நுபர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர் என்று முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் 117 பேர் தெரிவித்துள்ளனர்.
பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, இறைதூதர் முகமது நபி குறித்து கூறிய கருத்து சர்வதேச அளவில் விவாதப் பொருளாகி உள்ளது. இதையடுத்து, பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
எனினும் நுபுர் சர்மாவுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவிப்போர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், பார்திவாலா அமர்வு கடந்த 1-ம் தேதி விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “நுபுர் சர்மா தனது பொறுப்பற்ற பேச்சால் நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டார். அவர் தொலைக்காட்சியில் தோன்றி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றனர்.
இதுகுறித்து 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 77 ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள், 25 ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை அதிகாரிகள் உட்பட 117 முன்னாள் அதிகாரிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஜனநாயக நாட்டில் அரசின் அனைத்து துறைகளும் அரசமைப்பு சாசனத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். நுபுர் சர்மா வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் லட்சுமணன் கோட்டை தாண்டிவிட்டனர்.
நீதிபதிகளின் கருத்து இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உத்தரவில் இடம்பெறாத அம்சங்கள் செய்தி சேனல்களில் மிகைப்படுத்தி வெளியிடப்படுகின்றன. இது நீதித் துறை தர்மத்துக்கு ஏற்புடையதாக இல்லை. நாட்டில் தற்போது நடக்கும் சம்பவங்களுக்கு நுபுர் சர்மா மட்டுமே காரணம் என்று கூறுவது அறிவுப்பூர்மாக இல்லை.
நீதிபதிகளின் கருத்துகள் இந்திய நீதித் துறையில் வடுவை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்துக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும்கூட அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. முறையான விசாரணை நடத்தப்படாமல் நுபுர் சர்மாவை குற்றவாளியாக அறிவிப்பது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.