செய்திகள்தமிழ்நாடு

பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா: பெயர் பலகையை ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை கஸ்தூரிபாய் மற்றும் திருவான்மியூர் ரயில் நிலையம் இடையே அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாப் பூங்கா’ என பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதன் பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

தமிழ்நாடு நகர்புற சாலை உட்கட்டமைப்பு நிதியிலிருந்து ரூ.18 கோடியே 71 லட்சத்தில் கஸ்தூரிபாய் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை பக்கிங்ஹாம் கால்வாய் கரையில் 2.1 கிமீ நீளம் கொண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே மாதம் திறந்துவைத்தார்.

இதில் நடைபாதை, மிதிவண்டிப் பாதை, அடர்வனம், சிறுவர் விளையாட்டு உபகரணங்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள், பாரம்பரிய மரங்கள், பூந்தொட்டிகள், எல்ஈடி விளக்குகள், சுவர் ஓவியங்கள், கலை நயமிக்க சிலைகள், செயற்கை நீரூற்று, ஊட்டச்சத்து தோட்டம், இறகு பந்து மைதானம் போன்ற வசதிகள் உள்ளன.

மேலும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை ஆலோசனைப்படி அங்கு ஊட்டச்சத்து பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஊட்டச்சத்து மிகுந்த கீரை செய்திகள், காய்கறி செடிகள் மற்றும் பழச் செடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டின் 75-வது சுதந்திர தின விழாவை நினைவுகூரும் வகையில் இப்பூங்காவுக்கு ‘சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாப்பூங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இப்பூங்காவின் பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். பின்னர் பூங்கா வளாகத்தில் மரக்கன்றை நட்டார். மேலும், சிறுவர்களின் சிலம்பாட்ட பயிற்சிகளையும், திறந்தவெளி உடற்பயிற்சி பகுதியையும், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியையும், ஸ்கேட்டிங் பயிற்சி பகுதியையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு,சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, ஜே.எம்.எச்.ஹசன் மவுலானா எம்எல்ஏ, துணை மேயர் மு. மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button