புதிதாக 9 மணல் குவாரிகள் அமைக்கவும் 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையில் மாற்றம் கொண்டுவரவவும் சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழக நீர்வளத்துறை விண்ணப்பித்துள்ளது.
தமிழகத்தில் 2022 ஜனவரி முதல் தற்போது வரை கடலூர், திருச்சி, வேலூர், அரியலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் காவேரி, கொள்ளிடம், பாலாறு, வெள்ளாறு ஆகிய ஆறுகளில் புதிதாக 9 மணல் குவாரிகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு நீர்வளத்துறையானது தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது.
மேலும் ஏற்கெனவே சுற்றுச்சூழல் மற்றும் சுரங்க அனுமதி பெற்று செயல்படாமல் இருந்த குவாரிகளையும் திறப்பதற்கான பணிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. இதில் கடந்த ஆறு மாதத்தில் மட்டும் ஏற்கெனவே சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட 30 குவாரிகளில் மணல் அள்ளும் முறையை மனித சக்தியைப் பயன்படுத்தி மற்றும் மாட்டு வண்டிகளைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்குப் பதிலாக இயந்திரங்களைப் பயன்படுத்தி மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தி அள்ளும் முறைக்கு மாற்றுமாறு சுற்றுச்சூழல் அனுமதியில் திருத்தம் கோரப்பட்டுள்ளது.
இதில் அரியலூர் மாவட்டத்தின் செந்துறை தாலுகாவில் வெள்ளாற்றில் 8 இடங்களிலும், நாமக்கல் மாவட்டத்தின் மோகனூர் தாலுகாவில் காவேரி ஆற்றில் 3 இடங்களிலும், கரூர் மாவட்டத்தில் காவேரி ஆறு பாயும் மண்மங்கலம் தாலுகாவில் 5 மற்றும் கிருஷ்ணராயபுரம் தாலுகாவில் 2 இடங்களிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆறு பாயும் கும்பகோணம் தாலுகாவில் 3 மற்றும் பாபநாசம் தாலுகாவில் 2 இடங்களிலும், புதுக்கோட்டை மாவட்டம் வெள்ளாறு பாயக் கூடிய அறந்தாங்கி தாலுகாவில் 2 இடங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வைப்பாறு பாயக்கூடிய விளாத்திக்குளம் தாலுகாவில் 1 இடத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பாம்பார் பாயக்கூடிய திருவாடானை தாலுகாவில் 2 இடங்களிலும், கோட்டக்கரை ஆறு பாயக்கூடிய ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் 2 இடங்களில் உள்ள மணல் குவாரிகளுக்கு மணல் அள்ளும் முறையில் திருத்தம் கோரப்பட்டுள்ளது.
”கரோனா காலத்தில் இக்குவாரிகளை இயக்க முடியவில்லை என்பதாலும் தற்போது மணல் தேவை அதிகரித்திருக்கிறது. புதிய குவாரிகளை அரசு திறக்க முடிவெடுத்திருந்தாலும் மணல் தேவையை உடனடியாகப் பூர்த்தி செய்வதற்கு ஏதுவாக இயந்திரங்களைப் பயன்படுத்தி மணல் அள்ளுவதற்கும், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களைப் பயன்படுத்தி மணலை கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்க வேண்டும்” என நீர்வளத்துறை தனது விண்ணப்பங்களில் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நமது ஆறுகளை அழித்து, தமிழ்நாட்டை பாலைவனமாக்கும் என்று பூவுலகின் நண்பர்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மணல் குவாரிகளை இயக்குவதற்குவதற்கான விதிகளில் மணல் அள்ளுவதில் மனித சக்தி முறையைக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், இதையெல்லாமல் கருத்தில் கொள்ளாமல் இயந்திர முறையில் மணல் அள்ளுவதற்கான அனுமதிகளை தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கத் தொடங்கியிருப்பது ஆறுகளின் அழிவிற்கு வித்திடும். புதிய குவாரிகளுக்கு அனுமதி கொடுப்பதிலும் உரிய ஆய்வுகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்படாதது ஏமாற்றமளிக்கிறது.
உரிய ஆய்வுகள், வழிகாட்டுதல்கள், கண்காணிப்புகள் இன்றி ஆற்று மணல் குவாரிகள் அமைப்பதால் ஆற்றுப்படுகை அழிந்து நிலத்தடியில் நீர் சேகரமாவது தடைபடும். ஆற்றின் கரைகள் உடைக்கப்படுவதோடு, தடுப்பணைகளின் மணல் அரிப்பு ஏற்பட்டு கட்டுமானம் நிலைகுலையும். ஆறுகளின் இயல்பான நீரோட்டம் தடைபடுவதோடு ஆற்றங்கரை உயிர்ப்பன்மையத்தின் சமநிலை கெடும் நிலை ஏற்படும்.
மேற்கண்ட விஷயங்களைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் புதிய ஆற்று மணல் குவாரிகளைத் திறப்பதையும், மணல் அள்ளும் முறையை இயந்திரமாக்கும் முயற்சிகளையும் கைவிட வேண்டும் எனவும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் தனது அதிகாரத்திற்குட்பட்ட மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் எனவும் கோருகிறோம். ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே தமிழ்நாட்டின் இயற்கை வளப் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உயிர் ஆதாரங்களான ஆறுகளைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.