செய்திகள்இலங்கை

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம்;டலஸ் அழகப்பெரும,சஜித் பிரேமதேசாவிற்கு ஆதரவு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களின் கொழும்பு இல்லத்தில் நேற்று  மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை,  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட  இக்கூட்டத்தில், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும, பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மற்றும் தற்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்ட கீழ்வரும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட டலஸ் அழகப்பெரும, சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும், தாம் பதவிக்கு வந்து, மூன்று முதல் ஆறு மாத காலம் முடிவடைவதற்குள் குறித்த நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி நிரந்தரத் தீர்வு காண்பதாகவும், இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வை எட்டுவதற்கான உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதாகவும் ஏற்றுக்கொண்டு பத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்  உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.

1. நீண்டகாலமாக காரணமற்று சிறையிலுள்ள தமிழ் அரசியல்கைதிகளில் ஒருதொகுதியினரை மூன்று மாத காலத்திற்குள் முதற்கட்டமாக விடுதலை செய்ய வேண்டும்.

2. அம்பாறை மாவட்டம், கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதுடன் கணக்காளர் ஒருவரையும் நியமித்தல்.

3. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் தனிப்பட்ட இடங்களிலும் , பொதுப்பயன்பாட்டுக்குரிய அரச இடங்களிலும்  முகாமிட்டிருக்கும் இராணுவத்தினருக்கு இடங்களை நிரந்தரமாக வழங்கும் முகமாக, நில அளவைத் திணக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அளவீட்டுப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

4. தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியவளத் திணைக்களம் உள்ளிட்டவற்றால், வடக்கு, கிழக்கு தமிழர் நிலங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்த வேண்டும்.

5. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்குதல் மற்றும் அதற்கான நல்லெண்ண சமிக்ஞைகளை முதலில் வெளிபடுத்த வேண்டும் .

6. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயலகத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உதவ வேண்டும்.

7. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநிறுத்தவும், உண்மையைக் கண்டறிவதற்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

8. வடக்கு, கிழக்கிலுள்ள தனியார் காணிகளிலிருந்து படையினரை வெளியேற்றி, தமது சொந்த நாட்டில் இன்னும் அகதிகளாக உள்ள எமது மக்கள் தமது பூர்வீக நிலங்களில் குடியேற வழிவகை செய்ய வேண்டும்.

9. வடக்கு, கிழக்கில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தைக் குறைத்து மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி அமைக்க வேண்டும்.

10. கடந்த எண்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள தமிழர்களின் உரிமைக்கான அரசியல் தீர்வுக்காக, காலதாமதமற்ற உடனடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தல்ஆரம்பிக்க வேண்டும்.

கூட்டமைப்பினரின் 10 கோரிக்கைகளுக்கு எழுத்துமூல ஒப்புதல் வழங்கப்பட்டு, டலஸ் & சஜித் கையொப்பமிட்ட பிறகே ஏகமனதான ஆதரவு வெளிப்படுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button