நாம் தமிழர் கட்சியின் மாணவர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர், தனது ட்விட்டர் பக்கத்தில் மாட்டுக்கறி என்ற வார்த்தையுடன் ஒரு புகைப்படத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அந்த ட்வீட்டுக்குக் கீழே, சென்னை மாநகர காவல்துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து `இத்தகைய பதிவு இங்கு தேவையற்றது’ என்றும், `தேவையற்ற பதிவுகளைத் தவிர்க்க வேண்டும்’ என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.
சென்னை மாநகர காவல்துறையின் இந்த பதிவிற்கு பெரும்பாலனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். காவல்துறையின் பதிவு தனிப்பட்ட ஒருவரின் உணவு விவகாரங்களின் அத்துமீறும் செயல் என்று விமர்சிக்கப்படுகிறது.வடமாநிலங்களில் மாட்டு இறைச்சி தொடர்பாக நடக்கும் கும்பல் படுகொலைகள் போல் தமிழ்நாட்டில் நடக்கவில்லை ஆனால் காவல்துறை மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அத்தகைய நிகழ்வை நோக்கி நகர்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.தமிழ்நாட்டில் மாட்டுக்கறிக்குத் தடை எதுவும் இல்லாத நிலையில், சென்னை போலீசார் எப்படி இப்படி சம்பந்தமே இல்லாமல் தானாக முன்வந்து பதில் கூறலாம் எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.
சென்னை மாநகர காவல்துறை சர்ச்சைக்குரிய அந்த பதிவை நீக்கியது .இது குறித்து விளக்கமளித்துள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “இது தவறுதலாக நடந்தது. இது தொடர்பாக சென்னை காவல் துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, திமுக-வைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “அந்தப் பதிவில் என்ன தப்பு… என்ன பதிவிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்று எதன் அடிப்படையில் இந்த தேவையற்ற அறிவுரை. கொடுத்த நூற்றுக்கணக்கான abusive/பொய்ப் பதிவுகளுக்கு எந்த நடவடிக்கையும் இல்லை” என்று பதிவுசெய்திருந்தார்.
இதற்கு முன்னர் ஆம்பூரில் நடைபெற்ற பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி சேர்க்கப்படாததால் சர்ச்சையானது.அதன் பின்னர் பிரியாணி திருவிழா நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.