செய்திகள்தமிழ்நாடு

பாலியல் குற்றவாளிகளை உடனே தண்டிக்க கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள்: அன்புமணி

பாலியல் வன்கொடுமைக்கு மறுத்ததால் 7 வயது சிறுமி தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளளது. குற்றவாளிகளை விரைந்து தண்டிக்க கூடுதல் போக்சோ நீதிமன்றங்கள் தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளதாவது: ”தேனி மாவட்டம் எரசக்கநாயனூரில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஒருவன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை தீயிட்டு எரித்துள்ளான். பாதிக்கப்பட்ட சிறுமி 65% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள். இக்கொடிய நிகழ்வு கண்டிக்கத்தக்கது.

சிறுமியை சிதைக்க முயன்ற கொடியவன் கஞ்சா போதையில் இருந்துள்ளான். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. பாலியல் குற்றங்களுக்கான தண்டனை குறித்த அச்சம் இல்லாதது தான் குற்றங்கள் பெருகுவதற்கு காரணம் ஆகும்.

பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையான தண்டனை உடனடியாக வழங்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் கட்டாயம். ஆனால், தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மட்டுமே போக்சோ நீதிமன்றங்கள் உள்ளன. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.

தமிழகத்தில் போக்சோ சட்டப்படி தொடரப்பட்ட 14,380 வழக்குகளில் 7187 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களைத் தொடங்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைக் காக்க வேண்டும்.” இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button