செய்திகள்இந்தியா

தகுதி நீக்க வழக்கால் 11-ம் தேதிக்குப் பிறகே அமைச்சரவை குறித்து முடிவு

மகாராஷ்டிராவில் ஏக்நாத் தலைமையிலான புதிய அரசில் 45 அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் எனத் தெரிகிறது. இதில் 25 பேர் பாஜகவையும் 13 பேர் ஷிண்டே அணியையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். எஞ்சிய இருவர் சுயேச்சைகளாக இருப்பார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அரசில் ஷிண்டே, பட்னாவிஸை தவிர பெரும்பாலான அமைச்சர்கள் புதியவர்களாக இருப்பார்கள். அடுத்த மகாராஷ்டிர தேர்தலுக்கு தயாராவதற்கு முன் புதிய முகங்களை பாஜக பரிசோதிக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

பாஜக – ஷிண்டே அணி இடையே அமைச்சர் பதவி பங்கீடு தொடர்பான ஃபார்முலா இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி பாஜகவின் ஒவ்வொரு 4 எம்எல்ஏக்களுக்கும் ஒருவர் அமைச்சராக இருப்பார். அதேவேளையில் ஷிண்டே அணியின் ஒவ்வொரு 3 எம்எல்ஏவுக்கும் ஒருவர் அமைச்சராக இருப்பார். ஷிண்டே உள்ளிட்ட 16 எம்எல்ஏக்.களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வரும் 11-ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது. இதன் பிறகே அமைச்சரவை தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

ஷிண்டே பொறுப்பேற்பு

மும்பையில் உள்ள மாநில தலைமைச் செயலகமான மந்திரா லயத்தில் முதல்வருக்கான பொறுப்புகளை ஏக்நாத் ஷிண்டே நேற்று ஏற்றுக்கொண்டார்.

முன்னதாக முதல்வரின் அலுவலகத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. முதல்வரின் அறையில் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் புகைப்படமும் அதன் அருகில் ஷிண்டேவின் வழிகாட்டியான ஆனந்த் திகேவின் படமும் உள்ளது. பால் தாக்கரே ஒட்டுமொத்த மாநிலத்துக்கும் சொந்தமானவர், இந்த உண்மையை யாராலும் மாற்ற முடியாது என ஷிண்டே அணியின் செய்தித் தொடர்பாளர் தீபக் கேசர்கர் கூறினார்.

அணி மாறிய 66 கவுன்சிலர்கள்

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு மற்றொரு பின்னடைவாக, தாணே மாநகராட்சியில் அவரது கட்சியின் 66 கவுன்சிலர்கள் நேற்று ஏக்நாத் ஷிண்டே அணிக்குத் தாவினர்.

மகாராஷ்டிர புதிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை இவர்கள் 66 பேரும் நேற்று முன்தினம் இரவு அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து இவர்கள் ஷிண்டே அணியில் இணைந்துள்ளனர்.

மும்பை மாநகராட்சிக்குப் பிறகு முக்கிய மாநகராட்சியாக தாணே மாநகராட்சி கருதப்படுகிறது. இதில் சிவசேனா கட்சிக்கு 67 கவுன்சிலர்கள் இருந்தனர். இந்நிலையில் 66 பேர் அணி மாறியதால் தாணே மாநகராட்சியில் சிவசேனா பலம் வெறும் 1 ஆக குறைந்துள்ளது.

இதனிடையே நாடாளுமன்ற மக்களவையில் சிவசேனா தலைமைக் கொறடாவை அக்கட்சி மாற்றியுள்ளது.

மக்களவையில் சிவசேனா தலைமைக் கொறடாவாக யவத்மால் – வாஷிம் தொகுதி எம்.பி. பவானி கவாலி பொறுப்பு வகித்து வந்தார். அவருக்கு பதிலாக தாணே தொகுதி எம்.பி. ரஞ்சன் விகாரேவை அக்கட்சி நேற்று முன்தினம் நியமித்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு சிவசேனா நாடாளுமன்ற கட்சித் தலைவர் சஞ்சய் ராவத் கடிதம் எழுதியுள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி போர்க்கொடி தூக்கியபோது, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என கட்சித் தலைமைக்கு பவானி கவாலி பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button