தருமபுரி-திருவண்ணாமலை இடையே 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தருமபுரி-திருவண்ணாமலை இடையே ரூ.410 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக ரூ.313.50 கோடி மதிப்பீட்டில் தருமபுரி-அரூர் (மொரப்பூர் வழி) சாலை வரை இருவழிப்பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், ரூ.96.50 கோடியில் அரூர் வழி தாணிப்பாடி-திருவண்ணாமலை சாலை வரை இருவழி பாதையில் இருந்து 4 வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தருமபுரி-திருவண்ணாமலை 113 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் இந்த சாலை அமைக்கப்படுகிறது.
இதற்காக ஏற்கெனவே தருமபுாி,கோபிநாதம்பட்டி, செம்மணஅள்ளி, மொரப்பூர் பகுதிகளில் மரங்கள் அகற்றப்பட்டு, பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அரூர் பகுதியில் பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அரூர் அக்ரஹாரம் பகுதியில் மரங்கள் அகற்றப்பட்டு சாலையோர மண் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், தருமபுாி – திருவண்ணாமலை வரை அமைக்கப்பட உள்ள இந்த 4 வழிச் சாலையில் மொத்தம் 113 கிலோ மீட்டர் ஆகும். இதில் தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 73 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.
தற்போது சாலையின் அகலம் 7 மீட்டராக உள்ளது. இது 16.20 மீட்டர் அகலமுள்ள 4 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. இச்சாலையில் தருமபுரி-அரூர் வழி மொரப்பூர் சாலையில் 70 சிறுபாலங்கள் கட்டப்பட உள்ளன. இது தவிரபேருந்து நிறுத்தம், குடியிருப்பு பகுதியில் இருபக்கங்களிலும் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதி செய்யப்பட உள்ளது, என்றனர்.