செய்திகள்தமிழ்நாடு

மாவட்ட நிர்வாகம், காவல் துறை அலட்சியத்தால்தான் பள்ளி வளாகமே போர்க்களம் ஆனது: வைகோ

“மாணவியின் மரணத்துக்கான பின்னணி மற்றும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்த மாணவி கடந்த ஜூலை 13ம் தேதி திடீரென்று உயிரிழந்ததாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்து இருக்கிறது. பள்ளி விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளி நிர்வாகம் கூறியதை மாணவியின் பெற்றோர் ஏற்கவில்லை.

அந்த மாணவியின் மரணம் சந்தேகத்துக்கு உரியதாக இருக்கிறது என்று, உடலை வாங்க மறுத்து மாணவியின் பெற்றோரும், ஊர் மக்களும் 5 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் திரண்ட பொதுமக்களும், பல்வேறு மாணவர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களும், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், மாணவி மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரி சாலை மறியல் செய்தனர்.

இந்நிலையில் மாணவியின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில், அவர் உயிரிழப்புக்கு முன்பே உடலில் காயங்கள் இருந்ததாகவும், அவரது கை, கால்கள் உடைந்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்ததால், ஜூலை 17, ஞாயிறு அன்று, சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மீது ஆவேசம் கொண்ட பொதுமக்களும், இளைஞர்களும், மாணவர்களும் தாக்குதல் நடத்தி உள்ளனர். பள்ளிக் கூடத்திற்கு தீ வைக்கப்பட்டு இருக்கிறது. வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன.

பள்ளி அறைகளில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. மாணவர்களின் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் எரிக்கப்பட்டு இருக்கின்றது. காவல்துறை வாகனங்களும் வன்முறையால் தாக்குதலுக்கு உள்ளாகின. காவல்துறையினர் மீது கற்கள் வீசப்பட்டதால் காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து இருக்கின்றனர். கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத காவல்துறை வானத்தை நோக்கி சுட்டும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்து உள்ளனர்.

தனியார் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்த மாணவி திடீரென்று சந்தேகத்துக்கு இடமான முறையில் மரணம் அடைந்ததால், மாணவியின் பெற்றோரும், ஊர் பொதுமக்களும், இளைஞர்களும் கொதித்து எழுந்து ஐந்து நாட்களாக அறப்போராட்டம் நடத்தி வந்துள்ளனர். சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவி ஒருவர் உயிரிழந்ததால் மக்கள் கொதித்து எழுந்து போராட்டத்தில் இறங்கியதுமே, கல்வித்துறையும், காவல்துறையும் மாணவி மரணத்துக்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்வோம் என்று மக்களிடம் நம்பிக்கையை ஊட்டி நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டும்.

ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரின் அலட்சியத்தால்தான் ஞாயிறு அன்று அந்த பள்ளி வளாகம் போர்க்களமாகி இருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறை நிகழ்வுகளை காரணம் காட்டி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை மூடுவோம் என்று தனியார் பள்ளிகள் அரசாங்கத்தை மிரட்டும் தொனியில் அறிவிப்பு வெளியிடுவது ஏற்புடையதல்ல. இதற்கு தமிழ்நாடு அரசு ஒருபோதும் பணிந்துவிடப் போவதில்லை.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளவாறு மாணவி உடலை மறு உடல்கூறு ஆய்வு செய்து, மாணவியின் மரணத்துக்கான பின்னணி மற்றும் புதைந்து கிடக்கும் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் கூண்டில் ஏற்றி தண்டிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்” என்று வைகோ கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button