நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை யொட்டி பாஜக அரசு சார்பில் பத்திரிகைகளுக்கு விளம்பரம் கொடுக்கப்பட்டது.
அதில் மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ், வல்லபபாய் படேல், அம்பேத்கர், பகத் சிங், சாவர்க்கர் உள்ளிட்டோரின் படங்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால் சுதந்திரப் போராட்ட வீரரும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் இடம்பெறவில்லை. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு சில இடங்களில் பாஜக சார்பில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பஜ்ரங் தளம் அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால் ஷிமோகா, மங்களூரு உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பெங்களூரு, மைசூரு ஆகிய இடங்களில் திப்பு சுல்தானின் படத்துடன் முஸ்லிம்கள் சுதந்திர தின வாழ்த்து பேனர் வைத்திருந்தனர். அதை மர்ம நபர்கள் சிலர் கிழித்ததால் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.