செய்திகள்தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: மறுபிரேத பரிசோதனைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடற்கூராய்வு தகுதியில்லாத மருத்துவர்களால் செய்யப்பட்டுள்ளது. எனவே மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி,
மாணவியின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த நிலையில், நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, அவசர வழக்காக இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று முறையீடு செய்தார். இதனை ஏற்று நீதிபதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

வழக்கு விசாரணையின் தொடக்கத்திலேயே நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். “நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்?

இந்த போராட்டத்தை நடத்த அனுமதித்தது யார்?

மாணவியின் இறப்புக்கு காரணம் என்ன, தகுதியில்லாத மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று எப்படிக் கூறுகிறீர்கள்? நீங்கள் என்ன இந்த துறையில் நிபுணரா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மேலும், இதுபோன்ற இயற்கைக்கு முரணான மரணங்கள் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும். மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும். மறு பிரேத பரிசோதனையின் போது மனுதாரர் தனது வழக்கறிஞருடன் இருக்கலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button