செய்திகள்உலகம்பிரித்தானியா

பதவி விலகும் போரிஸ் ஜான்சன் – அடுத்த பிரிட்டன் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தேர்வாக வாய்ப்பு

பிரிட்டனில் அமைச்சர்கள் 40-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, இதற்கு முன் இல்லாத வகையில் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியதால், பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்கிறார். கன்சர்வேட்டிவ் (பழமைவாத) கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகும் அவர், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பொறுப்புகளை கவனிப்பார்.

பிரிட்டனில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவிக்கு வந்தார். கடந்த2019-ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியை பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்தவர். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரக்சிட் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்தார். இதனால் கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

எம்.பி.க்கள், அமைச்சர்கள் அதிருப்தி

ஆனால் அதன்பின் பிரிட்டன் பிரதமரின் செயல்பாடுகள், சொந்த கட்சி எம்.பி.க்களுக்கே பிடிக்கவில்லை. அரசின் கொள்கைகள் நிலையானதாக இல்லை. இதனால் பணவீக்கம், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டது. பிரிட்டன் அரசு நிர்வாகம் மீது பல முறைகேடு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்த அவரது நம்பிக்கைக்குரிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலர், அவரிடம் பதவி விலகுவதுதான் கட்சிக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது என நேரடியாகவே தெரிவித்தனர். இதை முதலில் கூறிய அமைச்சர் மிக்கேல் கோவை, பிரதமர் போரிஸ் ஜான்சன் நீக்கினார். இதையடுத்து அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

40-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தொடர் ராஜினாமா செய்ததால், பதவி விலக முதலில் மறுத்து வந்த பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்டார். இதற்கான அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டு உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

பணியை கைவிடுவது வருத்தம் அளிக்கிறது

புதிய பிரதமர் வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சியினர் விரும்புகின்றனர். அதனால் புதிய பிரதமர் தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் அடுத்த வாரம் அறிவிக்கப்படும். பிரக்சிட் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்தது, கரோனா பெருந்தொற்று காலத்தில் நாட்டை வழிநடத்தியது, ரஷ்யா-உக்ரைன் போர் சமயத்தில் மேற்கத்திய நாடுகளை வழிநடத்தியது போன்றவை உட்பட எனது சாதனைகளை எண்ணி நான் பெருமைப்படுகிறேன். பிரிட்டன் தொடர்ந்து முன்னேற வேண்டும். பிரதமர் பணியை கைவிடுவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. எனக்கு உறுதுணையாக இருந்த என் மனைவி கேரி, எனது குழந்தைகள், பாதுகாப்பு படையினர், பிரதமர் இல்ல ஊழியர்களுக்கு நன்றி. இவ்வாறு போரிஸ் ஜான்சன் கூறினார்.

பிரதமர் போட்டியில் ரிஷி சுனக்

பிரிட்டனின் அடுத்த பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ் அல்லது நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. இதில் ரிஷி சுனக் (42) இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது ராஜினாமா, பல அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யத் தூண்டியது. பிரிட்டனின் அடுத்த பிரதமர் பதவிக்கான போட்டியில் இவரும் இடம்பெறுவார் என நம்பப்படுகிறது. அவ்வாறு நடத்தால், பிரிட்டன் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக ரிஷி சுனக் இருப்பார்.

கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது முழு அமைச்சரவையை ஏற்படுத்தியபோது, ரிஷி சுனக்கை நிதியமைச்சராக நியமித்தார். கரோனா தொற்று நேரத்தில் இவர் தொழில் துறையினருக்கும், தொழிலாளர்களுக்கும் ஏராளமான சலுகைகளை அறிவித்ததால், மக்களிடம் பிரபலம் அடைந் தார்.

‘டிசி’ என செல்லமாக அழைக்கப்படும் ரிஷி சுனக்கின் தாத்தா, பாட்டி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயண மூர்த்தியின் மகள் அக்சதா மூர்த்திதான், ரிஷி சுனக்கின் மனைவி. இருவரும் கலிபோர்னியாவில் படித்தவர்கள்.

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button