கட்டுரைகள்

வீழ்ந்து போன சோழ அரசை மீட்டெடுத்த விஜயாலய சோழன்

தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களில் சோழ பேரரசுக்கு மிக முக்கிய பங்கு உண்டு.கிட்டத்தட்ட தமிழ்நாட்டையும் தாண்டி கம்போடியா வரை வெற்றி கொண்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.சோழ வரலாற்றை வரலாற்று ஆய்வாளர்கள் நான்கு காலங்களாக பிரிக்கின்றனர்.

1.சங்க இலக்கிய காலம்

2.சங்க கால இறுதிக்கும் விஜயாலய அரச மரபின் தோற்றத்திற்கும் இடைப்பட்ட காலம்

3.விஜயாலனுடைய அரச மரபு புகழ் பெற்ற காலம்

4.கி,பி.பதினோறாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.பதின்மூன்றாம் நூற்றாண்டு பிற்பகுதி வரை வரை.

இத்தகைய வரலாற்று பின்னணி கொண்ட சோழ பேரரசை சங்க காலத்திற்கு பின் மீட்டெடுத்தவர் விஜயாலய சோழன்.

விஜயாலய சோழன் குமாரச்ங்கன் என்ற சோழ மன்னனின் மகனாய் இருக்கலாம் என்று வேலூர் பாலய செப்பெடுகளால் அறியப்படுகிறது.ஆனால் திருவேலங்காட்டு செப்பேடுகளும்,ஆனைமலை செப்பேடுகளும்,குமரி செப்பேடுகளும்,அன்பிற் செப்பேடுகளும் இன்னும் சில செப்பேடுகள் விஜயாலய சோழன்,சோழ வம்சத்திலிருந்து வந்தவர் என்பதை உறுதிபடுத்துகிறது.சங்க கால வழில்யில் தான் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் சோழர் பேரரசு நிறுவி புகழோடு ஆட்சிபுரிந்தனர் என்பதை ஒட்டகூத்தர் எழுதிய மூவருலா உறுதிபடுத்துகிறது.மேலும் செயங்கொண்டர் கலிங்கத்துபரணியும் இதனை உறுதிபடுத்துகிறது.

தஞ்சை பகுதி சோழர்கள் வசம் வருவதற்கு முன் முத்தரையன் என்னும் மன்னன் கட்டுப்பாட்டில் தான் இருந்தது என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.கி.பி.846-ம் ஆண்டில் முத்தரைய பேரரசின் கீழிருந்த குறுநில மன்னனை தாக்கி தஞ்சை மாநகரை கைப்பற்றினார்.இவ்வெற்றியின் மூலம் புகழ் குன்றியிருந்த சோழ பேரரசின் வலிமையை நிலை நாட்டியது.மேலும் சோழ அரசு பேரரசாக மாறியதற்கு வித்திட்டது இந்த தஞ்சை வெற்றிதான்.இவர் தஞ்சை பகுதியை முப்பதைந்து ஆண்டுகள் ஆண்டதாக கூறப்படுகிறது.இவர் தன் ஆட்சி முழுக்க பகை மன்னர்களோடு போரிட்டு கொண்டிருந்தார்.அதனால் இவருக்கு மார்பில் தொண்ணூற்றாறு புண் கொண்ட புரவலன் என்று மூவருலா பாடலில் உள்ளது.இவருடைய புகழ் குறித்து விக்கிரம சோழன் உலா என்ற பாடலில் உள்ளது (27-32 பாடல் எண்).குலோத்துங்க சோழன் உலா பாடல் எண் 38-44,ராஜராஜ சோழன் உலா பாடல் எண் 35-40 போன்ற பல பாடல்களில் இடம் பெற்றுள்ளது.

கி.பி.854-ல் பாண்டியருக்கும் பல்லவருக்கும் இடையில் போர் நடைபெற்றது.இப்போர் குறித்து சின்னமனூர் செப்பேடுகளில் அறிய கிடைக்கிறது.இப்போர் குடமூக்கு போர் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.இன்றைய கும்பகோணம் தான் அன்றைய குடமூக்கு என்று அறியப்படுகிறது.இப்போரில் பல்லவர்,சோழர்,கங்கர்,மாகதர் அணியை பாண்டிய மன்னன்  மாறவர்மன் பரச் சக்கரக் கோலாகலன் வீழ்த்தினான்.இதனால் சோழ மண்டலத்தின் தென்பகுதி பாண்டியர் வசம் சென்றது.மீண்டும் அப்பகுதியை கைப்பற்றுவதற்கு பல்லவர்கள்,கங்கர்கள் உதவியோடு மீண்டும் சோழர்கள் மீண்டும் போர் தொடுத்தனர்.பின்னர் கி.பி.862-ல் அரிசிலாற்றங்கரையில் நடைபெற்ற போரில் பல்லவ மன்னன் நிருபதுங்க வர்மன்,இலங்கை வேந்தன் இரண்டாம் சேனனுடன் சேர்ந்து பாண்டிய மன்னன் மாறவர்மன் பரச் சக்கரக் கோலாகலனை வீழ்த்தினான்.இப்போரில் பல்லவர்களுக்கு உதவியாக சோழ மன்னன் விஜயாலய சோழன் சென்றதாக கூறப்படுகிறது.இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றதால் பாண்டியர்கள் வசமிருந்த சோழ பகுதிகள் இப்போது பல்லவர்கள் வசம் சென்றது.இப்போர் குறித்து கண்டியூர்,கோவிலடி,லால்குடி பகுதியில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாண்டிய மன்னன்  மாறவர்மன் பரச் சக்கரக் கோலாகலன் கி.பி.862-ல் இறந்துவிடவே அவரது மகன் இரண்டாம் வரகுண வர்மன் மன்னன் ஆனான்.பின்னர் தந்தையை இழந்த சோழ நாட்டு பகுதியை கைப்பற்றுவதற்கு போர் தொடுத்தான்.இந்த சூழலில் விஜயாலய சோழன் நோய்வாய்ப்பட்டிருந்தார்.இதனால் அவரது மகன் இளவரசனாகிய ஆதித்த கரிகாலன் போர் காலத்திற்கு சென்றார்.அத நேரத்தில் பல்லவ மன்னன் நிரூபதுங்கன் இறந்து விடவே அவரது மகன் அபராஜித வர்மன் ஆதித்த கரிகாலனுக்கு துணையாக போர்களத்திற்கு சென்றார். மேலும் இவர்களுடன் கங்க நாட்டு அரசன் முதலாம் ப்ரித்விபதி தன் நண்பன் அபராஜித வர்மனுக்கு துணையாக போர்களத்திற்கு சென்றார்.இப்போர் கும்பகோணம் வட மேற்கே ஐந்து மைல் தூரத்தில் மண்ணியாற்றின் வடகரையில் உள்ள திருபுறம்பியம் என்னும் ஊரில் நடைபெற்றது. இது தான் சோழ வரலாற்றை மாற்றிய திருபுறம்பியம் போர்.

இப்போரில் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண வர்மன் வீழ்த்தப்பட்டு கொல்லபட்டார்.இப்போரில் சோழர்கள் அணி வெற்றி  பெற்றாலும்  கங்க அரசர் முதலாம் ப்ரித்விபதி போர் களத்தில் இறந்தார்.பல்லவ மன்னன் அபராஜித வர்மன் தன் படையில் பகுதியை இழந்தார்.இதனால் சோழர்கள் கை ஓங்கியது.இதனால் தன் ஆளுகை கீழிருந்த சோழ பகுதியை அபராஜித வர்மன் சோழர்களிடமே ஒப்படைத்தார்.இப்போர் சோழர்கள் தங்கள் சாம்ராஜ்யத்தை வளபடுத்திக் கொள்ள பேருதவியாக அமைந்தது.இப்போரின் காரணமாக பாண்டியர்கள் முற்றிலும் வீழ்ந்தார்கள் .பல்லவர்கள் ஆட்சியும் கிட்டத்தட்டமுழுவதுமாக முடிவுக்கு வந்தது.தன் வாழ்நாள் முழுவதும் போர்களத்தில் கழித்த விஜயாலய சோழன் கி.பி.881 -ல் இறந்தார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button