செய்திகள்இந்தியா

கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி: விரைந்தது மத்தியக் குழு

கேரள மாநிலத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து மத்திய மருத்துவக் குழு விரைந்துள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்பின் எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் தேவையான மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அமீரகத்தில் இருந்து கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்திற்கு திரும்பியுள்ளார். அவர் கொல்லம் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது. அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவர் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மாதிரிகளை சேகரித்து மருத்துவ பணியாளர்கள் அதனை புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். அதனை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்த போது குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது வியாழன் அன்று மாலை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மக்கள் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ். அவர் தனது குடும்பத்தினர் மற்றும் ஓட்டுனர்கள் இருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். அது தவிர அவருடன் விமானத்தில் பயணித்த நபர்களும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போதைக்கு அந்த நபருக்கு உடலளவில் ஆரோக்கிய குறைபாடு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீராகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நபருடன் அவர் நெருங்கி பழகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதன் மூலம் அவர் நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம்.

இந்தியாவில் முதல் முறையாக (ஆய்வு கூடத்தில்) குரங்கு அம்மை ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சிறப்பு மருத்துவக் குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம்: குரங்கு அம்மை நோய் பாதிப்பு எதிரொலியாக அனைத்து மாநிலங்களையும் மருத்துவ வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூசன் அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் “50 நாடுகளில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஜூன் 22ம் தேதி வரை 3,411 பேருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது உலக சுகாதார அமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 86 சதவீத பாதிப்பு ஐரோப்பிய கண்டத்திலும், 11 சதவீத பாதிப்பு அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பிற்கு நாடுகளுடைய பட்டியலிடப்பட்ட நிலையில் அந்த நாடுகளில் இருந்து மாநிலங்களுக்கு வரக்கூடிய பயணிகளை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும். குரங்கு அம்மை நோய் குறித்து பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

குரங்கு அம்மை இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு கட்டாயமாக குரங்கு அம்மை நோய்க்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் குடல் புண் நோய் உள்ளிட்ட இணை நோய்கள் இருந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் உயிரிழப்புகளை தடுக்கலாம்.

ஏதேனும் மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டால் உடனடியாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். குரங்கம்மை நோய்க்கான சிகிச்சைகள் மேற்கொள்ள தேவையான அளவு படுக்கை வசதிகள் மருத்துவர்கள் செவிலியர்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்.

கரோனா பெருந்தொற்று உள்ள சூழலிலும் வேறு நோய்கள் வந்தாலும் அதனை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button