ஜிஎஸ்டி வரிவிதிப்பு அதிகரிப்பு காரணமாக ஆவின் பால் தவிர்த்து,இதர நெய், தயிர் உள்ளிட்ட உபபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது.
ஜிஎஸ்டி கவுன்சிலின் 47-வதுகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, பல்வேறு பொருட்களுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஆவின் நிறுவனம் ஜிஎஸ்டி உயர்வைக் காரணம் காட்டி, பால் தவிர்த்து நெய் உள்ளிட்ட உப பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள் ளது.
அதன்படி, தயிர் 100 கிராம் ரூ.10-லிருந்து 12-ஆகவும், 200 கிராம் ரூ.25-லிருந்து 28-ஆகவும், 500 மிலி பாக்கெட் தயிர் ரூ.30-லிருந்து ரூ.35-ஆகவும், 200 மிலி ரூ.15-லிருந்து ரூ.18-ஆகவும், பிரீமியம் தயிர் 400 கிராம் ரூ.40-லிருந்து ரூ.50-ஆகவும், ஒரு கிலோரூ.100-லிருந்து ரூ.120-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புரோபயாடிக் லஸ்சி 200 மிலிரூ.27-லிருந்து ரூ.30-ஆகவும், மேங்கோ மற்றும் சாக்லேட் லஸ்சிரூ.23-லிருந்து ரூ.25-ஆகவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மோர் ரூ.15-லிருந்து ரூ.18-ஆகவும், மோர் பெட் பாட்டில் ரூ.10-லிருந்து ரூ.12-ஆகவும், பாக்கெட் மோர் ரூ.7-லிருந்து ரூ.8-ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
நெய்யைப் பொறுத்தவரை, ஒரு லிட்டர் ஜார் ரூ.535-லிருந்து ரூ.580- ஆகவும், 500 மிலி ரூ.275-லிருந்து ரூ.290-ஆகவும், 200 மிலி ரூ.120-லிருந்து ரூ.130-ஆகவும், 100 மிலி ரூ.65-லிருந்து ரூ.70-ஆகவும், 5 லிட்டர் ரூ.2,650-லிருந்துரூ.2,900-ஆகவும், 15 கிலோ ரூ.8,680-லிருந்து ரூ.9,680-ஆகவும் விலை உயர்த்தப்பட் டுள்ளது.
மேலும், அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட நெய் ஒரு லிட்டர் ரூ.530-லிருந்து ரூ.575-ஆகவும், 500 மிலி ரூ.270-லிருந்து ரூ.280-ஆகவும், பிரீமியம் நெய் ஒரு லிட்டர் டின் ரூ.585-லிருந்து ரூ.630-ஆகவும், 500 மிலி ரூ.320-லிருந்துரூ.340-ஆகவும், நெய் பாக்கெட் 100 மிலி ரூ.60-லிருந்து ரூ.65-ஆகவும், 15 மிலி ரூ.10-லிருந்து ரூ.12-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு நேற்று காலை முதல் அமலுக்கு வந்த நிலையில், ஆவின் பாலகங்கள் கடைகளுக்கு புதிய விலைப்பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. இரு தினங்களில் மற்ற கடைகளுக்கும் புதிய விலைப்பட்டியல் அனுப்பிவைக்கப்படும் என்று ஆவின் நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் ஆவின் நெய், தயிர் ஆகிய பொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில், 4 மாதங்களில் மீண்டும் விலைஉயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.