கட்டுரைகள்அரசியல்இந்தியா
சமூகப் புரட்சியின் தந்தை ஜோதிராவ் கோவிந்தராவ் புலே! Jyotirao Govindrao Phule.
தீண்டாமை, பாலின பாபாகுபாடுகளுக்கு எதிரான இயக்கம், பெண் கல்வி இயக்கம், விவசாயிகளின் இயக்கம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கம்.
சமூகப் புரட்சியின் தந்தை ஜோதிராவ் கோவிந்தராவ் புலே!
- சமூகப் புரட்சியின் தந்தை என்று போற்றப்பட்ட மகாராஷ்டிர சீர்திருத்தவாதி ஜோதிராவ் கோவிந்தராவ் புலே (Jyotirao Govindrao Phule) நினைவு தினம் இன்று (நவம்பர் 28).
- மகாராஷ்டிர மாநிலம் புனேயில் (1827) பிறந்தார். பூ வியாபாரம் செய்துவந்தவர்கள் என்பதால் ‘புலே’ (பூக்காரர்) என்பது குடும்பப் பெயராகவே ஆகிவிட்டது. ஒரு வயதில் தாயை இழந்தார்.
- தொடக்கக் கல்வியோடு நிறுத்திவிட்டு தந்தையின் கடைக்கு வேலைக்கு சென்றார். 13 வயதில் திருமணமும் ஆனது.
- தந்தையின் நண்பர்களது உதவியுடன் மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். புனேயில் உள்ள ஸ்காட்டிஷ் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
- ஜார்ஜ் வாஷிங்டன், சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, கபீர், துக்காராம், தியானேஷ்வர் உள்ளிட்ட ஞானிகளின் கவிதைகள், மார்ட்டின் லூதர், புத்தர், பசவண்ணாவின் நூல்கள் என பலவிதமான புத்தகங்களையும் படித்தார். தாமஸ் பெய்னின் ‘ரைட்ஸ் ஆஃப் மேன்’ போன்ற நூல்கள் இவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
- சாதிய ஒடுக்குமுறைகளைக் கண்டு மனம் நொந்தார். தனிநபர் சுதந்திரம், சமத்துவம் எங்கும் பரவ வேண்டும் என்பதே இவரது லட்சியமாக மாறியது. சமத்துவம், மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று முதன்முதலாக முழங்கினார்.
- இவர் சிறந்த எழுத்தாளர், கவிஞரும்கூட. ‘த்ருதிய ரத்னா’, ‘குலாம்கிரி’, ‘இஷாரா’ என இவரது பல நூல்கள் வெளிவந்தன. தனது படைப்புகளில் இலக்கிய நடை அல்லாமல் பேச்சு மொழியை அதிகம் பயன்படுத்தினார்.
- கல்விதான் அனைத்துக்கும் தீர்வு என்பதை உணர்ந்தார். கல்வியைப் பரப்பும் பணியை தன் வீட்டில் இருந்தே தொடங்கினார். தன் மனைவி சாவித்திரி பாய்க்கு கல்வி கற்பித்தார். 1851-ல் மகளிருக்கான பள்ளியைத் தொடங்கி, கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பள்ளியை நடத்தினர். இவரது முனைப்புகளால் அரசுப் பள்ளிகள் அதிகம் தொடங்கப்பட்டன.
- ‘தாய்மொழிக் கல்வி, 12 வயது வரை ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். கல்வி அமைப்பு முழுவதும் அரசின் வசம் இருக்க வேண்டும். எண், எழுத்து, கணக்கு, பொது வரலாறு, புவியியல், இலக்கணம் ஆகியவற்றில் தொடக்க நிலை அறிவை அனைவரும் பெற வேண்டும்’ என வலியுறுத்தினார்.
- தீண்டாமை, பாலின பாகுபாட்டை கடுமையாக எதிர்த்தார். பாகுபாடுகளுக்கு எதிரான இயக்கம், தலித் இயக்கம், பெண் கல்வி இயக்கம், விவசாயிகளின் இயக்கம், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களைத் தொடங்கினார்.
- ‘சத்ய ஷோதக் சமாஜ்’ என்ற அமைப்பை 1873-ல் தொடங்கினார். சமூகநீதி, சமத்துவம், தனிநபர் சுதந்திரம், சகோதரத்துவம், அனைவருக்கும் கல்வி, சிறப்பு இடஒதுக்கீடுகளுக்காக இந்த அமைப்பு போராடியது.
- டாக்டர் அம்பேத்கர், ராஜா ராம்மோகன் ராய் உள்ளிட்ட சமூகப் புரட்சியாளர்களுக்கு உத்வேக சக்தியாகத் திகழ்ந்தவர். இவரது 40 ஆண்டுகால சமூக சேவையைப் பாராட்டி புனேயில் 1888-ல் நடந்த பொதுக்கூட்டத்தில் இவருக்கு ‘மகாத்மா’ பட்டம் வழங்கப்பட்டது.
- இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாகப் போற்றப்பட்ட ஜோதிராவ் கோவிந்தராவ் புலே 63-வது வயதில் (1890 நவம்பர் 28) மறைந்தார்.