கட்டுரைகள்அரசியல்

கி.ஆ.பெ விசுவநாதம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் கட்ட வரலாறு. Trichy KAP Viswanadham Anti-Hindi Agitations of TamilNadu.

கி.ஆ.பெ விசுவநாதம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் கட்ட வரலாறு:

  • அண்ணல்‌ விசுவநாதத்திற்குத்‌ தமிழ்‌ மொழியின் மீது அடங்காக்‌ காதல்‌ உண்டு. எந்த வழியிலாயினும்‌ அதற்கு ஊறு விளையும்‌ அறிகுறிகள்‌ தென்பட்டாலும்‌ அண்ணல்‌ வீறு கொண்டு எழுவார்‌. இந்தித்‌ இணிப்பு தமிழுக்குக்‌ கேடு விளைவிக்கும்‌ என்பதை நீள நினைந்து பார்த்தவர்‌ திருச்சி தந்த செம்மல்‌ விசுவநாதம்‌.

திருச்சிக்குப்‌ பெருமை: 

  • தமிழ்‌ என்றால்‌ மதுரை நினைவுக்கு வரும்‌. காரணம்‌, தமிழை வளர்த்த சங்கங்கள்‌ இருந்தமையால்‌; கவியரங்கேறிய அரசர்கள்‌ செங்கோலோச்சியதால்‌. இவை போன்றவற்றால்‌, பலர்‌ செய்த சாதனையால்‌, மதுரைக்குப்‌ புகழ்‌ வந்தது. திருச்சிக்குப்‌ பெருமை வந்தது இந்தி எதிர்ப்புப்‌ போராட்டம்‌ முதன்முதலாகத்‌ தொடங்கப்‌ பெற்றதால்‌; அதுவும்‌ முத்தமிழ்க்‌ காவலர்‌ கி.ஆ.பெ. விசுவநாதம்‌ முன்னின்று தொடங்கியதால்‌ ‘தமிழுக்கு ஆபத்து என்ற குறிப்பு தெரிந்தாலே முதன்முதலாகச்‌ சீறி எழுபவர்‌ முத்தமிழ்க்‌ காவலரே. இந்தியைக்‌ கட்டாய பாடமாகத்‌ திணிக்க அரசு முயன்றபோது அதனைத்‌ தகர்த்தெறியும்‌ போராட்டம்‌ மூன்று கட்டங்களில்‌ நடைபெற்றதாகக்‌ கருதலாம்‌.

முதல் கட்டம்: 

  • 1937-இல்‌ காங்கிரசு முதன்முறையாக அரசாங்கத்தை ஏற்று நடத்த முன்‌ வந்ததும்‌, இந்தியைக்‌ கட்டாய பாடமாக்கத்‌ இட்டமிட்டதேயாகும்‌. வடநாட்டுக்‌ காங்கிரசுக்காரர்களைத்‌ திருப்திபடுத்துவதற்காகவே ”முதற்கோணலில்‌ ‘* இறங்கினார்கள்‌. முதற்கோணல்‌ முற்றும்‌ கோணலாகும்‌ என்று அவர்கள்‌ குறைமதிக்கு எட்டவில்லை.
  • எவரேனும்‌ தமிழ்மொழிக்கு ஊறு செய்யத்‌ துணிந்தால்‌ தமிழர்கள்‌ அதனைப்‌ பொறுத்துக்‌ கொள்ளார்‌. “தமிழை இகழ்ந்தவரை எம்‌ தாய்‌ தடுத்தபோதிலும்‌ விடோம்‌” என்ற சூளுரையை மேற்கொள்ளத்‌ தயங்கார்‌. இந்த அழியா உணர்ச்சி வெள்ளத்தை முதலமைச்சராகப்‌ பதவியிலிருந்த இராஜாஜி இந்தியைக்‌ கட்டாய பாடமாக்கத்‌ திட்டமிட்டபோது தமிழகம்‌ முழுவதும்‌ கிளர்ந்தெழுந்தது. தங்களிடையே இருந்த சாதி வேற்றுமை, சமய வேற்றுமை, கட்சி வேற்றுமை இவற்றை மறந்து தமிழைப்‌ பாதுகாக்கும்‌ பணியில்‌ மும்முரமாக ஈடுபட்டனர்‌.

1.தமிழ்‌ மாநாடு: இதனைச்‌ சரியாக நடத்தத்‌ திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம்‌ மேற்கொண்ட அரும்பாடுபாட்டைப்‌ பொன்‌னெழுத்துகளால்தான்‌ பொறிக்க வேண்டும்‌. சென்னை மாநிலத்‌ தமிழர்‌ மாநாடு 26-12- 1937-இல்‌ கூடியது. கி.ஆ.பெ. விசுவநாதம்‌ செயலராகச்‌ செயற்பட்டார்‌. சென்னை மாநிலத்தின்‌ பல பகுதிகளிலிருந்தும்‌, மும்பை, பர்மா, பினாங்கு, இலங்கை முதலிய இடங்களிலிருந்தும்‌ தமிழர்கள்‌ திரண்டு வந்திருந்தனர்‌. பசுமலை பேராசிரியர்‌ ச. சோமசுந்தர பாரதியார்‌ மாநாட்டுத்‌ தலைமை ஏற்று மிகச்‌ சிறப்பாக நடத்தித்‌ தந்தார்‌. இம்மாநாட்டில்‌,

(அ) தமிழ்நாடு தனியாகப்‌ பிரிக்கப்படவேண்டும்‌ என்றும்‌, தமிழ்‌ வளர்ச்சிக்காகத்‌ தனியாக ஒரு பல்கலைக்‌கழகம்‌ நிறுவப்‌ பெற வேண்டும்‌ என்றும்‌, இந்தியைக்‌ கட்டாய பாடமாக்குவதை வன்மையாகக்‌ கண்டித்தும்‌ தீர்மானங்கள்‌ நிறைவேற்றப்‌ பெற்றன.

(ஆ) இந்தி எதிர்ப்புப்‌ போராட்டத்திற்குப்‌ பாசறை அமைக்கப்பெற்றதும்‌ கொடிமரம்‌ நாட்டப்பெற்றதும்‌ திருச்சியில்தான்‌.

(இ) இந்த வரலாற்றைக்‌ கருத்தில்‌ கொண்டு ‘தமிழன்‌ தொடுத்த போர்‌’ என்னும்‌ நூல்‌ வெளிவந்ததற்குக்‌ காரணமாக இருந்தது திருச்சியே.

(ஈ) “திரும்பிப்‌ பார்‌ திருச்சியை’ என்ற தலைப்பில்‌ அறிஞர்‌ அண்ணா மூலம்‌ ‘விடுதலையில்‌’ ஒரு தலையங்கம்‌ பிறந்து தமிழ்ப்‌ பகைவரை எச்சரித்தது.

2.தமிழர்‌ பெரும்படை: 1938 ஆகஸ்டு முதல்‌ நாளன்று தமிழர்‌ படை ஒன்று அஞ்சா நெஞ்சன்‌ பட்டுக்கோட்டை அழகிரிசாமியின்‌ தலைமையில்‌ திருச்சி மாவட்டத்தைக்‌ கடந்து செங்கற்பட்டு மாவட்டத்தைத்‌ தாண்டி செப்டம்பர்‌ 11 இல்‌ (42 நாட்களில்‌) 577 மைல்கள்‌ கால் நடையாகச்‌ சென்னை வந்தடைந்தது. இதற்கும்‌ முதலமைச்சர்‌ அசைந்தார்‌ இலர்‌. 21-04-1938-ம்‌ நாள்‌ ஆணைப்படி தமிழகத்தில்‌ 60, ஆந்திரத்தில்‌ 54, கன்னட நாட்டில்‌ 4, கேரளத்தில்‌ 7 ஆக 125 பள்ளிகளில்‌ முதல்‌ மூன்று படிவங்களில்‌ பயிலும்‌ மாணவர்கள் மீது இந்தி திணிக்கப்‌ பெற்றது. இந்த அடாத ஆணையைக்‌ கண்டு கல்வி நிபுணர்கள்‌ பேராசிரியர்கள்‌, நடுநிலையாளர்கள்‌, அரசியல்வாதிகள்‌, பொதுமக்கள்‌ கண்டனக்‌ குரல்கள்‌ எழுப்பினர்‌. இதற்கும்‌ இராஜாஜி அடங்கினாரிலர்‌.

3. சென்னை மாநில இந்தி எதிர்ப்பு உரிமை ஆணையம்‌: (The Anti-Hindi High Commend): இப்பெயரால்‌ நிறுவனம்‌ ஒன்று நிறுவப்பெற்றது. இதில்‌ தமிழ்ப்‌ புலவர்கள்‌, தன்மான இயக்கத்தினர்‌, நீதிக்கட்சியினர்‌, துறவிகள்‌ (மடாதிபதிகள்‌) ஆகியோர்‌ அடங்குவர்‌. இதன்‌ தலைவர்‌ திரு.ச.சோமசுந்தர பாரதியார்‌; செயலர்‌ கி.ஆ.பெ.வி. இதன்‌ செயற்பாட்டால்‌ முத்தமிழ்க்‌ காவலர்‌ அவர்களை இந்தி எதிர்ப்புப்‌ போராட்ட வீரர்‌ என்று தமிழகம்‌ முழுவதும்‌ அறியச்‌ செய்தது.

தமிழகம்‌ முழுவதும்‌ தம்‌ சொந்தப்‌ பணத்தைச்‌ செலவு செய்து பம்பரம்போல்‌ சுற்றிச்‌ சுழன்று 100க்கும்‌ மேற்பட்ட கிளைச்‌ சங்கங்களை நிறுவி ஆங்காங்கே சொற்பொழிவுகள்‌ செய்து வந்தார்‌. இந்தி எதிர்ப்பு பிரசாரத்தின்‌ போது மட்டும்‌ 374 ஊர்களில்‌ 430 நாள்களில்‌ 617 சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார்‌. இது முத்தமிழ்க்‌ காவலரின்‌ மாபெருந்‌தொண்டு அல்லவா? தூத்துக்குடியில்‌ மட்டிலும்‌ ஒரே நாளில்‌ 7 பொழிவுகள்‌ ஏழு இடங்களில்‌ நிகழ்த்திய பெருமை இவருக்கு உண்டு. நல்ல உடல்நிலையையுடைய இப்பெருமகனாருக்கு தமிழ்ப்‌ பற்றும்‌ இந்தியை ஒழிக்க வேண்டுமென்ற பேர் ஆர்வமும்‌ அவருக்கு வேண்டிய ஆற்றலை நல்கின.

4, தியாக மூர்த்திகள்‌: சென்னையில்‌ இராஜாஜியின்‌ இல்லத்தின்‌ முன்பு மறியலும்‌ இந்து தியாலாஜிகல்‌ பள்ளி முன்பு இந்தி எதிர்ப்புப்‌ பிரசாரமும்‌ செய்யப்‌ புற்றீசல்கள்‌ போல்‌ தமிழர்‌ கிளம்பினர்‌. இவற்றில்‌ கைதாடிச்சிறை சென்றவர்களின்‌ தொகை தலைவர்‌ பெரியார்‌, சர்வாதிகள்‌, தொண்டர்கள்‌ உட்பட மொத்தம்‌ 1271. இவர்களில்‌ ஆண்கள்‌ 1166. பெண்கள்‌ 73. இவர்களுடன்‌ சென்ற குழந்தைகள்‌ 32. இந்நிலையில்‌ கி.ஆ.பெ.வி அவர்கள்‌ பல ஊர்கள்‌ சுற்றுப்பயணம்‌ செய்து உணர்ச்சி மிக்க சொற்பொழிவுகளாற்றி இந்தி எதிர்ப்புப்‌ போராட்டம்‌ தொடர்ந்து நடைபெற ஆக்க வேலைகள்‌ செய்து வந்தார்‌.

மறைமலையடிகளால்‌ முதன்‌ முதலாக எழுப்பப்‌ பெற்ற “தமிழ்நாடு தமிழருக்கே!’’ என்ற உரிமை முழக்கத்துடன்‌ தமிழ்க்‌கொடி ஏந்திச்‌ சிறைசென்ற தாளமுத்துவும்‌ நடராசனும்‌ தம்‌ இன்னுயிரைக்‌ களபலியாகக்‌ கொடுத்தனர்‌. இதனால்‌ அறப்‌ போராட்டம்‌ முற்றிலும்‌ தீவிரமாக நடைபெறத்‌ தொடங்கியது.

5. அரசியலில்‌ மாற்றம்‌: 31-12-1939 இல்‌ காஞ்சிப்‌ பாசறையில்‌ இந்தி எதிர்ப்பு வலுவடைந்தது. இரண்டாம்‌ உலகப்‌ பெரும்‌ போர்‌ காரணமாக காங்கிரசுக்கும்‌ வெள்ளை ஆட்சியினருக்கும்‌ கருத்து வேற்றுமை எழவே காங்கிரசு அமைச்சரவை வெளியேறியது. ஆளுநர்‌ ஆட்சியில்‌ இந்தியைக்‌ கட்டாய பாடத்திலிருந்து விருப்பப்‌ பாடமாக இறக்க இசைவு தெரிவித்தனர்‌.

போராட்டத்தில்‌ கி.ஆ.பெ அண்ணலாரின்‌ பங்கு:  இந்தி ஆதரவுக்காக ஒரு சமயம்‌ இராஜாஜி திருச்சி வந்தபோதும்‌, சேலம்‌, தருமபுரியிலும்‌ நம்‌ கி.ஆ.பெ அண்ணல்‌ நேருக்கு நேர்ந்து வினாக்கணைகளை விடுத்துத்‌ இணற அடித்த செய்தகள்‌ வரலாற்றில்‌ இடம்‌ பெற வேண்டியவை.

(அ) திருநெல்வேலி நகரத்திலும்‌, அந்நகர சந்திப்‌ பிள்ளையார்‌ முக்கிலும்‌, எட்டயபுரத்திலும்‌ நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும்‌ கி.ஆ.பெ”க்குக்‌ கிடைத்த வெகுமதி கல்லடிகள்‌. இவற்றையும்‌ பொறுத்துக்‌ கொண்டு அண்ணலார்‌ தமது கடமைகளை உறுதியுடனும்‌ சலியாமலும்‌ ஆற்றி வந்தார்‌.

(ஆ) கட்சி வேலையில்‌ முழுக்கமுழுக்க ஈடுபட்டதால்‌, சொந்தத்‌ தொழிலைக்‌ கவனிக்க முடியவில்லை. தமது மகன்‌ இராசரத்தினம்‌ மறைந்ததையும்‌ அதிகமாகப்‌ பொருட்படுத்‌தாமல்‌ இயக்கப்பணியில்‌ தீவிரமாக ஈடுபட்டிருந்ததை எவரும்‌ மறக்கவில்லை. சுற்றுப்பயணச்‌ செலவும்‌ காலாவதியான நோட்டுகளின்‌ தொகையும்‌, வாணிக நட்டமும்‌ சேர்ந்து ரூ. 12,000/- வரை இழப்பு நேரிட்டமை பலருக்குத்‌ தெரியாது; அவருடன்‌ நெருங்கிய பழகிய ஒரு சிலரே அறிவர்‌.

(இ) இந்தி எதிர்ப்புக்‌ காலத்தில்‌ அவர்திரட்டிய நிதிக்கும்‌ ஆகிய செலவிற்கும்‌ வைத்திருந்த தனிக்‌ கணக்குப்‌ புத்தகத்தைக்‌ கண்டு வியந்து போற்றாதவர்களே இலர்‌. பெறும்‌ பணத்தை விழுங்கி ஏப்பமிடுவார்‌ பெருகியுள்ள காலத்தில்‌ இங்ஙனம்‌ ஒரு நேர்மையும்‌ ஒழுங்குமுள்ள அண்ணலாரைக்‌ காணும்போது வள்ளுவர்‌ வழியில்‌ நடந்த ஒருவருக்கு எடுத்துக்‌காட்டாகின்றார்‌ கி.ஆ.பெ.

கி.ஆ.பெ விசுவநாதம் இந்தி எதிர்ப்புப் போராட்டம்! 2 ஆம், மூன்றாம் கட்ட வரலாறு. Trichy KAP Viswanadham Anti-Hindi Agitations of  TamilNadu.

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button