டெல்லி யூனியன் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தி வரி முறை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.
இம்மாத தொடக்கத்தில் டெல்லி தலைமைச் செயலர் பதிவு செய்த புகாரில் ஜிஎன்சிடிடி சட்டம் 1991, தொழில் பரிவர்த்தனை விதி (டிஓபிஆர்)-1993, டெல்லி உற்பத்தி வரி சட்டம் -2009, டெல்லி உற்பத்தி வரி 2010 ஆகியன முற்றிலுமாக மீறப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்திருந்தார். இதன் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.
உற்பத்தி வரித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, முறையற்ற வகையில் மதுபான லைசென்ஸ் வழங்குவதில் சலுகைகள் காட்டியதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
லைசென்ஸ் வழங்குவதில் புதிய நடைமுறை மூலம் மதுபான விற்பனை டெல்லி அரசிடமிருந்து கைமாறி நான்கு கார்ப்பரேஷன் வசம் சென்றது. இந்த நான்கு கார்ப்பரேஷன் பகுதியில் மொத்த மது விற்பனையில் 50 சதவீத விற்பனை நடைபெறுகிறது. இவைஅனைத்தும் தனியார் வசம் விடப்பட்டது.
இப்புதிய கொள்கைக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து இருகட்சிகளும் துணை நிலை ஆளுநரிடம் புகார் அளித்தன. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.
இந்நிலையில் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பரிந்துரைத்துள்ளார். இந்த விஷயத்தில் உண்மை சிறிதும் இல்லை என்று குறிப்பிட்டார்.
மணீஷ் சிசோடியாவை தமக்கு 22 ஆண்டுகளாகத் தெரியும் என்றும் அவர் நேர்மையான மனிதர் என்றும் கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார். மூன்று, நான்கு மாதங்களுக்கு முன்பே மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என்ற தகவல் தனக்குத் தெரியவந்ததாகக் குறிப்பிட்ட கேஜ்ரிவால், இதை செய்தியாளர் சந்திப்பு மற்றும் சட்டப்பேரவையில் குறிப்பிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இப்போது நமது நாட்டில் புதிய நடைமுறை ஒன்று அமல்படுத்தப்படுகிறது. முதலில் யாரை ஜெயிலுக்கு அனுப்பவேண்டும் என்று முடிவு செய்த பிறகு அவருக்கு எதிராக போலியான வழக்குகளை ஜோடிக்கும் பணி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வழக்கு போலியானது என்று கேஜ்ரிவால் குறிப்பிட்டார். இந்த வழக்கில் அணு அளவு கூட உண்மை கிடையாது என்றும், மணீஷ் சிசோடியா மிகச் சிறந்த தேச பக்தர் என்றும் கேஜ்ரிவால் குறிப்பிட்டார்.
சிறைச்சாலை, தூக்குக்கயிறை கண்டு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த பிறகு ஆம் ஆத்மி கட்சி மேலும் வளர்ச்சியடைந்துள்ளது. தேசிய அளவில் நாங்கள் வளர்வதை பாஜக விரும்பவில்லை என்றும் கேஜ்ரிவால் கூறினார். எனினும் எந்த சக்தியாலும் தங்களது வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்று அவர் கூறினார்.