செய்திகள்இந்தியா

பாலத்தை வேண்டுமென்றே சிலர் உலுக்கினர் – பார்த்தவர்கள் வேதனை

மோர்பி நகர் பால விபத்து நடப்பதற்கு சில மணி நேரத்துக்கு முன்னதாக அங்கு சென்று திரும்பிய நபர் ஒருவர், பாலத்தில் இருந்த இளைஞர்கள் சிலர் வேண்டுமென்றே பாலத்தை ஆட்டியதாகக் கூறியுள்ளார்.

குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதி பாய்கிறது. இந்த நதியின் குறுக்கே 233 மீட்டர் நீளம், 4.6 அடி அகலத்தில் கேபிள் நடைபாலம் அமைக்கப்பட்டிருந்தது. சுமார் 140 ஆண்டுகளுக்கு முன், மரம், கேபிள்கள் மூலம் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் ரூ.2 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த தீபாவளியன்று மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. சுற்றுலாத் தலமான இங்கு நேற்று 500-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக பாலம் உடைந்து விழுந்ததில், அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இன்று (அக் 31) காலை 8.30 மணி நிலவரப்படி 130க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிகழ்விடத்தில் இருந்த தேநீர் வியாபாரி ஒருவர், “நான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அங்கு தேநீர் விற்பேன். அப்படித்தான் அன்றும் அங்கு நின்றிருந்தேன். பாலத்தில் கடுமையான கூட்ட நெரிசல் இருந்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே பாலம் சரிந்து விழுந்தது. மக்கள் ஆற்றில் விழுந்தனர். சிலர் தொங்கிக் கொண்டிருந்தனர். என் வாழ்நாளில் இப்படியான சம்பவத்தை நான் பார்த்ததில்லை. ஒரு சிறு பெண் குழந்தையை மீட்டோம். அந்தக் குழந்தை எப்படியாவது உயிர் பிழைக்கும் என்று நினைத்தோம் ஆனால் குழந்தை என் கண் முன்னாலேயே உயிரைவிட்டது. என்னால் இன்னும் அதை மறக்க முடியவில்லை” என்று கண்ணீர் சிந்தினார்.

இந்நிலையில், சம்பவம் நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர் அந்தப் பகுதிக்குச் சென்ற அகமதாபாத்தைச் சேர்ந்த விஜய் கோஸ்வாமி அங்கு நடந்தவற்றை விவரித்துள்ளார். “நான் அன்றைய தினம் எனது குடும்பத்தினருடன் மோர்பிக்குச் சென்றிருந்தேன். அப்போது பாலம் முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்தது. சில இளைஞர்கள் வேண்டுமென்றே பாலத்தில் குதித்து அதனை உலுக்கி சேட்டை செய்து கொண்டிருந்தனர். அதனால் நான் இவ்வளவு கூட்டத்துக்கு இடையே பாலத்தில் செல்ல வேண்டாம் என்று திட்டத்தை ரத்து செய்து திரும்பினேன். திரும்புவதற்கு முன்னர் நான் அங்கிருந்த ஒருங்கிணைப்பாளர்களிடம் இளைஞர்கள் சிலர் பாலத்தை வேண்டுமென்றே உலுக்குவதாகச் சொன்னேன். ஆனால் அங்கிருந்தவர்கள் இத்தனைக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று சொல்லிவிட்டு டிக்கெட் விற்பதிலேயே கவனமாக இருந்தனர். நான் அங்கிருந்து சென்று சில மணி நேரத்திலேயே விபத்து நடந்துள்ளது. அந்த விபத்தை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button