மகசூல் அதிகரிக்க மண் பரிசோதனை அத்தியாவசியமாகும். குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் மந்திரத்தை மண் பரிசோதனைகளே சாத்தியப்படுத்துகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நவரை பருவத்தில் நெல் சாகுபடி 25,748 ஹெக்டரிலும் சொர்ணவாரி பருவத்தில் 6,674 ஹெக்டேரிலும் சம்பா பருவத்தில் 15,316 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்பட்டது.
மணிலா 2,420 ஹெக்டேரிலும் தேங்காய் 527 ஹெக்டரிலும் கரும்பு 633 ஹெக்டரிலும் பயிரிடப்படுகின்றன. காய்கறிகள் உட்பட இதரப் பயிர்கள் அனைத்தும் சேர்த்து 57,365 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இது முந்தைய ஆண்டைவிட 10,583 ஹெக்டேர் அதிகமாகும். மழை அதிகம் பெய்ததும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்ததன் காரணமாக சாகுபடி பரப்பும் அதிகரித்துள்ளது.
சாகுபடி பரப்பு அதிகரித்தாலும் குறைந்த பரப்பில் அதிக மகசூல் பெற உரங்களின் செலவை குறைத்து அதிக லாபம் ஈட்ட மண் பரிசோதனை அவசியமாகும். குறிப்பாக பயிர்களுக்கு 16 வகையான ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகின்றன.
இவை பேரூட்டச் சத்துகள், இரண்டாம் நிலைச் சத்துகள், நுண்ணூட்டச் சத்துகள் என வகைப்படுத்தப்படுகின்றன. மகசூல் அதிகம் கிடைக்க இந்தச் சத்துக்கள் சமச்சீராக கிடைக்க வேண்டும்.
இதனை அறிய மண் பரிசோதனை, நீர் பரிசோதனை செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் முடிவுகளின்படி, எந்தச் சத்துகள் குறைவாக உள்ளதோ அதற்கு தகுந்தாற்போல் பயிரோ அல்லது உரமோ இட்டால் மகசூல் அதிகம் கிடைக்கும். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள மண் பரிசோதனை மையத்துக்கு சராசரியாக மாதம் 200 வீதம் ஆண்டு 2,400 மண் பரிசோதனைகள் நடக்கின்றன.
இவை தவிர மண் பரிசோதனை தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் செல்லும்போது வேளாண் துறையினரிடம் விவசாயிகள் தரும் மண்ணும் பரிசோதனைக்கு வருகிறது.
உரிய முறையில் மண் பரிசோதனை செய்து அதற்கு தகுந்தாற்போன்ற பயிர்களை சாகுபடி செய்வதன்மூலம் விவசாயிகள் அதிக லாபம் ஈட்ட முடியும்.
இதுகுறித்து மண் பரிசோதனை மையத்தின் வேளாண் அலுவலர் இந்துமதி கூறும்போது, “மண் பரிசோதனைக்கு ரூ.20 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த பரிசோதனை செய்து தங்கள் மண்ணில் எந்த வகையான சத்துக்கள் உள்ளன என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப பயிர்களை விவசாயிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற முடியும்.
விவசாயிகள் விரும்புவதை பயிரிட்டாலும் மண்ணில் எந்தச் சத்து குறைவாக உள்ளதோ அதை பரிசோதனை மூலம் அறிந்து அதற்கேற்ற சத்துக்களை இட்டால் மகசூல் அதிகரிக்கும். இதன்மூலம் அவர்களுக்கான உரச் செலவு பெருமளவு குறையும். எனவே விவசாயிகள் மண் பரிசோதனையில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.