அரசியல்செய்திகள்

கீழ்வெண்மணி குவியல் ஈகம் தமிழர்கள் அனைவர்க்கும் உரியது. சாதிப் பாகுபாட்டு, சாதி ஆதிக்கக் குறைகளைக் களைந்து கொள்ள அந்நாளில் உறுதி ஏற்ப்போம்! தமிழ்த்தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன்!

  • தக் குவியல் கொலை நடந்து 54 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால், அந்த வெண்மணித் தீ மேலும் ஒளிவிட்டு எரிந்து கொண்டுள்ளது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் கீழ்வெண்மணியில் 25.12.1968 அன்று ஓரு குடிசைக்குள் உயிர் காக்கக் குவிந்திருந்த உழவுத் தொழிலாளிகள் – ஒடுக்கப்பட்ட மக்கள் – முதியவர்கள் – பெண்கள் – குழந்தைகள் உட்பட 44 பேரை எரித்துக் கொன்று கரிக்கட்டை ஆக்கினர். சாதி ஆதிக்க – நிலக்கிழமை ஆதிக்கக் கொடியவர்கள்! இக்கும்பலின் தலைவன் கோபாலகிருட்டிண நாயுடு!
  • கொளுத்திக் கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் குற்றவாளிள் அல்லர் என்று விடுதலை செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
  • எரித்துக் கொல்லப்பட்டவர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் அவர்களுக்குத் தலைமை தாங்கிய சி.பி.எம். கட்சியின் உழவுத் தொழிலாளர்களும், உழவுத் தொழில் வேலைகளுக்கு – ஞாயமான கூலி உயர்வு வேண்டும் என்று கோரினர். இதற்காக வேலை நிறுத்தம் செய்தனர்; இதுதான் அவர்கள் செய்த “குற்றம்”!
  • கூலி உயர்வைக் கூட ஏற்றுக் கொண்டிருப்பார்கள் ஆதிக்கவாதிகள்! நம்மைக் கண்டால் கைகட்டி, அடிமையாய் வாழ வேண்டியவர்கள் – சரிநிகர்ச் சமானமாக – கூலி உயர்வு கேட்டுப் போராடும் “கொடுமையை” சாதியோடு இணைந்த நிலஉடைமை ஆதிக்கவாதிகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. தீ வைத்துக் கொளுத்தி எரித்துக் கொன்றார்கள்.
  • வெண்மணி மக்களின் உயிர் ஈகத்திற்குப் பிறகுதான் கூலி உயர்வு பற்றி – அதிகாரிகளின் அமைதிப் பேச்சுவார்த்தை – கூலி உயர்வு ஒப்பந்தங்கள் என்ற நாகரிக நடைமுறைகள் வந்தன. வெண்மணிப் படுகொலை வர்க்கப் போராட்டத்தின் விளைவு மட்டுமல்ல, சாதி ஆதிக்க எதிர்ப்பின் விளைவும் ஆகும்.
  • மனித உரிமை குறித்த விழிப்புணர்ச்சியும், வளர்ச்சியும் அதிகமாகி இருக்கும் இக்காலத்தில், வெண்மணி ஈகம் என்பது தமிழ் இனத்தின் – தமிழ்நாட்டு மக்களின் ஈகம் என்றே பொது நிலையில் அனைவராலும் பார்க்கப்பட வேண்டும். அதேபோல், சி.பி.எம். கட்சி, வெண்மணி ஈகியர் நினைவு மண்ணும் கட்டுமானங்களும் தங்கள் கட்சிக்கு மட்டுமே உரியது என்று கருதாமல் ஒட்டுமொத்த சமூகத்திற்குரிய ஈகம் என்றும், அதற்கான நினைவுச் சின்னம் என்றும் கருதி அதன் கதவுகளை அகலத் திறந்து விட வேண்டும்.
  • இன்று (24.12.2022) “இந்து தமிழ்” நாளிதழில், திருத்துறைப்பூண்டி வழக்கறிஞர் அரசு, எழுதியுள்ள வெண்மணிக் கட்டுரையில், மற்ற கட்சிகள் அமைப்புகள் – சுதந்திரமாக வந்து  வீரவணக்கம் செலுத்திக் கொள்ள வாய்ப்பளிக்காமல் – அதிகக் கட்டுப்பாடுகள் போடுவதைக் கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். மிகமிகச் சரியான அணுகுமுறை இது!
  • அப்போராட்டத்தை வழி நடத்தியது சி.பி.எம். கட்சி. அக்கட்சியின் உழவர் அமைப்பைச் சேர்ந்தவர்களே உயிரீகம் செய்தார்கள். அவ்வளவு பெரிய உயிரீகம், ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டிற்குரியது; ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எல்லாப் பிரிவு மக்களும் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும்.
  • தமிழ்ச் சமூகம் தன்னிடம் உள்ள சாதிப் பாகுபாட்டு, சாதி ஆதிக்கக் குறைகளைக் களைந்து கொள்ள அந்நாளில் உறுதி ஏற்க வேண்டும்!
  • வெண்மணி மக்களின் இவ்வளவு பெரிய குவியல் ஈகம் தமிழர்கள் அனைவர்க்கும் உரியது. மனித உரிமையில் அக்கறையுள்ள அனைத்து இன மக்களுக்கும் உரியது! அதன் ஏகபோகம் தன்னைவிட்டுக் கை நழுவிப் போகக் கூடாது என்று சி.பி.எம். கட்சி சிந்திக்கக் கூடாது. பல்வேறு அமைப்பினர் அங்கு வந்து வீரவணக்கம் செலுத்தும்போது அந்தந்த அமைப்பின் பெயரைச் சொல்லி வாழ்க முழக்கம் எழுப்புவார்கள். அதைத் தடுக்கக் கூடாது.
  • ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஐயா முத்துராமலிங்கத் தேவர் குருபூசைக்கும், ஐயா இமானுவேல் சேகரனார் குருபூசைக்கும் எல்லாக் கட்சியினரும் எல்லா சனநாயக அமைப்பினரும் சென்று பொதுவாக வணக்கம் செலுத்தி வருகின்றனர். வெண்மணி நினைவிடம் அப்படி அனைவர்க்குமான பொது வணக்க நிலையம் ஆக வேண்டும்.
  • தமிழ்நாடு அரசு, வெண்மணி நினைவு நாளில் அரசு சார்பில், வணக்கம் செலுத்தும் முறையைக் கொண்டு வர வேண்டும்! வழக்கம்போல், இவ்வாண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வெண்மணி சென்று வீரவணக்கம் செலுத்துகிறார்கள் வெண்மணி ஈகியர்க்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button