கட்டுரைகள்

குடவோலை முறையை அறிமுகப்படுத்திய முதலாம் பராந்தக சோழன்

கி.பி.907-ல் ஆதித்த சோழன் மறைவிற்கு பிறகு அவரது மகன் முதலாம் பராந்தக சோழன் அரியணை ஏறினார்.இவர் அரசராக பொறுப்பேற்ற காலத்தில் தொண்டைமண்டலம் முழுவதும் இவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.மேலும் கொங்கு மண்டலமும் இவருடைய கட்டுபாட்டில் தான் இருந்தது.தன் தந்தையால்முன்னெடுத்து செல்லப்பட்ட சோழ பேரரசை சீரிய முறையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பது இவருடைய நோக்கமாக இருந்தது.இவர் பரகேசரி என்னும் பட்டம் பெற்றார்.இவர் நாற்பத்தியாறு ஆண்டுகள் ஆட்சி செய்தார்.அனால் இவருடைய ஆட்சியில் பல விடயங்கள் நடைபெற்றிருந்தாலும் அவற்றில் பெரும்பலான்வைகள் பதிவாகவில்லை.அவருடைய ஆட்சி குறித்து சில கல்வெட்டுகளே உள்ளது.

முதலாம் பராந்தக சோழன் ஆட்சிக்கு வந்தபொழுது, சோழநாடு வடக்கில் மைசூர் பீடபூமி நீங்கலாக, தெற்கே காவிரி வரையிலான பகுதியும், மேற்குத் கடற்கரையோரமாக ஒரு பகுதியும், சென்னை, காளத்தி வரையிலும் பரவியிருந்தது.இவர் ஆட்சி பொறுப்பேற்ற மூன்றாவது ஆண்டில் உள்ள கல்வெட்டில் மதுரை கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்ற பட்டபெயர் பெற்றுள்ளதாக கல்வெட்டு கூறுகிறது.இவர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து சென்று மதுரையை கைப்பற்றியதால் இந்த பெயர் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.அந்நாளில் மதுரையை ஆண்டு கொண்டிருந்தவர் மூன்றாம் ராசசிம்ம பாண்டியன்.பராந்தகன் தொடுத்த போரில் தோற்ற பாண்டிய மன்னன்,தாக்கு துணையாக இலங்கள் மன்னனிடம் உதவி கேட்டார்.அவர் சக்க சேனாபதி என்பவரின் தலைமையில் சோழ பேரரசின்  மீது போர் தொடுக்க அனுப்பினார். இந்த இரு படைகளும் இணைந்து சோழப் படையை தாக்கினால் நாவலந்தீவு முழுவதையும் கைப்பற்றலாம் என்பது அவர்களின் திட்டமாகும்.வெள்ளூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் இரு படைகளும் மோதி கொண்டன.இதில் சோழ மன்னன் பராந்தகன்.பாண்டிய,இலங்கை படைகளை வீழ்த்தினார்.  இப்போர் குறித்த பதிவுகள் இரண்டாம் பிருத்விபதியின் உதஎந்திரச் செப்பேடுகளிலும்,இலங்கை சரிதமாகிய மகாவம்சத்திலும் காணலாம்.இப்போர் கி.பி.919-ல் நடைபெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ராஜ்ஜியத்தை இழந்த ராசசிம்ம பாண்டியன் இலங்கை சென்று அந்நாட்டு அரசனிடம் உதவி கோரினார். அவ்வுதவியை நிச்சயம் செய்வதாக கூறிய இலங்கை மன்னன்,தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.இதனால் இங்கு இருப்பதில் பயனில்லை என்று உணர்ந்த பாண்டிய மன்னன் தன் முன்னோர்கள் மூலம் கிடைத்த சுந்தர முடியையும்,பிற அரசு சின்னங்களையும் இலங்கை அரசனிடம் அடைக்கலமாக கொடுத்து ,தன்தாய் வானவன் மாதேவியின் சொந்த ஊரான சேர நாட்டிற்கு சென்று வசித்து வந்தார்.

பராந்தக சோழன் பாண்டிய நாட்டை முழுமையாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பிறகு அந்நாட்டில் முடிசூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தான்.அங்கு பாண்டிய நாட்டு சுந்தர முடியும்,பிற அரச சின்னங்களும் இல்லாதை கண்டு அதிர்ச்சியடைந்தான்.பின்னர், அது இலங்கை மன்னனிடம் இருப்பதை அறிந்து அதை கொடுக்க கோரி தூது அனுப்பினார். அதை அவர் கொடுக்க மறுக்கவே பராந்தகன் அவர் மீது படையெடுத்தார்.போரில் இலங்கை மன்னனை வீழ்த்தினார் பராந்தகன்.செய்வதறியாது திகைத்த இலங்கை மன்னன்,பாண்டிய மன்னன் கொடுத்த அடைக்கல பொருட்களோடு தென் இலங்கைக்கு ஓடினார்.போரில் வெற்றி பெற்றாலும் பராந்தகனால் அரசவை பொருட்களை எடுத்து செல்ல முடியவில்லை.இப்போர் குறித்து மகாவம்சத்தில் காணலாம்.போரில் வெற்றி பெற்றதால் இவரை “மதுரையும் ஈழமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்”என்ற பட்டம் பெற்றார்.

இலங்கையின் வரலாற்றுப் பதிவான மகாவம்சம் கூறும் குறிப்புகளிலிருந்து (மஹாவம்சா சி.வி. பாகம், 52, பக். 70) சோழப் பாண்டியப் போரின் மூன்று கட்டங்களைப்பற்றி அறியலாம். முதல் கட்டத்தில் முதலாம் பராந்தக சோழனிடம் பாண்டிய மன்னன் தோல்வியுற்றான். இரண்டாம் கட்டத்தில் பாண்டிய மன்னன், ஈழ மன்னனது உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். பாண்டிய ஈழத்துப்படைகள் சோழப்படையிடம் தோற்றுப் பின்வாங்கின. ஈழப்படைத்தலைவன் சோழரை வெல்ல மீண்டும் முயன்றது மூன்றாம் கட்டமாகும். பாண்டியருக்கான போர்களில் சேர மன்னன், கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோரைத்தவிர, கொடும்பாளூரைச் சேர்ந்த வேளிர் தலைவரும் முதலாம் பராந்தக சோழனுக்காக உதவி செய்தனர்.கொடும்பாளூர் வம்சத்தைச் சேர்ந்த தென்னவன் இளங்கோவேள் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த பூதி ஆதிக்க பிடாரி என்ற பெண்ணை பராந்தகனின் மகன்களில் ஒருவனான அரிகுலகேசரி திருமணம் செய்தானர்.

இந்திய வரலாற்றில் முதன் முதலில் நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறையான குடவோலை முறையை செயல்படுத்தியவர் முதலாம் பராந்தக சோழனே ஆவார்.மேலும் பாண்டிய அரசை கைப்பற்றியதை தொடர்ந்து தன் தந்தை ஆதித்ய சோழன் கட்டாது விட்டப் பல கோயில்களை முதலாம் பராந்தக சோழன் கட்டினார்.

தன் தந்தையை போன்று இவரும் சேர மற்றும் கங்கை மன்னன் இரண்டாம் பிருத்விபதி ஆகியோரிடம் நட்புடன் இருந்தார். கி.பி. 940ல் முதல் பராந்தக சோழனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன் ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிருதிவிபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தக சோழனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக அமைந்தது. இரண்டாம் பிரதிவீபதி தன் வாழ்நாளின் இறுதியில், ஒரே மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பிரிதிவீபதியின் தாயாதியான இரண்டாம் பூதுகன் என்பவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சி, முதலாம் பராந்தக சோழன் ஆட்சி முடிவதற்கு முன், வட மேற்கிலிருந்து மிகுந்த படைபலத்துடன் மூன்றாம் கிருஷ்ணன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். அதன் விளைவாக நடைபெற்ற போரில் பராந்தகனின் மூத்த மகனான இராஜாதித்தன் உயிரிழன்தான். இதற்குப்பின் முதலாம் பராந்தக சோழனும் வெகுகாலம் உயிர் வாழவில்லை. முதலாம் பராந்தக சோழன் இறந்தது முதல் பின்னர் தொடர்ந்த முப்பது ஆண்டுகள் வரையில் சோழ நாடு பெரும் இருளில் ஆழந்திருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button