செய்திகள்இந்தியாஉலகம்

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை வாங்கினாலும் இந்தியா மீது பொருளாதார தடை இல்லை – அமெரிக்க பிரதிநிதிகள் சபை ஒப்புதல்

ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கான தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத் திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

ரஷ்யாவிடம் இருந்து 500 கோடி டாலர் மதிப்பில் ஐந்து எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கடந்த 2018 அக்டோபரில் கையெழுத்திட்டது.

இதற்கு முன்னதாக, 2014-ல் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததற்கும் 2016-ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்கும் பதிலளிக்கும் வகையில் ரஷ்யாவிடம் இருந்து ராணுவ சாதனங்கள் வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்க அரசுக்கு அதிகாரம் வழங்கும் சிஏஏடிஎஸ்ஏ சட்டம், அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.

இந்த சட்டத்தின் கீழ் இந்தியாமீது பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என 2018-ல் அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை மீறி, ரஷ்யாவுடன் இந்தியா எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தம் செய்துகொண்டது.

என்றாலும் சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிப்பது அல்லது விலக்கு அளிப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் கடந்த ஏப்ரல் மாதம் கூறினார்.

குரல் வாக்கெடுப்பு

இந்நிலையில் சிஏஏடிஎஸ்ஏ சட்டத் தடைகளில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கும் சட்டத்திருத்தம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று முன்தினம் நிறைவேறியது.

இதற்கான மசோதாவை கலிபோர்னியா மாநில இந்திய வம்சாவளி எம்.பி. ரோ கன்னா அறிமுகப்படுத்தினார்.

அப்போது அவர் பேசும்போது, “சீனாவின் ஆக்கிரமிப்பு அதிகரித்து வரும் வேளையில் நாம் இந்தியாவுக்கு துணை நிற்க வேண்டும். இந்திய- சீன எல்லையில்இந்தியா தன்னை தற்காத்துக் கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த சட்டத் திருத்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு கட்சிப் பாகுபாடு இன்றி அனுமதி வழங்க வேண்டும்” என்றார்.

தரையில் இருந்து வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அதிநவீன நீண்ட தூர ஏவுகணை சாதனமாக எஸ்-400 அறியப்படுகிறது. இந்த ஏவுகணை சாதனங்களை ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய துருக்கி மீது சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் அமெரிக்க அரசு ஏற்கெனவே பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button