செய்திகள்தமிழ்நாடு

“மதுரை ஆதினத்தை சிக்க வைத்துவிடுவோம் என திமுக மிரட்டுகிறதா?” – வானதி சீனிவாசன் காட்டம்

“மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்து இந்து வெறுப்பு கொண்ட திமுகவின் உண்மை முகத்தை ‘முரசொலி’ வெளிப்படுத்தியுள்ளது” என்று பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று (ஜூன் 15) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில், கட்டுரை என்ற பெயரில் அநாகரிக வார்த்தைகளால் மதுரை ஆதீனத்துக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோயில்கள், வழிபாட்டு முறைகள், மடங்கள், சம்பிரதாயங்களில் மட்டும் தலையிடுவதைதான், மதுரை ஆதீனம் விமர்சித்திருந்தார்.

மதச்சார்பற்ற அரசு, இந்து மத கோயில்களை மட்டும் தங்கள் பிடியில் வைத்திருப்பது, மதச்சார்பின்மைக்கே எதிரானது என்பதால்தான், இந்து சமய அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என்று அவர் பேசினார். இதில் என்ன தவறு இருக்கிறது? நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது கருத்தை தெரிவிக்க, நமது அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. தமிழையும், சைவத்தையும் பல நூற்றாண்டுகளாக வளர்த்து வரும் மதுரை ஆதீனத்துக்கு திமுக மிரட்டல் விடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

‘காஞ்சி மடத்தில், சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு நடந்தது நினைவிருக்கும் என கருதுகிறோம்’ என, முரசொலியில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் திமுக என்ன சொல்ல வருகிறது? அதுபோல, மதுரை ஆதினத்தையும் சிக்க வைத்துவிடுவோம் என மிரட்டுகிறார்களா?

சட்டத்துக்கு புறம்பாகவோ, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ, மதுரை ஆதீனம் எதுவும் பேசவில்லை. எனவே, இந்து மத துறவிகளை அவமானப்படுத்துவது, மிரட்டல் விடுப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு, ஆக்கப்பூர்வமாக, அனைத்து மதத்தினருக்கும் பொதுவான அரசாக, திமுக அரசு செயல்பட வேண்டும்.

மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்வதில்லை. இந்துக்களுக்கு வாழ்த்துகூட சொல்ல மனமில்லாத, இந்து வெறுப்பு கொண்ட திமுகவின் உண்மை முகத்தை ‘முரசொலி’ வெளிப்படுத்தியிருக்கிறது. மதுரை ஆதினத்துக்கு விடப்பட்ட இந்த மிரட்டல், தனிப்பட்ட ஆதீனத்துக்கு விடுக்கப்பட்டதல்ல,

இந்துக்களுக்காக, இந்துக்களின் வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுக்கும் போராடும் அனைவருக்கும் எதிரான மிரட்டலாகவே பார்க்க வேண்டியுள்ளது. மதுரை ஆதீனம் மட்டுமல்ல, இந்துகளுக்காக போராடும் யாரும் இந்த மிரட்டலுக்கு எல்லாம் அஞ்ச மாட்டார்கள். இதனை உணர்ந்து, மிரட்டல் போக்கை கைவிட்டு, இந்து நம்பிக்கைகளில் மட்டும் தலையிடுவதை, திமுக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button