செய்திகள்தமிழ்நாடு

மாற்றுத் திறனாளிகளுக்கான சமூக நீதியை நிலைநாட்ட தமிழக அரசு முனைப்பு: முதல்வர் ஸ்டாலின்

“மாற்றுத்திறனாளிகளை குழந்தைப் பருவம் முதற்கொண்டு கண்டறிந்து, அவர்களின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை, சமவாய்ப்பு எனும் சமுதாய சமூகநீதியினை நிலைநாட்டிட, தமிழக அரசு முழுமூச்சுடனும் முனைப்புடனும் செயலாற்றி வருகின்றது” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று (ஜூலை 25) நடைபெற்ற அமர் சேவா சங்கத்தின் 40-வது ஆண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த விழாவில் முதல்வர் பேசியது: “அமர் சேவா சங்கத்தின் நிறுவனத் தலைவராக இருக்கும் பெரியவர் ராமகிருஷ்ணன் ,மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வுக்காக ஆற்றி வரும் பணி மிக மகத்தான பணி. 1981-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பள்ளியை ஆயக்குடியில் தொடங்கி இருக்கிறார் அய்யா ராமகிருஷ்ணன் .அதேபோல் சங்கர்ராமனும் தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அவர் இந்த நிறுவனத்துடன் 1992-ல் சேர்ந்தார். இருவரது கவனிப்பில் இன்று ஏராளமான குழந்தைகள் மறுவாழ்வு பெற்று வருகிறார்கள் என்பதை அறியும்போது நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமானது, ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ என்ற திட்டத்துடன் இணைந்து 3 முதல் 18 வயதுக்கு உட்பட்ட அனைத்து மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கும் சேர்ந்து ஒரு திட்டத்தை தொடங்கியிருக்கிறது.

இதனை அமர் சேவா சங்கத்துடன் இணைந்து செயல்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். தரமான கல்வி ,பெண் கல்வி, திறன் மேம்பாடு ,விளையாட்டுக் கல்வி, உடல் கல்வி , ஆகியவற்றில் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியரை முழுமையாக ஈடுபடுத்தக்கூடியத் திட்டம் தான் இது.

இந்தியாவிலேயே நமது மாநிலம்தான் மாற்றுத் திறனாளி மாணவ – மாணவியருக்கு ஏராளமான திட்டங்களைத் தீட்டி வருகிறது என்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். அந்த வகையில் இப்போது தொடங்கப்பட்டுள்ள திட்டம் மிகமிக ஒரு முன்னோடித் திட்டம். அமர் சேவா சங்கத்தின் ஆக்கபூர்வமான பணிகளுக்கு நமது அரசு தேவையான உதவிகளை நிச்சயமாக, உறுதியாக செய்யும் என்ற உறுதியை நான் தருகிறேன்.

அமர் சேவா சங்கம் நமது அரசின் வழிகாட்டுதலோடும், துணையோடும் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுடைய மேம்பாட்டிற்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை, எல்லா துறைகளிலும் வழிகாட்டிடும் இந்தியாவில் முதன்மை மாநிலமாகச் செய்திட நமது அரசு பல நல்ல திட்டங்களைத் தீட்டி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் முக்கிய அங்கமாக குழந்தைகள் மற்றும் மாணவ மாணவியர்களின் முழுமையான வளர்ச்சியினைக் கருத்தில் கொண்டு நல்ல தரமான கல்வி அளிப்பது மட்டுமல்லாமல் பொறுப்புள்ள குடிமக்களாகவும் ஆக்கக்கூடிய வகையில், சிறப்பான சூழ்நிலைகளை உருவாக்கி அவற்றைச் செயல்படுத்துவதில் முழுக்கவனத்தைச் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளை குழந்தைப் பருவம் முதற்கொண்டு கண்டறிந்து, அவர்களின் மேம்பாட்டிற்கான கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்தி, அவர்களுக்கு சமநிலை, சமவாய்ப்பு எனும் சமுதாய சமூகநீதியினை நிலைநாட்டிட, நமது அரசு முழுமூச்சுடனும் முனைப்புடனும் செயலாற்றி வருகின்றது.

இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், கல்லூரிக் கனவு ஆகிய திட்டங்களின் மூலமாக மக்களின் கல்வி, நல்வாழ்வு ஆகிய தேவைகளை முழுமையாக செயல்படுத்த எங்களை நாங்கள் ஒப்படைத்துக் கொண்டிருக்கிறோம்.

அரசின் இந்த ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு நீங்களும் உதவி செய்யுங்கள். உங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு நாங்களும் இயன்ற உதவிகளை உறுதியாக செய்வோம்.

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்ற அமர் சேவா சங்கம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தனது திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்திட வேண்டும் என்கின்ற என்னுடைய விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button