“குடியரசுத் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது” என்று இந்திய குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: “இந்தியக் குடியரசுத் தலைவராகத் பொறுப்பேற்கவுள்ள தங்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜனநாயக கொள்கையின் மீது நாட்டின் நம்பிக்கையும், பலத்தையும் வெளிப்படுத்துகிறது .
இந்தியக் குடியரசுத் தலைவராக உங்கள் சேவைகளால் நாடு பயனடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன், வாழ்த்துகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, பாரம்பரிய நடைமுறைகளுக்குப் பிறகு, காலை 10.05 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரவுபதி முர்முவும் அணிவகுப்பு மரியாதையுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு வந்தனர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், எம்.பி.க்கள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், ராணுவ தளபதிகள் விழாவில் பங்கேற்றனர்.
காலை 10.15 மணிக்கு புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதன் பிறகு 21 குண்டுகள் முழங்க புதிய குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார்.
பின்னர், திரவுபதி முர்முவும், ராம்நாத் கோவிந்தும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றனர். அங்கு திரவுபதி முர்மு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.