அரசியல்கட்டுரைகள்செய்திகள்
தன்னைத் தேடிவந்த “முதலமைச்சராகும்” வாய்ப்பையும், “அமைச்சர்” பதவியையும் விட்டுக்கொடுத்த நேர்மையாளர் கக்கன்.
“முதலமைச்சராகும்” வாய்ப்பையும், “அமைச்சர்” பதவியையும் விட்டுக்கொடுத்த நேர்மையாளர் கக்கன்.
- ஐந்தாண்டுக் காலம் பல்வேறு சமுதாய மேம்பாட்டு அமைச்சராகப் பணியாற்றியதால் நல்ல பேரும் புகழும் கக்கனுக்கு வந்து சேர்ந்தன.
- பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் கக்கன் நேர்மையான தன்னலம் கருதாத அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார், 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1962-67க்கான அடுத்த பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சியின் ஆணைப்படி மேலூர்த் தனித்தொகுதியில் கக்கன் போட்டியிட்டார். இந்த முறையும் திராவிட முன்னேற்றக் கழகம் கக்கனை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவில்லை என்றாலும், பொதுவுடமைக் கட்சி தனது வேட்பாளரை நிறுத்தியது. உண்மைத் தொண்டனான கக்கன், தமது எதிரணி வேட்பாளரைக் காட்டிலும் 16,495 வாக்குகள் அதிகம் பெற்று இரண்டாவது முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
- அந்தப் பொதுத்தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்ற காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது சட்டமன்றத் தலைவராகக் காமராசரைத் தேர்ந்தெடுத்தனர். அதனால், மூன்றாவது முறையாக அமைச்சரவை அமைக்கும் வாய்ப்பினைக் காமராசர் பெற்றார். அந்த அமைச்சரவையில் கக்கனும் அமைச்சரானார்.
- 1962ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் கக்கன் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். வேளாண்மை, உணவு, சிறுபான்மையினர் நலம், மதுவிலக்கு, கால்நடைக் காப்பு, அரிசனநலம் ஆகிய மிக முதன்மையான பொறுப்புகள் கக்கனிடம் ஒப்படைக்கப்பட்டன. எம்.பக்தவச்சலம், சோதி வேங்கடாசலம், ஆர்,வெங்கட்ராமன், வி.இராமையா, நல்லசேனாதிபதி சர்க்கரை மன்றாடியார், பூவராகன் ஆகியோர் கக்கனுடன் அமைச்சரவையில் இருந்த பிற அமைச்சர்களாவர்.
காமராசர் திட்டம்!
- நாட்டின் நலனைக் காக்கக் கட்சி நல்ல முறையில் இயங்க வேண்டும். அதற்காகக் கட்சியிலுள்ள மூத்தத் தலைவர்கள் அரசியல் பதவிகளை விட்டுக் கட்சிப்பணிக்கு வரவேண்டும் என்ற திட்டத்தைக் காமராசர் கொண்டுவந்தார். தாமே இத்திட்டத்தின் முன்னோடியாக நடக்க விரும்பிய காமராசர், முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அதனால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். காமராசரின் இச்செயல் புகழ்பெற்றது.
- அவ்வாறு முதல்வர் பதவியை விட்டு விலகிய போது அடுத்த முதல்வராகக் கக்கன் வரவேண்டும் என்பதில் காமராசர் ஆர்வம் கொண்டிருந்தார். காமராசர் தமது இந்த எண்ணத்தில் பிடிவாதமாக இருந்ததாகவும், கட்சியின் நலன் கருதிக் கட்சியின் செயற்குழு என்ன முடிவு எடுக்கிறதோ அதைச் செய்து கொள்ளுங்கள் என்று விட்டுவிட்டதாகவும் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
- நிலைமையை நன்கு உணர்ந்த கக்கன், தாமே முன்வந்து அமைச்சரவை மூத்த உறுப்பினர் எம்.பக்தவச்சலம் அவர்களை முதல்வராக முன் மொழிந்தார். இப்படி முகமலர்ச்சியோடு முன்மொழிந்ததைக் கண்ட பக்தவச்சலம் மனம் நெகிழ்ந்து போனார். பெருந்தலைவர் காமராசரின் உயர்ந்த உள்ளத்தையும் கக்கனின் விட்டுக் கொடுக்கும் நற்பண்பையும் இன்றும் பலர் நினைவு கூர்கின்றனர்.
- 1963ஆம் ஆண்டு அக்டோபர் மூன்றாம் நாள் பக்தவச்சலம் அரசின் முதல்வரானார். காமராசர் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் அனைவரையும் அப்படியே வைத்துக் கொண்டார்.
- கக்கனின் நல்லுள்ளத்தை வெகுவாகப் புகழ்ந்த பக்தவச்சலம் உள்துறை, நிதி, கல்வி, சிறை, தொழிலாளர் நலம், அறநிலையத்துறை, அரிசன நலம் போன்ற மிகப்பெரிய துறைகளின் பொறுப்பை வழங்கிக் கக்கனை உயர்த்தி மகிழ்ந்தார்,
- கக்கனுக்குப் பின்னால் இன்றுவரை எந்தவொரு தாழ்த்தப்பட்ட குடிமகனும் இவ்வளவு பெரிய பொறுப்புள்ள துறைகள் பெற்ற அமைச்சராக இருந்ததில்லை.
- மேலும், மைய அரசால் அகில இந்திய வீட்டுவசதி வாரிய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். உடல் நலக்குறைவின் காரணமாக அந்த வாரியக் கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளவே இல்லை. பதவி வந்ததால் கக்கன் மகிழவுமில்லை அதிலிருந்து நீக்கப்பட்டதால் வருந்தவுமில்லை. இவரை அரசியலில் ஒரு புரட்சித் துறவி எனலாம்.