
சென்னையில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், தினசரி பரிசோதனை 5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், மீண்டும் கரோனா கேர் சென்டர்கள் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் சென்னையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ரிப்பன் மாளிகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “கடந்த சில தினங்களாக கரோனா தொற்று 10க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று 332 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைக்கு கூடுதலாக தொற்று எண்ணிக்கை 5 மாவட்டங்களில் இரண்டு இலக்கத்தில் தொற்று எண்ணிக்கை பதிவாகி உள்ளது. தமிழ்நாடு முழுதும் வீடுகளில் மற்றும் மருத்துவமனையில் 1622 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் மிதமான தொற்று பாதிப்பில் உள்ளனர். குறிப்பாக சென்னையில் 59 பேர் தொற்று மற்றும் இணை நோய் பாதிப்புகள் உள்ளவர்கள்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கான இணை சுகாதார அதிகாரிகள் உடன் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். சென்னை முழுவதும் தற்காலிகமாக 3418 மாநகராட்சி பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் 46 தெருக்களில் 3க்கும் மேற்பட்ட நபர்கள் மற்றும் 6 தெருக்களில் 5க்கும் மேற்பட்ட நபர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இவர்கள் தங்கி இருக்கும் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது. கூடுதலாக பரவல் இருப்பதனால் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் 2500 ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் 5000 பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் 84.85 சதவிகிதமாக இருந்தாலும், சென்னை மாநகராட்சி 85.85 சதவிகிதமாக உயர்ந்து முன்னிலை வகிக்கிறது. பூஸ்டர் டோஸ் போட்டு கொண்டவர்கள் 40 சதவிகிதம் பேர். 18 முதல் 50 வயது உடையவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்துவதில் சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை படுக்கை வசதிகள் அதிகமாக உள்ளது. பராமரிப்பு மற்றும் உடனடி சிகிச்சைக்கு மருத்துவமனைகள் தயாராக உள்ளது. படுக்கை வசதிக்காக கேர் மையங்கள் அமைப்பு புதிதாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடுகளில் தனிமை படுத்திக்கொள்ள இயலாதவர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
முகக்கவசம் மற்றும் தனி மனித இடைவெளி குறித்து நான் எந்தவிதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. இன்னும் அந்த விதிமுறைகள் நடைமுறையில் தான் உள்ளன. முகக்கவசம் அணிவது கட்டாயம் தான். கடந்த வாரம் நடைபெற்ற முதல்வர் உடனான கூட்டத்தில் முதல்வரே முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவுறுத்தி உள்ளார். ஆக்சிஜன் பொறுத்த வரை எந்த அச்சமும் இல்லை. நம்மிடம் போதுமான அனைத்தும் இருக்கிறது. பள்ளிகளைப் பொறுத்தவரை மாணவ மாணவிகள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்கபட வேண்டும்” இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.