செய்திகள்தமிழ்நாடு

“கரூரில் பணம், உருட்டல், மிரட்டல், பொய் கஞ்சா வழக்கு மாடல் ஆட்சி” – அண்ணாமலை ஆவேசப் பேச்சு

கரூரில் பணம், உருட்டல், மிரட்டல், பொய் கஞ்சா வழக்கு மாடல் ஆட்சி நடைபெறுகிறது. பாஜகவினரை மிரட்டி, உருட்டி, கஞ்சா வழக்கு போட்டால் மொத்த திமுகவினரும் உள்ளே போகவேண்டும்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆவேசத்துடன் பேசினார்.

தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் கோவை சாலையில் இன்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை பேசியது: “மத்திய அரசு கூறியதால் மின் கட்டணத்தை உயர்த்தியதாக இந்த அரசு தெரிவித்துள்ளது. பிரதமரை வம்பிழுப்பதே இந்த அரசுக்கு வேலை.

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டங்களில் கூட 15 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை லஞ்சம் வாங்குகின்றனர். ஒப்பந்தங்களில் கொள்ளை அடிக்கின்றனர். ஆனால், மின் கட்டணத்தை மத்திய அரசு சொன்னதால் உயர்த்தினோம் என்கிறார்கள். சாமானிய மக்கள் நம்பத் தயாரில்லை.

மத்திய அரசு 28 கடிதங்கள் அனுப்பியதாக கூறுகிறார். அதனைக் காட்டுங்கள் என கூறுகிறேன். தமிழக வாரியத்தில் ஊழல் மலிந்துள்ளதால் ரூ.1.50 லட்சம் கோடி கடனில் உள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்கவும் என்றுதான் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக மின் தேவையில் 40 சதவீதம் மட்டுமே சொந்தமாக உற்பத்தி செய்யப்படுகிறது. 60 சதவீத மின்சாரம் விலை கொடுத்து வேறு, வேறு இடங்களில் வாங்கப்படுகிறது. மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர் ஆகிய இடங்களில் அரசின் சொந்த மின் உற்பத்தி குறைக்கப்பட்டு வெளியே மின்சாரம் வாங்கப்படுகிறது.

கடந்த இரு மாதங்களில் ரூ.4,600 கோடிக்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. இதில் 4 சதவீதம் அமைச்சருக்கு கமிஷனாக கொடுக்கப்படுகிறது. ரூ.10-க்கு ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தியவர்கள் இதுவரை ரூ.1,130 கட்டணமாக செலுத்திய நிலையில் புதிய கட்டண விகிதத்தில் ரூ.1,725 செலுத்தவேண்டும். இது 54 சதவீத கட்டண உயர்வாகும்.

நிலக்கரி பற்றாகுறையால் மின் உற்பத்தி குறைந்தாக தெரிவித்ததால் மத்திய அரசு வழங்கும் நிலக்கரி இல்லாமல் நீங்கள் தனியாக வாங்கிக்கொள்ளலாம் என தெரிவித்ததை அடுத்து ரூ.492 கோடிக்கு நிலக்கரி வெளியே வாங்கியுள்ளனர். இதன்மூலம் மின் உற்பத்தி செய்து ரூ.20,760 கோடிக்கு மக்களிடம் மின்சாரமாக விற்பனை செய்வார்கள்.

தமிழகம் முன்னேறிக் கொண்டு இருக்கிறது. ஆனால், கரூரை ஏழையாக வைத்திருந்தால் மட்டுமே தேர்தலின் போது ரூ.1,000, ரூ.2,000 கொடுத்து வெற்றி பெறமுடியும் என சிலர் உள்ளனர். டாஸ்மாக் மூலம் ரூ.38,000 கோடி வருமானம் வருகிறது. பாதி பெண்கள் தாலி அறுக்க டாஸ்மாக் தான் காரணம்.

அமைச்சர் செந்தில்பாலாஜி இதுவரை ரூ.100 கோடி, ரூ.10 கோடி என ரூ.170 நஷ்ட ஈடு கேட்டு 6 மானநஷ்ட வழக்கு நோட்டீஸ்கள் அனுப்பியுள்ளார். இவரை பற்றி தற்போதைய முதல்வர் 2016-ல் பேசியுள்ளார். அதனால், அவரை வக்காலத்துக்கு அழைப்பேன். இவற்றை பார்த்து பயப்படும் ஆள் நான் கிடையாது.

கரூரில் பணம், உருட்டல், மிரட்டல், பொய் கஞ்சா வழக்கு மாடல் ஆட்சி நடைபெறுகிறது. பாஜகவினரை மிரட்டி, உருட்டி, கஞ்சா வழக்கு போட்டால் மொத்த திமுகவினரும் உள்ளே போகவேண்டும்.

இன்னும் 40 ஆண்டுகளுக்கு மத்தியில் பாஜக ஆட்சிதான். கரூரில் விமான நிலையம் கொண்டு வருவது மக்களுக்காக அல்ல. ஒரு ஹோட்டல் மற்றும் 2 டெக்ஸ்டைல் அதிபர்கள் 420 ஏக்கர் நிலம் வாங்கி வைத்துள்ளனர். அங்குள்ள நில மதிப்பை உயர்த்தவேண்டும்.

கரூரில் அரசியல் மாற்றம் வரவேண்டும். அப்போது ஜவுளி பூங்கா உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் பாஜக கொண்டு வரும்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button