், இளையோனான முதல் இராசராசன் சோழன் முடிவேந்தனாய்த் திகழ்ந்தான். இதே முறைதான் பண்டை நாளைத் தமிழ்வேந்தர் அரசுரிமை முறையாக இருந்தது. ஆகவே, தந்தைக்குப் பின் மூத்த மகன்; அவற்குப்பின் அவனுடைய மூத்த மகன் என வரும் “அரசியல் தாயமுறை” தமிழ் நாட்டுக்குரியதன்று என அறியலாம்.
- இவ்வாறே சேர மன்னருள் உதியஞ்சேரலாதன் என்பானுக்கு இயமவரம்பன் நெடுஞ்சேரலாதன், பல்யானைச் செல் கெழு குட்டுவன் என மக்கள் இருவர் உண்டு. இமயவரம்பன் சேரமானாய் முடிசூடியிருந்த பின், அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேரமானாய் முடிசூடிக் கொண்டான். அவற்குப்பின் இமயவரம்பன் மக்களுள் மூத்தவனான களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் சேரநாட்டு முடிவேந்தராய் விளங்கினர்.
- பின்னர், அரசர் குடியிற் பிறந்த அரசிளஞ் சிறுவர்கட்கு அரசாளும் திறம் நல்கவேண்டி நாட்டைச் சிறு சிறு நாடுகளாக வகுத்து ஆளும் முறையுண்டாயிற்று; அதன் பயனாக ஏனை நாடுகளைப் போலச் சேரநாடு சிறுசிறு நாடுகளாகப் பிரிக்கவேண்டி வந்தது. இதனால் தான் “ஒரு நாழிகை தொலைக்குள் ஒன்பது நாடுகளைக் கடந்தாக வேண்டும்” என்ற கருத்துடைய பழமொழியொன்று இன்றும் மலையாளநாட்டில் வழங்குகிறது; இடைக்காலத்தில் சேரநாடு பதினெட்டுச் சிறுநாடுகளாகப் பிரித்தமைக்கும் இதுவே காரணம்.
சேரர் வரலாறு தொடரும்…