“பெரும்பான்மை எம்.பி.க்கள் என்னைத் தேர்ந்தெடுத்தால் அதிபராகப் பொறுப்பேற்கத் தயார்” என்று இலங்கை முன்னாள் ராணுவத் தளபதியும், இலங்கை எம்.பி.யுமான சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து சரத் பொன்சேகா அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, “இலங்கை பொதுஜன பெராமுனா கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் என்னை அதிபர் பதவிக்கு போட்டியிடுமாறு வலியுறுத்தியுள்ளனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற எம்.பி.க்களால் அதிபர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் அப்பதவியை நிச்சயம் ஏற்பேன்” என்றார்.
இதுபற்றி கட்சித் தலைவர் சஜித் பிரேமதேசாவிடம் கூறியுள்ளீர்களா என்ற கேள்விக்கு, “இது எனது தனிப்பட்ட கருத்து. இதனை கட்சித் தலைமையிடம் கூறத் தேவையில்லை” என்றார்.
முன்னதாக, கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை முழுவதும் வன்முறை தீவிரமடைந்தது. கடந்த சில நாட்களாக அதிபர் மாளிகையிலே போராட்டக்காரர்கள் தங்கியிருந்தனர்.
கடும் எதிர்ப்பு காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மாலத்தீவில் தஞ்சம் அடைந்தார். அங்கும் எதிர்ப்பு வலுத்த நிலையில், சிங்கப்பூர் சென்றுவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதுவரை அவரது ராஜினாமா குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதை அடுத்து, நாடு இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் அமைதியாக வெளியேறினர்.
இந்தச் சூழலில் இலங்கை அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்ற அறிவிப்பை இலங்கை அனைத்து கட்சிக் குழு நாளை அறிவிக்கவுள்ளது .இவ்வாறான சூழலில், சரத் பொன்சேகா தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது கவனத்துக்குரியது.