“சட்டமன்றத்தில் அதிமுகவினருக்கு யார் யாருக்கு இருக்கைகள் எப்படி ஒதுக்க வேண்டும் என்பது தொடர்பான விவகாரத்தில் சட்டமன்றத்தின் மாண்பையும், மரபையும் சிறிதளவுகூட குறைக்காமல் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “அதிமுக கொறடா வேலுமணி கொடுத்த கடிதம் சென்னைக்கு வந்துள்ளது. நான் இன்னும் சென்னை செல்லவில்லை. அந்தக் கடிதத்தை படித்து பார்த்தபின்தான் என்ன முடிவெடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.
அதிமுக தலைமை அலுவலகம் தொடர்பான தீர்ப்பு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வந்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “நீதிமன்றம் வேறு, தேர்தல் ஆணையம் வேறு. தமிழக சட்டமன்றத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
சட்டமன்றத்தில் இருக்கைகள் யார், யார்க்கு எப்படி ஒதுக்க வேண்டும் என்பது குறித்து கடிதம் அளித்துள்ளனர். அந்த மனுக்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. 38 ஆண்டுகளுக்குப் பின்னர், தமிழக சட்டமன்றம் இப்போதுதான் ஜனநாயக ரீதியில் நடந்துகொண்டுள்ளது. எனவே, சட்டமன்றத்தின் மாண்பையும், மரபையும் சிறிதளவுகூட குறைக்காமல் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.