செய்திகள்இந்தியா

அரசியலமைப்பு குறித்து சர்ச்சை கருத்து – கேரள கலாச்சாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா

அரசியலமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த கேரள கலாச்சாரம், மீன்வளம் மற்றும் திரைப்படத்துறை அமைச்சர் சாஜி செரியன் ராஜினாமா செய்துள்ளார். சர்ச்சை கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை பத்தனம்திட்டாவின் மல்லப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சாஜி செரியன், “இந்தியாவில் அழகான அரசியலமைப்பு உள்ளது என்று நாம் அனைவரும் கூறுகிறோம். ஆனால் நான் அதனை மக்கள் கொள்ளையடிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது என்றே கூறுவேன். அரசியல் சாசனம், ஆங்கிலேயர்களால் சொல்லப்பட்டு இந்தியர்களால் எழுதப்பட்டது. இந்தியாவைக் கொள்ளையடிக்க அது அனுமதிக்கிறது. மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகம் என்ற வார்த்தைகள் பெயருக்காக எங்கோ ஒரு மூலையில் எழுதப்பட்டுள்ளன” என்று பேசினார்.

இந்தக் கருத்து பல்வேறு எதிர்ப்பினைகளை பெற்றது. கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன், “சாஜி செரியன் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை படித்தாரா? அரசியல் சட்டத்தின் தூய்மையும் மகத்துவமும் அவருக்குத் தெரியுமா என்பது தெரியவில்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்திருந்தார். மேலும், இந்தியாவின் இருப்பை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைச்சரின் பேச்சுக்கள் இருப்பதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் போராட்டங்களை அறிவித்தது.

எதிர்ப்பை அடுத்து அமைச்சரின் பேச்சுத் தொடர்பான வீடியோவை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கேட்டுள்ளதாகவும், அவரின் பேச்சு அரசியலமைப்புக்கு முரணானது என கண்டறியப்பட்டால், குடியரசுத் தலைவரின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. தொடர்ந்து சாஜி செரியனை கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்தார். இந்தச் சந்திப்பை தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் செரியன்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button