விதிகளை மீறி செயல்படுகிறதா…அமெரிக்கன் இன்டர்நேஷனல் பள்ளி? ஒரு மாணவனுக்கு 20 லட்சம் ஃபீஸ்!
சென்னையில், தமிழக அரசுக்கு சொந்தமான இடத்திலேயே இயங்கும் அமெரிக்கன் இன்டர்நேஷனல் என்ற பள்ளி, விதிகளை மீறி கொள்ளை அடித்து வருவதாகவும், மேலும் பல அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், இதனை பற்றி சிறிதும் கண்டு கொள்ளாத தமிழக அரசுக்கு எதிராக, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் ஆதாரத்தோடு, பள்ளியில் நடக்கும் அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.
சென்னை வேளச்சேரி அருகே, 1995 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தைகளுக்காக, அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையேயான இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்த பள்ளி நிறுவப்பட்டது. இந்தப் பள்ளியானது தமிழக அரசுக்கு சொந்தமான சுமார் 12.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பள்ளிக்குள் இரண்டு நூலகங்கள், இரண்டு உடற்பயிற்சி கூடங்கள், 25 மீட்டர் நீச்சல் குளம், டென்னிஸ் மைதானங்கள், கால்பந்து மைதானங்கள், ஆறு வழிப் பாதை, பல விளையாட்டு மைதானங்கள், இரண்டு சிற்றுண்டி சாலைகள் மற்றும் 800 இருக்கைகள் கொண்ட ஆடிட்டோரியம் ஆகியவை உள்ளன. மேலும் AISCக்கும், சென்னை விமான நிலையத்திற்கும், Cityக்கு செல்லவும் வெறும் சுமார் 6 கிலோமீட்டர்கள் தான். அதோடு இங்கு 30 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 850 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இப்படி தமிழக அரசுக்கு சொந்தமான 12.5 ஏக்கர் பரப்பளவில் ஹை பட்ஜெட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பள்ளி அமைந்துள்ள இடத்தின் தற்போதைய மதிப்பை கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவீர்கள். அந்த அளவிற்கு பல நூறு கோடி ரூபாய் மதிப்புடையது. அதாவது சுமார் இந்த இடத்தின் மதிப்பு 800 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த இடத்திற்கு தமிழக அரசானது மாதம் ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே மாத வாடகையாக வசூலித்து வருகிறது. ஆனால் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டு கட்டணமாக இந்த பள்ளியானது 20 லட்சம் ரூபாய் வசூலித்து, கட்டண கொள்ளை அடித்து வருகிறது. இப்படி இருபது லட்சம் ரூபாய் வசூலிக்கும் இந்தப் பள்ளிக்கு மாதம் வாடகையாக ஒரு லட்சம் மட்டுமே வாங்கும் தமிழக அரசுக்கு, இதில் என்ன பயன் இருக்கிறது, இது தமிழக மக்களை சுரண்டும் முயற்சி என்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் வசீகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
தமிழகத்தின் மற்ற தனியார் பள்ளிகள் அவர்கள் சொந்த இடத்தில் பள்ளிகள் அமைத்திருக்கும் போதிலும், தமிழக அரசு விதித்திருக்கும் விதிகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றன. ஆனால் இந்த அமெரிக்கன் பள்ளியில் கட்டணம் தொடங்கி, RTE எனப்படும் கல்விக்கான உரிமைச் சட்டம் வரை அரசு விதிகளை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இந்த பள்ளி இருப்பதால், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக உண்மைகள் அறியவும் இயலவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்தே இது தொடர்பான புகார்கள் எழுப்பப்படுவதாகக் குறிப்பிட்ட வசீகரன்,
அதிமுக , திமுக என இரு அரசுகளும் இந்தப் பள்ளி குறித்த புகார்களில் கவனம் செலுத்தவில்லை எனக் கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சியின்போது, PTR பழனிவேல் தியாகராஜனின் குழந்தைகள் இந்தப் பள்ளியில் படித்த போது, அதிக கட்டண வசூல் பற்றி அவரே குற்றம் சாட்டியதாகவும், ஆனால் தற்போது திமுக மௌனமாக இருப்பதாகவும் வசீகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சாமானிய மக்களுக்கோ அரசுக்கோ பயன் தராமல், அரசு இடத்தில் இந்தப் பள்ளி செயல்படவேண்டியதன் கட்டாயம் என்ன? மத்திய அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பும் அவர், இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் உரிய பதில் கிடைக்கும் வரை தொடர் முயற்சிகளும், போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.