வீடுகளுக்கான மின் கட்டணத்தை அதிகபட்சம் 27 சதவீதம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
இது தொடர்பாக அவர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2011-12-ல் ரூ.18,954 கோடியாக இருந்த மின் வாரிய நிதியிழப்பு, கடந்த 10 ஆண்டுகளில், அதாவது 2021 மார்ச் 31 வரை ரூ.1.13 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
2021-22-ல் இருந்து மின் வாரிய நிதியிழப்பை 100 சதவீதம் முழுமையாக அரசே ஏற்றுக் கொள்ளும் என தமிழக அரசு தற்போது உறுதியளித்தைப்போல, கடந்த காலங்களில் எந்த உறுதியும் வழங்காததால், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் இருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டது.
இதனால் 2011-12-ல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகத்துக்கு ரூ.43,493 கோடியாக இருந்த கடன், தற்போது 3 மடங்கு அதிகரித்து, ரூ.1.59 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மின் விநியோகக் கடன்களை 75 சதவீதம் எடுத்துக்கொண்டு, அதன்மூலம் அசல் மற்றும் வட்டியைக் குறைத்து, நிதி நிலைமையைச் சீராக்குவதே மத்திய அரசு செயல்படுத்திய உதய் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டத்தில் சேர்ந்த பிறகும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
எனவே, 8 வருட இடைவெளிக்குப் பிறகு மின் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை.
இதன்படி, 2 மாதங்களுக்கு 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.27.50 கட்டணம், அதாவது 26.73 சதவீதம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 300 யூனிட் வரை பயன்படுத்து வோருக்கு ரூ.72.50-ம் (15.30 சதவீதம்), 400 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50-ம் (7.94 சதவீதம்), 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.297.50-ம் (4.46 சதவீதம்), 600 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.155-ம் (1.32 சதவீதம்), 700 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.275-ம் (0.83 சதவீதம்), 800 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.395-ம் (0.53 சதவீதம்), 900 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு ரூ.565-ம் (0.35 சதவீதம்) உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உயர் மின்னழுத்தப் பிரிவில், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தில் ஒரு யூனிட்டுக்கு 40 காசுகளும், ரயில்வே மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 65 காசுகளும், வணிகப் பிரிவுகளுக்கு 50 காசுகளும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனினும், 100 யூனிட் இலவச மின்சாரம், குடிசை, விசைத்தறி, கைத்தறி, விவசாயம் மற்றும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கான மானியத்தை நுகர்வோர் தாமாக முன்வந்து விட்டுக்கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஒரு வீட்டில் கூடுதலாக வாடகை, குத்தகைக்கு விடப்பட்டதை தவிர, மற்ற கூடுதல் இணைப்புக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.225 கட்டணம் வசூலிக்கப்படும். வீடுகளுக்கு நிலைக்கட்டணம் ரூ.20 முதல் ரூ.50 வரை ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் 2.28 கோடி நுகர்வோர் பயனடைவர்.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் மின் கட்டணம் குறைவாகவே உள்ளது. இந்த திருத்தியமைக்கப்பட்ட மின் கட்டணத்தை அமல்படுத்துவதற்கு அனுமதிகோரி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆணையம் ஒப்புதல் வழங்கியவுடன் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார்.